விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய தமிழ் இசை விழா
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று இனிமையாகப் பாடிச் சென்றார் பாரதி. தமிழ் மொழியே இனி தென்றால், இம்மொழியில் அமைந்த இசையின் இனிமையைக் கேட்கவா வேண்டும்? மொழிக்கு அப்பாற் பட்டதே இசையமுது என்றாலும், தேனுடன் கலந்த அமுது கசக்கவா செய்யும்? ஜூலை 13'ம் தேதி சன்னிவேல் கோயிலில் இத்தகைய தேனையும் அமிழ்தையும் ஒருங்கிணைத்து வழங்கியது விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டவரின் எண்ணிக்கை விரிகுடாப் பகுதியில் தமிழிசைக் கலைஞர்க்ளுக்குப் பஞ்சமில்லை என்பதை வலியுறுத்தியது. அறுபதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, பண்டைகாலப் பாடல்கள், பக்திப் பாடல்கள், பின்னர் 17'ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை அமைந்த பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என்று நான்கு பிரிவுகளாக வழங்கப் பெற்றது. ஏறக்குறைய நூறு முதல் இருநூறு பார்வையாளர்கள் வரை வந்திருந்தனர். இவர்களில் அநேகர் நாள் முழுதும் நிகழ்ச்சியைக் கேட்டு களித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார் 'பாரதி கலாலயா'வின் அனுராதா சுரேஷ்.

பண்டை இலக்கியப் பாடல்கள் அமைந்த பகுதியில், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் சிஷ்யரான திரு ராகவன் மணியன், தமிழ்த்தாயின் எழில் அணிகலன்களாயமைந்த ஐம்பெருங்காப்பியத் தினின்று சில பகுதிகளை மெட்டிட்டு வழங்கினார். பண்ணிசை மற்றும் சங்க காலத்திற்குப் பின் அமைந்த பாடல்களைப் பற்றிய சிறந்த குறிப்புகளையும் இவர் இந்நிகழ்சியில் தொகுத்து வழங்கினார். முதலில் மணிமேகலையில் "பாத்திரம் பெற்ற கதை" யில் புத்தபிரானைப் போற்றி அமைந்த வரிகளை நட்டப்பாடை பண்ணில், நாட்டை ராகத்தில் இசைவடிவமைத்து வழங்கினார். அடுத்ததாக சிலம்பில், இடம்பெற்ற பாடல்கள் சிலவற்றை வழங்கினார்: ஆடலில் சிறந்த மாதவியின் அரங்கேற்றத்தை வர்ணிக்கும் இளங்கோவடிகளாரின் வரிகளை தேம்பாணி பண்ணிலும், அதன் 'இளிக் குரல் திரிபு' மூலம் வரும் துர்கா அல்லது சுத்த சாவேரி ராகத்திலும் மெட்டிட்டு வழங்கினார். பின்னர் அரங்கேற்றப் படலத்தில் இசைக் குறிப்புகள் மிகுந்த பகுதியினின்று ஒரு பாடலை, தமிழ்க்கடவுள் முருகனுக்குகந்த ஷண்முகப்ரியா ராகத்தில் அமைத்து வழங்கினார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களை வர்ணித்தமைந்த நீலகேசி காவிய வரிகளை நால்வகைப் பண்களில் அமைத்துப் பாடினார்.

தொடர்ந்து இப்பகுதியில் ஐந்தாறு கலைஞர்கள் சிலம்பு, திருக்குறள், அகத்தியரின் பாடல் மற்றும் புறநானுற்று பாடல் ஆகியவற்றை வழங்கினர்.

நாதத்தின் மூலம் இறைவன் மேல் தமக்குள்ள பக்தியையும், அளவில்லா அன்பையும் ப்ரகடனம் செய்வதாய் அமைந்த பாடல்கள் நம் தமிழிலக் கியத்தில் கணக்கிலடங்கா. நிகழ்ச்சியின் பக்திப் பாடல்கள் பகுதியில் இவ்வகைப் பாடல்களை, கேட்பவர் மனதில் பக்தி ப்ரவாஹிக்கும் வகையில் தேன் தோய்ந்தக் குரலில் வழங்கினார் திரு எச். வி. ஸ்ரீவத்சன். திருப்பாவை (ஆழிமழைக்கண்ணா), தேவாரம், திருவருட்பா (கல்லார்க்கும் கற்றவர்க்கும்) முதலானவற்றை அருமையாகப் பாடினார். இவரை அடுத்து இப்பகுதியில் பங்கேற்றவர்கள் திருப்புகழ், இயேசு காவியம் ஆகிய பாடல்கள் வழங்கினர்.

அண்மையில் (17'ம் நூற்றாண்டு முதல் இன்று வரை) கர்நாடக பாணியில் எண்ணிலடங்கா தமிழ்ச் சான்றோர்கள் ராகமும் உணர்ச்சியும் ததும்ப அருஞ்சுவைப் பாடல்கள் பலவற்றை நமக்கு அளித்துள்ளனர். 'தமிழிசைத் தியாகராஜர்' என்று போற்றப்படும் பாபனாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி (போகி ராகத்தில் இவருக்கிருந்த திறனை தியாகராஜரே வியந்ததுண்டாம்), ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர், அச்சுத தாசர், அம்புஜம் கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், பெரியசாமி தூரன், மதுரை ஸ்ரீனிவாஸ், ராஜாஜி என்று இம்மாமேதைகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தேசிய உணர்வையும், நவீன எண்ணங்களையும் தூண்டுவதாய் அமைந்த பாரதி மற்றும் பாரதிதாசன் பாடல்களும் இந்தப் பட்டியலில் சேர்கின்றன.

