தில்லை க. குமரன்
இந்த வருடம், அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார், திரு தில்லை க. குமரன். இவர், வளைகுடா தமிழ் மன்றத்தின் தலைவராக உள்ளவர். அனைத்து அமெரிக்கத் தமிழ் சங்கங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஒருங்கிணைக்கச் செய்யும் இந்த தலைமைப் பொறுப்பேற்றதற்கு, தென்றல் சார்பில் நம்முடைய பாராட்டுக்களையும், மனமார்ந்த மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சைத் தரணியில் பிறந்து அமெரிக்க மண்ணில் பதினைந்து வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும், இவர் தமிழ் இலக்கிய, தமிழர் சரித்திர புத்தகங்களால் சிறுவயதில் ஈர்க்கப்பட்டார். தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு அதன் வெற்றிக்காக பாடுபடு வதில் நாட்டம் கொண்டார். பெரியாரின் புத்தகங்கள், எழுத்துக்களைப் படித்து, தன்னுடைய இருபத்தி இரண்டாவது வயதில் ஹோசூரில் பெரியார் படிப்பகத்தின் மூலம் தமிழ் சான்றோர்களை உள்ளூர் பள்ளிகளில் உரையாற்ற உழைத்தார். எந்த ஊரில் வாழ்ந்தாலும், அங்குள்ள தமிழ் சங்கங்களில் பொறுப்பேற்று, சமூக நலப் பணிகளிலும், மொழிப்பணிகளிலும் ஈடுபட்டவர்.

தமிழ் மீது உள்ள பற்று எப்படி, தமிழ் மொழி, மக்கள் மற்றும் தமிழ் பண்பாட்டிற்க்காக சேவை செய்யும் பாதையில் ஒருவரை வெற்றிகரமாக பயணிக்கச் செய்யும் என்பதற்கு தில்லை க. குமரன் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் மீது நாட்டத்தில் அவர், 1995-1996-ல் பென்சில்வேனியாவில் உள்ள ஹாரிஸ்பர்க் பகுதித் தமிழ் சங்கத்தின் தலைவாராகத் தன் அமெரிக்கத் தமிழ் பணியில், முதல் காலடி எடுத்து வைத்தார். இந்நாளில் கலிபோர்னியா தமிழ்க்கழகம் என்ற பெயரில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ்ப் பணியைச் செய்து வரும் பள்ளியை 1998ம் வருடம், திருமதி வெற்றிச்செல்வியுடன் சேர்ந்து துவக்கினார். தொடர்ந்து அவர் அப்பள்ளியின் வளர்ச்சிக்கு செய்துவரும் பங்கு பெரியது. 2002ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் துணைத்தலைவர் பொறுப் பேற்றார். 2002ம் ஆண்டு மிகச் சிறப்பாக நடை பெற்று உலகத் தமிழர்களை ஈர்த்த தமிழ் இணைய மாநாட்டின் விழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினராக இருந்தார். 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தமிழ் நாடு அறக்கட்டளையின் இயக்குனராகவும், உலகத் தமிழ் அமைப்பின் இயக்குனராகவும் பொறுப்பில் இருந்தவர். அதே வருடங்களில், தாய்த் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான தமிழ் நாடு அறக்கட்டளையின் இயக்குனராக வும் பணியாற்றியவர். தற்சமயம், சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் தலைவராக உள்ளார்.

தென்றலின் பாராட்டை ஏற்றுக் கொண்ட அவர், “கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி நடை பெற்ற தமிழர் திருவிழாவில், பேரவையின் செயற்குழு சந்திப்பு நடை பெற்றது. அப்போது, என்னைத் தலைவராக, ஒரு மனதாக தேர்ந்தெடுத்தார்கள். இதுவரை நான்கு உறுப்பினர்களை மட்டும் கொண்ட செயற் குழுவிற்க்கு, இனி ஒன்பது உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முடிவும் மேற்கொள்ளப் பட்டது.”, என்று தெரிவித்தார்.

