Revenge is sweet. இதை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், ராஜர் ·பெடரருக்கும் (Roger Federer), அமெலி மரிஸ்மோவுக்கும் (Amelie Mauresmo) இந்த வருட விம்பிள்டன் ஆட்டங்கள் ஒரு விதத்தில் பழிவாங்கிய திருப்தியை அளித்தன என்பது உண்மைதான்.
டென்னிஸ் ஆட்டங்களைக் கவனித்து வருவோருக்கு இந்த வருட ஆஸ்திரேலியன் ஓப்பன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் முடிந்த விதம் அதிருப்தியை அளித்திருக்கும். ஆஸ்திரேலியாவில் இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பாக ஆடிய மரிஸ்மோ 6-1, 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன் நிலையில் இருந்தார். அச்சமயம் வயிற்றுக் கோளாறால் உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி ஜஸ்டின் ஹெனின்-ஹார்டென் (Justine Henin-Hardenne) ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் கோப்பையைக் கைப்பற்றினாலும், அதை முறையாக வென்ற திருப்தி இல்லாத நிலை மரிஸ்மோவிற்கு. இருந்தாலும், தனது ஏமாற்றத்தைச் சற்றும் வெளிப்படுத்தாமல் அவர் ஜஸ்டினிடம் சென்று பரிவாகப் பேசியது பலரையும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து, ஜஸ்டின் செய்தது சரியா, தவறா என்று சர்ச்சைகள் நடந்த விதம் இருந்தன.
இந்த வருட விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் மரிஸ்மோவும், ஜஸ்டினும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜஸ்டினை முறையான விதத்தில் வென்று, ஆஸ்திரேலியாவில் தனக்குக் கிடைத்த வெற்றி நியாயமானதுதான் என்று மரிஸ்மோ நிலை நாட்டுவாரா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் இருந்தது. நெருக்கமான போட்டிகளில் வெல்லும் மன உறுதி இல்லாதவர் என்று மரிஸ்மோவைப் பற்றிய கருத்தும் நிலவி வந்தது. 27 வயதாகும் மரிஸ்மோ, 2005 வரை 31 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கு பெற்றிருந்தாலும், இறுதி ஆட்டம் வரை முன்னேறியது கிடையாது. பிரஞ்சுக்காரரான மரிஸ்மோ பிரஞ்சு ஓப்பன் ஆட்டத்தில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதன் தோல்விக்குப் பின் தொடர்ந்து வந்த விம்பிள்டனில், தனது ஏமாற்றங்களையும், தோல்விகளையும் மறந்து சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார். இறுதி ஆட்டத்தில் ஜஸ்டினை 2-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வென்று அனைவர் சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் மரிஸ்மோ. அவருக்கு வாழ்த்துக்கள்.
சூப்பர்மானுக்கு கிரிப்டோனைட் போல, ராஜர் ·பெடரருக்கு, ர·பேயல் நடால் (Rafael Nadal). இந்த வருடம் மாத்திரம் ராஜருக்கு 4 தோல்விகளைக் கொடுத்தார் நடால். மூன்று முறை களிமண் தளங்களில் நடந்த போட்டிகளில் தோற்ற ராஜருக்கு, முதன் முறையாக நடாலை, புல்தரை ஆட்டமான விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. களிமண் தள ஆட்டங்களில் தலை சிறந்த நடால் விம்பிள்டன் இறுதி ஆட்டம் வரை முன்னேறியதே பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இந்நிலையில் அவர் ராஜரை மீண்டும் வெல்வாரா, அல்லது புல்தரை ஆட்டங்களில் தான் சிறந்த ஆட்டக்காரர் என்று ராஜர் நிலை நிறுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நடால் சிறப்பாக ஆடினாலும், ராஜர் அவரை 6-0, 7-6, 6-7, 6-3 என்ற கணக்கில் வென்றார். இது ராஜரின் 4-ஆவது விம்பிள்டன் வெற்றி. புல்தரை ஆட்டங்களில் தொடர்ந்து பெறும், 48-ஆவது வெற்றி. இதற்கு முன் புல்தரை ஆட்டங்களில் 41 முறை தொடர்ந்து வெற்றி பெற்று, அதிக ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்ற பெருமையை பியான் போர்க் (Bjorn Borg) வைத்திருந்தார். ராஜரையும், நடாலையும் இன்னும் பல இறுதி ஆட்டங்களில் சந்திக்கலாம் என்பது உறுதி.
சேசி |