சோலை சுந்தரபெருமாள்
தமிழ்ச் சிறுகதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புது வடிவோடும் வனப்போடும் வளர்ந்து வருகிறது. வாழ்வியல் அனுபவத்துக்கேற்பப் படைப்புக்கள் ஆழப் படுகின்றன. இந்தப் படைப்பாக்க வெளிப் பாட்டில் பல்வேறு படைப்பாளிகள் வந்தபடி உள்ளனர். கிராமப்புற மக்களின் உள்ளும் புறமுமான அசைவியக்கத்தின் நுண்ணோக்குப் பார்வைகள் விரிவு பெறுகின்றன. புதிய புதிய மனிதர்கள், அனுபவங்கள் சமூக எதார்த்த மாக முன்னிறுத்தப்படுகின்றன. சமூக முரண்பாடுகளின் பல்வேறு தன்மைகள், மனிதவதைபாடுகள் எழுத்தாக்கப்படுகின்றன. இத்தகைய எழுத்தாளர்களில் ஒருவர்தான் சோலை சுந்தரபெருமாள்.

சோலை சுந்தரபெருமாள் சிறுகதை, நாவல் போன்ற களங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். எண்பதுகளில் எழுதத் தொடங்கி இன்று ஒரு வித்தியாசமான படைப்பாளியாகப் பரிணமித்துள்ளார். 'ஒரு படைப்பு கலாபூர்வமாக வெற்றி பெற வேண்டுமானால் சமூக உணர்வுடன் மக்களின் வாழ்வியல் பண்பாடு கலாசாரக் கூறுகளில் உள்ள சிறிய நுகர்வைக் கூட நசுக்கி விடாமல் ஒளி-ஒலிப்பதிவு செய்துவிட வேண்டும். ஒளிப்பதிவினுள்ளே புறச் சூழலில் ஏற்படும் தொடர்பற்ற ஒலிகளும் கூட மாந்தர்களின் உணர்வுகளை திசைதிருப்பிப் புது வேகத்துக்கு உட்படுத்திவிடும் என நம்புகிறேன்' என சோலை கூறுகிறார். இந்தக் கூற்று மூலம் தனது படைப்பாக்க வெளியின் வெளிப்படைத்தன்மை எத்தகையது என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார். இதுவரை சோலையின் படைப்புக்கள் யாவும் இந்த உண்மையின் சமூக எதார்த்த தரிசனமாகவே உள்ளன. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

'என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உழைப்பாளி மனிதர்களின் ஏக்கங்களை, எதிர்பார்ப்புக்களை அவர்கள் போக்கிலேயே கலந்து நின்று படப்பிடிப்பை நடத்தியுள்ளேன்' என்கிறார். ஆக, தான் போகும் பாதை எது என்பதில் தெளிவாக இருந்து செயல் படுகின்றார். மனிதர்கள், சம்பவங்கள், முரண்கள், எதிர்பார்ப்புக்கள், போராட்டங்கள் என யாவற்றையும் வெறும் படப்பிடிப்புகளாக இயங்கியலற்ற ரீதியில் படைக்கவில்லை. மாறாக இயங்கியல் பூர்வமாக உயிர்ப்புள்ள வாழ்க்கையின் புறப்பாடுகளாகப் படைக்கின்றார்.

இவரது படைப்புகளில் எளிமை உண்டு. வாழ்க்கையின் உயிர்த்துவம் பன்முகப் பாங்கில் வெளிப்படுகிறது. அவருக்குத் தெரிந்த மனிதர்களும் அவர்களது வாழ்வியலும் தான் படைப்பாகிறது. இவற்றை இலகுவாக கைக்கொள்ளக் கூடிய மொழி நடையில் எழுதுகிறார். இது இயல்பாக இருக்கிறது. குறிப்பாக குடந்தை, திருவாரூர், நாகை எனப்படும் தஞ்சைப் பகுதி மக்களின் வாழ்நிலைகளை, விவசாய மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை, அப்பகுதியின் வட்டார வழக்குகள் மூலம் பதிவு செய்கிறார்.

வாசிப்பாளர்களின் சமூக உணர்வுப் பிரக்ஞையின் மட்டத்தை அதிகரிக்க விரும்புகின்றார். இதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார். இருப்பினும் படைப்பாக்கச் செழுமைக் கூறுகளின் உதைப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும். கற்பனை விரிய வேண்டும். சமூக எதார்த்தத்தின் கதைகூறல் மரபு இன்னும் புதிய நுட்பங்களின் சேர்மானமாக வேண்டும். கிராமத்தாரின் முழுப்பரிமாணம் படைப்பாளுமையாக வெளிப்பட வேண்டும்.

சோலை வண்டல்மண் நிலத்தைச் சார்ந்தவர். பிறந்த அம்மண்ணிலேயே இன்றுவரை காலூன்றி வாழ்பவர். அந்த மண்ணிலிருந்து விடுபட்டு அதிதூரங்களை, நகரக்காடுகளை, மிகைக் கற்பனைகளை நுகர முடியாத, அனுபவிக்காத ஒருவர். இதனால் அவரது வாழ்பனுபவம் ஒரு குறிப்பிட்ட வட்டம் சார்ந்தது. ஆனால் அது அளவற்ற பன்முகப் பாங்கான கதை சொல்லிகளின் உலகம். இதனைக் கதைக் குகை எனவும் கூறலாம். ஆகவே சமூகப் பிரக்ஞையும் படைப்பாக்க உந்துதலும் இருக்கும் வரை நிறையவே படைக்க முடியும். அந்த வகையில் தான் சோலை சுந்தரப் பெருமாள் தமிழில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் இலக்கிய பரப்பில் 'வண்டல் இலக்கியம்' என்று இனம்பிரித்து அறியத்தக்க இலக்கிய வகையின் இருப்பை இவர் அடையாளப்படுத்துகின்றார். 'செந்நெல்' நாவல் மூலம் தமிழில் பரவலாக அறியப்பட்டவர். இவரது 'உறங்க மறந்த கும்பகர்ணர்கள்' (நாவல், 1990), 'மண் உருவங்கள்' (சிறுகதைகள், 1992), 'ஒரே ஒரு ஊருல' (நாவல், 1992), 'மனசு' (குறுநாவல்கள், 1994), 'ஓராண்காணி' (சிறுகதைகள், 1995), 'ஒரு ஊரும் சில மனிசர்களும்' (சிறுகதைகள், 1996), 'நஞ்சை மனிதர்கள்' (நாவல், 1998), 'செந்நெல்' (வெண்மணி மக்களின் போராட்ட நாவல், 1999), 'தப்பாட்டம்' (நாவல், 2002) போன்ற படைப்புக்கள் சோலையின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன.

தீவிர படைப்புக் குணமும் சமூகம் சார்ந்த நோக்கும் ஒருவரது ஆளுமையின் ஆற்றுப் படுத்தலாக மாறும் பொழுது சோலை போன்ற படைப்பாளிகளின் இயங்கு தளம் விரிந்து கொண்டே இருக்கும். தமிழ்ப் பண்பாட்டு அசைவியக்கத்தின் ஆவணமாக்கலாகவும் புனைகதை விளங்கும். இதற்கான சாட்சியாகவே சோலை சுந்தரப்பெருமாள் இயங்குகிறார்.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com