Tour de France மிதிவண்டிப் போட்டி
இந்த வருட Tour de France மிதிவண்டிப் போட்டியில் (bicycle race) மீண்டும் ஒரு அமெரிக்கர் வெற்றி பெற்றிருக்கிறார். கலிபோர்னியாவில் வாழும் பிளாயிட் லாண்டிஸ் (Floyd Landis), எட்டாவது வருடமாக தொடர்ந்து அமெரிக்கா இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள உதவியிருக்கிறார். கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ந்து லான்ஸ் ஆம்ஸ்டிராங்க் (Lance Armstrong) இந்தப் போட்டியை வென்றார். இவர்களுக்கு முன்னால் இந்தப் போட்டியை வென்ற அமெரிக்கர் கிரெக் லெமாண்ட் (Greg LeMond). இவர் மூன்று முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தப் போட்டித் தொலைவு 2,272 மைல்கள். போட்டியாளர்கள் கிட்டத்தட்ட மணிக்கு 25 மைல் வேகத்தில் வண்டியை ஓட்டிச் செல்கிறார்கள். இது தினமும் மராத்தான் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று வாரங்களுக்குப் பங்கு பெறுவதற்குச் சமமானது என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை விவரிக்கிறது. பைரனீஸ் (Pyrenees), மற்றும் ஆல்ப்ஸ் (Alps) மலைகளில் ஏறிக்கடப்பது மூன்று எவரஸ்ட் சிகரங்களை ஏறிக்கடப்பதற்குச் சமனானது என்றும் நியூ யார்க் டைம்ஸ் வர்ணிக்கிறது.

இந்த வருடப் போட்டி பல சர்ச்சைகளுடன் துவங்கியது. போட்டியின் ஆரம்பத்தில் இந்த வருடம் வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்த்த ஜான் உல்ரிச் (Jan Ullrich), இவான் பாஸ்ஸோ (Ivan Basso) உள்பட பல போட்டியாளர்கள் திறமையை ஊக்குவிக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு போட்டியிலிருந்து நீக்கப் பட்டனர். லான்ஸ் ஆம்ஸ்டிராங்க் இல்லாத தால் அமெரிக்கா வெற்றிபெற வாய்ப்பில்லை என்று பல ரசிகர்கள் நினைத்திருக்க அதைப் பொய்யாக்கினார் பிளாய்ட். இவர் 2003-ல் கீழே விழுந்து அடிபட்டதில் ஏற்பட்ட இடுப்பு வலியைச் சரி செய்துகொள்ள இந்த வருட இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். இந்த வலியோடு இவர் இந்தப் போட்டியை வென்றது ஒரு பெரும் சாதனை.

சேசி

© TamilOnline.com