இப்பேரவை, இல்லினாய்சில் உள்ள, வ.ச.பாபு என்பவரின் இல்லத்தை முகவரி யாகக் கொண்டு தற்போது இயங்குகிறது. இதன் செயற்குழுவில் உள்ள அனைவரும், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டு பணியாற்றுகிறோம். இப்போது அமெரிக்காவில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்களிலிருந்து ஒன்பது தமிழ் சங்கங்கத் தலைவர்கள் செயற்குழுவில் உறுப்பினராக்கப் பட்டுள்ளனர். அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் அடுத்த இரண்டு வருட தலைவராக பணியாற்ற உள்ள இவர், "ஆண்டு விழா நடத்தும் பேரவையாக உள்ள இந்த அமைப்பிற்கு, ஒரு நீண்ட கால திட்டத்தை ஏற்படுத்துவது, மேலும். ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைப்பது, பெர்க்கலி பல்கலை கழத்தில் உள்ள தமிழ் நாற்காலியைப் போல், மற்ற பல்கலை கழகத்தில் தமிழ் நாற்காலிகள் ஆரம்பிப்பது போன்ற முயற்சிகள்" தமது முக்கிய குறிக்கோள்களாக அமையும் என்றார்.

இந்த வேலைகளின், தேவைகளோ நேரம், பொருள் மற்றும் சமூகப் பொறுப்புகள். அதை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்க்கு, “நேரம்தான் இவற்றுள் பெரிய சவால். என்னுடைய மனைவி நிர்மலா, மற்றும் மக்கள் அறிவன், யாழினியின் ஒத்துழைப் புடன் முழு நேரப்பணி, சமூகக் கடமை மற்றும் சங்கப் பணிகளை செவ்வனே செய்ய முடியும் என முழு நம்பிக்கையுள்ளது”, என்றார்..

அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுடன் தொடர்புடையது. அத்தகைய சக்தி வாய்ந்த பதவியிலிருந்து, தமிழ் சமூகம் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளை சந்திக்க உள்ளீர்கள் என்ற கேள்விக்கு, “தமிழ் மக்கள் நல்வாழ்விற்காக பணி செய்வது, எங்களின் நோக்கம். தமிழக முதல்வரைச் சந்தித்து, இலங்கை வாழ் தமிழரின் நல்வாழ்க்கைக்காக, எங்களது ஆதரவைத் தெரிவித்து அவரது ஆதரவையும், இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்ப்பையும் பெற்றுத்தருமாறு கோரும் திட்டமும் உள்ளது. தமிழ் பண் பாட்டை இங்குள்ள வளரும் சந்ததியினர் அறியும் வகையில், தமிழ் நாட்டிலிருந்து, சான்றோர்களையும், நாட்டுப்புறக் கலைஞர் களையும், வரவேற்கப் போகிறோம். தமிழர் களை தொழிலதிபர்களாக்க பயிற்சியளிப் பதற்கும் திட்டம் உள்ளது.” என்றார்.

தமிழ் ஒரு தொன்மையான மொழி, மற்றும் கலாசாரத்தயுடையது. தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளை, தமிழ் பெயரிட்டு அழைக்க வேண்டும், தமிழ் பயிற்றுவிக்க வேண்டும், தமிழ் சங்களில் உறுப்பினராக வேண்டும், மற்றும் சங்கங்களில் சேவை புரியவும் முன் வர வேண்டும் என்று, பேரவையின் தலைவராக கேட்டுக் கொள்வதாகக் கூறினார். மற்ற தமிழ் சங்கத்தலைவர்களை, பேரவையில் இணைய வேண்டுமென்றும், தமிழ் பள்ளிகள் ஒருங்கிணைப்பிலும், தமிழ் சான்றோர்களை அமெரிக்கா கொணர்வதில் இணைந்து செயல்பட வேண்டுமாரும் கோரினார்.

"வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும் தமிழர் விழாவில் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். 2007ம் வருடத்திற்கான இவ்விழா, ஜூலை மாதம் 7, 8 மற்றும் 9ம் தேதிகளில், நடை பெறௌள்ளது. Progress Energy Center for the Performing Arts, Raleigh, North Carolina-வில் நடக்கப் போகும் இவ்விழாவிற்க்கு, நாம் எல்லோரும் ஆதரவளித்து, பெறுமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்." என்று கூறினார்.

தென்றலின் சார்பில் மீண்டும் வாழ்துக் களைத் தெரிவித்துக் கொண்டு, அமெரிக்கத் தமிழ்ச்சங்களின் பேரவையில் அமெரிக்க தமிழர்களுக்காக தில்லை குமரனின் சாதனைகள் தொடரப் போவதை எதிர் நோக்குவோம்.

சிவகுமார் நடராஜன்

© TamilOnline.com