சேவையே தற்போதைய தேவை' என்ற தாரக மந்திரத்துடன் சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது 'உதவும் உள்ளங்கள்' என்னும் அமைப்பு. குழந்தை களுக்கு ஒன்று, வயது முதிர்ந்தோர்களுக்கு ஒன்று என இரண்டு ஏதிலி இல்லங்களை நடத்தி வரும் இந்த அமைப்பைத் தோற்று வித்தவர்கள் பணி ஓய்வு பெற்ற ஒன்பது பேர் என்பது குறிப்பிடத்தக்கது. ரமேஷ், தேவதாஸ், சக்ரவர்த்தி, சுந்தரேசன் போன்ற ஒன்பது பேர்கள் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு, பணி ஓய்வு பெற்றவுடன் ஏதாவது சமூகத்துக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக் கிறது. அப்படி 2000-வது ஆண்டில் மலர்ந்ததுதான் உதவும் உள்ளங்கள். நான்கு குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இல்லம் படிப்படியாக வளர்ந்து இன்று கிட்டத்தட்ட 80 குழந்தைகளைக் கொண்ட சரணாலயமாய் வளர்ந்து நிற்கிறது. இது ஆதரவற்ற முதியோர்களுக்கும் புகலிடமாக இருக்கிறது.
60 குழந்தைகளுக்கான இல்லம் சென்னை ஆதம்பாக்கத்திலும், 32 முதியோர் மற்றும் 20 வளர்ந்த குழந்தைகளுக்கான இல்லம் சென்னையை அடுத்த மறைமலை நகரிலும் செயல்பட்டு வருகிறது. கப்பற்படை காப்டன் ராஜூ சின்ஹா ஆதம்பாக்கத்தில் தனக்குச் சொந்தமான இடத்தைக் குழந்தைகள் இல்லத்திற்காக வழங்கியுள்ளார். அங்குதான் 60 குழந்தைகளும் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். குழந்தைகளுக்கு உணவு, உடை, மருத்துவம், கல்வி என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தற்போது இடவசதி போதாததால் புதிதாகக் கட்டடம் எழுப்பப் பட்டு, நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே நிற்கிறது.
நன்கு வளர்ந்த குழந்தைகள் இங்கு தங்க இடம் இல்லாததால், மறைமலை நகர் முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். உதவும் உள்ளங்கள் அமைப்புக்காக இயக்குநர் பாஸ்கர்ராஜ் சிறப்பு 'அகட விகடம்' நிகழ்ச்சி ஒன்றை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் பக்தர் கிருஷ்ணமூர்த்தி, தனக்குச் சொந்தமாக மறைமலை நகரில் இருந்த நிலத்தை இலவசமாக வழங்கியிருக்கிறார். லண்டனில் உள்ள டாக்டர் சங்கீதா, பிரேமா ராம் போன்றவர்கள் நிதி திரட்டிக் கொடுக்க, அவர்களது உறவினரான அருணாசலம் என்ற பொறியாளர் மூலம் மறைமலை நகரில் கட்டடம் எழுப்பப்பெற்று, 2005 முதல் அங்கு முதியோருக்கான பிரிவு செயல்பட்டு வருகின்றது.
நிர்வாகிகளில் ஒருவரான டி.எஸ். பத்ம நாபன் 'சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இந்த இல்லம் நடைபெற்று வருகிறது. Child Line மற்றும் சில அரசு சாரா அமைப்புகள் மூலம் எங்களிடம் குழந்தைகள் வந்து சேருகின்றன. மிக மகிழ்ச்சியாகவும், நிம்மதியுடனும் அவர்கள் இங்கு இருக் கிறார்கள். ஆனால் நிதி மற்றும் இடவசதிக் குறைவுதான் பிரச்னையாக உள்ளது. புதிய கட்டட வேலை நிதிப் பற்றாக்குறையால் பாதியில் நிற்கிறது. மேலும் அதிகக் குழந்தைகளைச் சேர்த்துப் பராமரிக்கவும் அது தடையாக இருக்கிறது' என்கிறார்.
