வெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப அதிர்ச்சி
கோடைக் காலம் வருமா என்று காத்திருந்த நாட்கள் போய், வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க மனம் நிழலைத் தேடும். இந்த கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக நம் உடலில் ஏற்படும் சில விளைவுகளைப் பற்றி இப்போது காணலாம்.

வெப்ப அயர்ச்சி (Heat Exhaustion)

அறிகுறிகள்:

அதிகமாக தாகம் எடுத்தல்
அதிகமாக வியர்வை பெருகுதல்
சோர்ந்து போதல்
தலைவலி
நாடித்துடிப்பு அதிகரித்தல்
வெப்ப வலி ஏற்படுதல்
குமட்டல், வாந்தி
உடல் சூடு அதிகமாதல் (>100 degree F)
தலை சுற்றல், மயக்கம்

தீர்வு முறைகள்

உடனடியாக நிழலான இடத்திற்குச் செல்ல வேண்டும். குளிர்ந்த காற்று மேலே படும் படியான இடம் உகந்தது. அதிகமாகத் தண்ணீர் மற்றும் குளிர் பானங்கள் அருந்த வேண்டும். நல்ல முறையில் ஓய்வு எடுக்க வேண்டும். இதற்குப் பின்னரும் உடல்நிலை மோசமானால், மருத்துவரை நாட வேண்டும்.

தடுப்பு முறை

அதிகமான வெம்மையான நேரத்தில் வேலை செய்பவரையோ, விளையாடு பவரையோ இந்த வகை அயர்ச்சி தாக்கலாம். தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வருமேயானால், அதிகமாக வெப்பம் இருக்கும் நேரத்தில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தோட்ட வேலை அல்லது வெளிப்புற வேலைகளை வெயில் தாழ்ந்த பிறகு செய்வது உசிதம். அதேபோல் சிறுவர் சிறுமியரும் வெயில் கொளுத்தும் பொழுது வெளியில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறிச் செயல்பட வேண்டி இருந்தால், அவ்வப்போது இடைவெளி விட்டு, நிழலான, குளிர்ந்த அறையில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

நல்ல உப்புச் சத்து மிகுந்த தண்ணீர் பானங்களை அருந்த வேண்டும். Gatorade போன்ற பானங்கள் அருந்துவது நல்லது. குறிப்பாக குழந்தைகள் பலர் இந்தக் கோடையில் முகாம்களுக்குச் செல்வதால், அவர்களுக்குக் குளிர் பானங்கள் கொடுக்கும் போது இந்த வகை பானங்களை கொடுக்க வேண்டும். வெளியில் விளையாடுவது முகாமின் அட்டவணையில் இருக்குமே யானால், நம் சிறுவர் சிறுமியர்களுக்கு, தண்ணீர் மற்றும் Gatorade பானங்கள் அருந்துவதின் அவசியத்தை போதிக்க வேண்டும்.

வெப்ப அதிர்ச்சி (Heat Stroke)

உடல் வெப்பத்தினால் தீவிரமாக பாதிக்கப்படுவதை இது குறிக்கிறது. இது அதி வேகமாக உடலின் பல உறுப்புகளைச் செயலிழக்கச் செய்ய வல்லது. வெப்பத்தைச் சீராக வைக்கும் தன்மையை உடல் இழந்து விடுவதால் இந்த அதிர்ச்சி ஏற்படுகிறது. உடனடியாக மருத்துவமனையை நாடினால் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.

அறிகுறிகள்:

உடலின் சூடு அதி வேகமாக அதிகரித்தல். உடலின் வெப்பம் 105 பாகைக்கு மேலாக இருக்கலாம்.
தோல் சிவப்பாகி, வியர்வை இல்லாமல், வறண்டு போதல்
தீராத தலைவலி
நாடி வேகமாக, அழுத்தமாக துடித்தல்
குமட்டல், வாந்தி
மனக் குழப்பம் ஏற்பட்டு, செயல்பாடு தடைப்படுதல்
மயக்கம் ஏற்படுதல்
இரத்த அழுத்தம் முதலில் அதிகமாகிப் பின்னர் குறைந்து விடும்
சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கலாம்.

தீர்வு முறைகள்

உடனடியாக 911-ஐ அழைத்து, மருத்துவ மனையை நாட வேண்டும். பலவித முறைகளில் உடலின் சூட்டைக் குறைத்து செயல்பாட்டை மீட்க மருத்துவர்கள் முயற்சிப்பர். பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்க நேரிடலாம். மருத்துவமனைக்குச் செல்ல நேரமானாலோ, அல்லது 911 வருவதற்குக் காத்திருக்க நேரிட்டாலோ, அந்த நேரத்தில், நோயாளியை, குளிர்ந்த நிழலான பகுதிக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். மின்விசிறி அல்லது காகிதம் மூலம் காற்று வீச வேண்டும். தோட்டக் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம். ஈரமான துணியில் சுற்றலாம். விரைந்து உடலின் சூட்டைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். நினைவு தப்பாமல் இருந்தால், குடிக்கக் குளிர் பானங்கள் கொடுக்கலாம். இதையும் மீறி நேரம் அதிகமாக ஆக, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

தடுப்பு முறைகள்

இது தாக்குவதையும் முயற்சி எடுத்தால் தவிர்க்க முடியும். முன்பு சொன்னது போல், வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில் வேலை அல்லது விளையாட்டை வீட்டிலேயே செய்வது நல்லது. வெப்ப காலத்தில் வெளி வேலை அதிகமானால், அவ்வப்போது நிழலில் ஓய்வு எடுத்து, குளிர் பானங்களை அருந்த வேண்டும். வியர்வை பெருகும் போதெல்லாம், தண்ணீர் அருந்த வேண்டும். வியர்வை வழியாக உப்பும் தண்ணீரும் வெளியேறு வதால் ஏற்படும் நீர் இழப்பை, குளிர் பானங்கள் அருந்துவதால் ஈடுசெய்யலாம். காபி, தேநீர், மது பானங்கள் அருந்துவதால் இந்த நீரிழப்பு அதிகமாகும்.

வயது முதிர்ந்தோர், சிறு குழந்தைகளை வெப்ப அயர்ச்சி மற்றும் அதிர்ச்சி அதிகமாகத் தாக்குகிறது. உடலின் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும் சக்தி குறைவாக இருப்பதால் இவர்களது உடல் எளிதில் பாதிக்கப் படுகிறது. மேலும், சில மருந்துகள் உட் கொள்பவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்படலாம். குறிப்பாக, இரத்த அழுத்த மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் (allergy), சளி மருந்துகள் (Antihistaminics), மன அழுத்த மருந்துகள் (Antideprrasants) போன்றவை உட்கொள்பவர் களுக்கு வெப்ப அயர்ச்சி மற்றும் அதிர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெய்யில் காலத்துக்கேற்ற பருத்தி ஆடை களை அணிவது நல்லது. எப்போதும் கையில் தண்ணீ£ர் வைத்திருப்பது நல்லது.

வெப்ப வலி (Heat cramps)

வெப்பம் அதிகம் இருக்கும்போது உடற் பயிற்சி அல்லது தீவிர வேலை செய்பவர் களுக்குத் தசைநார்களில் சுளுக்கு ஏற்படலாம். இது தீவிரமான வயிற்று வலி, கால் வலியை ஏற்படுத்தலாம். வெயிலில் நீண்ட நேரம் விளையாடிய பின்னர் குழந்தைகளுக்கும் இந்த வகை வலி ஏற்படலாம். இதற்கு ஓய்வும், குளிர் பானங்களுமே தீர்வாக அமையும். மீண்டும் வெயிலில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com