மேலும், 'முதியோர் இல்லம் மறைமலை நகரில் இருக்கிறது. பிரச்னை என்ன வென்றால் எங்களிடம் வாகன வசதி இல்லாததால் ஆதம்பாக்கத்திலிருந்து மறைமலை நகருக்கு பொருட்களைக் கொண்டு செல்ல வேன், கார் என அதிகச் செலவாகிறது. சொந்தமாக ஒரு ஆட்டோ வாவது இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம். சமயத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்க, சாமன்களைக் கொண்டு செல்ல அது பெரிதும் உதவும். எங்கள் உடனடித் தேவை அதுதான்' என்றும் கூறுகிறார்.
நடிகரும் இயக்குநருமான கிரேசி மோகன், பாப் பாடகி ஷாலினி, ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்ய நாராயணா எனப் பலரும் இந்த இல்லத்துக்கு வருகை புரிந்துள்ளனர். பொதுமக்கள் திருமணநாள், பிறந்த நாள், நினைவு நாள் முதலிய நாட்களில் ஒரு வேளை உணவுக்கோ, வருடம் முழுவதற்கும் ஒரு வேளை உணவுக்கோ நிதி உதவி செய்கின்றனர்.
முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் காய்கறித் தோட்டம் பராமரித்தல், அலுவலக உறைகள் செய்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல் என்று பயனுள்ள முறையில் செலவழிக் கின்றனர். குழந்தைகளுக்கும் சரி, முதியவர் களுக்கும் சரி மூன்று வேளை உணவு, பால் முதலியன வழங்கப்படுகின்றன. அமைப்பின் நிர்வாகிகள், பாதுகாவலர்கள், கவனிப் பாளர்கள் என அனைவருமே உள்ளன் போடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். 'பல சமயங்களில் எங்களுக்கு உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. பொறுப்பாளர்கள் தான் பிற சேவை நிறுவனங்களிடமும், சமூக சேவை அமைப்பு களிடமிருந்தும் தங்கள் சொந்தச் செலவி லிருந்தும் நிதி அளித்துச் சமாளிக்கிறார்கள். சேவை உள்ளம் கொண்டவர்கள் மாதம் தோறும் பால், அரிசி, மளிகைப் பொருட்கள், மருத்துவச் செலவுகள் என ஏதாவது ஒன்றிற்குப் பொறுப்பேற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்' என்று கூறும் பத்மநாபன், 'கணிணி இருந்தால் இல்லத்தின் கணக்கு வழக்குகளைப் பராமரிக்க உதவும். தங்கள் வீட்டில் பயன்படாமல் இருக்கும் நாற்காலி, மேசை, பீரோ, கட்டில், அலமாரி, துணிமணிகள் என எதுவாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்' என்கிறார்.
இங்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு இந்திய அரசின் வருமான வரி விலக்கு உண்டு. மேலும் FCRA எனப்படும் Foreign Contributors Regular Act-ன் படி வெளிநாட்டு நிதியை ஏற்கவும் அனுமதி பெற்றுள்ளது. தவிர, அமெரிக்காவிலேயே தன்னார்வத் தொண்டர்கள் முன்வந்து வரிவிலக்குப் பெற்ற அமைப்பை ஏற்படுத்தியும் நிதி திரட்டி உதவலாம்.
தனிப் பள்ளிக்கூடம் தொடங்கி இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்லாது சுற்றுப்புறத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி போதித்தல், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் நிரந்தர மருத்துவ வசதி, நூலகம், இரண்டு இல்லங் களுக்கும் தனித்தனி வாகனங்கள் எனப் பல்வேறு திட்டங்களைக் கைவசம் வைத்துள்ளனர். இவற்றுக்கு உங்கள் உதவி மிகவும் அவசியம்.
இணையதள முகவரி: www.helpingheartshome.org மின்னஞ்சல் முகவரி: udhavum2000@yahoo.com, helpingheartshome@yahoo.com.
தொடர்புக்கு: சுரேஷ், செயலாளர், 98409 89397 (சென்னை)
முகவரி: Udhavum Ullangal Illam No.9, West Karikalan II Street Adambakkam, Chennai - 600088 (Near St.Thomas Mount Rly.Stn) Tamil Nadu, India தொலைபேசி: 91 44 2232 1236, 91 44 2234 8338
அரவிந்த் |