இப்பகுதியை திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் மாணவியும் இந்நிகழ்ச்சியை தொகுத்து மன்றத்தின் சார்பாய் நமக்கு அளித்தவருமான திருமதி கல்பகம் கௌஷிக் ஹம்சத்வனியில் அமைந்த மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் 'சதாசிவன் மைந்தனே' மற்றும் ஹம்சானந்தியில் அமைந்த பாபனாசம் சிவனின் 'ஸ்ரீனிவாசா' என்னும் பாடல்களுடன் துவக்கினார். இவருக்கடுத்தடுத்து 25 பேர் இப்பகுதியில் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து நாட்டுப்புறப் பாடல்கள் வழங்கப் பட்டன. மற்ற பகுதிகளில் அமைந்த பாடல்களின் அளவிற்கு எண்ணிக்கை அதிகம் இல்லாதிருப்பினும், நேரமும் அதிகமில்லாததால், குறையெனக் கொள்ள இயலாது. மன்றத்தின் அடுத்த தமிழிசை விழாவில் தெம்மாங்கு மற்றும் நாட்டுப்புறத்தின் எழிலை எடுத்துக்காட்டும் பாடல்கள் பலவற்றைக் கேட்போம் எனும் நம்பிக்கை உள்ளது.

சமீபத்தில் விரிகுடாப் பகுதிக்கு குடிவந்துள்ள திருமதி சங்கீதா ஸ்வாமிநாதனை அநேக வாசகர்கள் அறிந்திருப்பர்.ஆறு வயதிலேயே தம் தந்தை ஸ்ரீ கரூர் கிருஷ்ண்மூர்த்தியிடம் இசைப்பயிர்ச்சியைத் தொடங்கிய இவர், பின்னர் திருமதி சுதா ரகுநாதனிடம் பயின்றார். இவர் இந்நிகழ்ச்சியில் அளித்தவை பாபநாசம் சிவனின் பாடல்கள். பாபநாசம் சிவன் அவர்களின் நொடிப்பொழுதில் பாடல் எழுதும் தன்மையை வியந்து பேசி, அவர் பாடல்களினின்று பிரசித்திப்பெற்ற உன்னைத்துதிக்க அருள் தா (குந்தல வராளி), ஸ்ரீ வாதாபி கணபதியே (ஸஹானா), காண கண் கோடி வேண்டும் (காம்போஜி), என்ன தவம் செய்தனை (காபி), நான் ஒரு விளையாட்டு பொம்மையா (நவரச கன்னடா) ஆகிய பாடல்களை ராகமும், உணர்ச்சியும் ததும்பப் பாடி செவிக்கு நல்விருந்தளித்தார்.

நிகழ்ச்சியின் உச்சகட்டமாக திருமதி லால்குடி ஸ்ரீமதி ப்ரஹ்மானந்தம் அவர்கள், தம் புதல்வி திருமதி அனுராதா ஸ்ரீதருடன் வயலின் வாசிக்க, புதல்வன் திரு ஸ்ரீராம் ப்ரஹ்மானந்தம் அவர்கள் மிருதங்கம் வாசித்தார். இப்பகுதி தாமதமாகத் துவங்கினாலும், முகத்தில் புன்முறுவல் சிறிதும் குன்றாமல் அற்புதமாய் வாசித்த திருமதி ஸ்ரீமதி அவர்களின் விரல்கள் அளித்த இனிய நாதத்திற்கு அவர் புதல்வி வயலினிலும், மகன் மிருதங்கத்திலும் சிறிதும் சளைக்காமல் ஈடுகொடுத்து அனைவரையும் ப்ரமிக்க வைத்தனர். இவர்கள் அளித்த இன்ப வெள்ளத்தை வர்ணிக்க வார்த்தைகள் போதா! சேவிக்க வேண்டுமய்யா (ந்தோளிகா), ஆனந்த நடமாடுவார் (பூர்வி கல்யாணி), எப்படி மனம் துணிந்ததோ (ஹ¤சேனி), தாமதம் தகாதய்யா போன்ற அரியப் பாடல்களை வாசித்தனர். மத்யமாவதியில் ஆடாது அசங்காது' கண்ணனை வரவேற்ற பாடல், அதைக் கேட்டு அந்த கண்ணன் நேரிலே வந்த ப்ரமையைத் தந்தது. பின் அவன் தீராத விளையாட்டுகளை பட்டியல் போட்டு நேரில் நிறுத்தியது ராகமாலிகையில் அமைந்த பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை'. 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்தமிழர்' என்று உணர்ச்சித் ததும்ப வழங்கி அனைவர் மனத்திலும் பெரும் நிறைவை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றக் கலைஞர்கள் அனைவர்க்கும் பக்கபலமும் உறுதுணையும் வயலின் மற்றும் தாள வாத்தியத்தின் மூலம் தந்த கலைஞர்கள் ஏராளம்: வயலினில் திருமதி ருக்மணி, திருமதி பார்வதி, திரு ராகவன் மணியன், திரு சம்பத், திரு மணி, திருமதி அனுராதா ஸ்ரீதர் ஆகியோரும், தாள வாத்யங்களில் திரு அலெக்ஸ் பாபு, திரு ராகவன் மணியன், திரு ஸ்ரீராம் ப்ரம்ஹானந்தம், திரு துரைசுவாமி, திரு ரமேஷ் ஸ்ரீனிவாசன், திரு மஹாதேவன்ஆகியோரும் பேராதரவு தந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சி நடக்க கோயிலிடத்தை இலவசமாக அளித்த சன்னிவேல் கோயில் நிர்வாகம் தமிழர் நெஞ்சங்களின் நன்றியைப் பெற்றது.

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் நம்மில் பலர் நம் நாட்டில் கிடைத்த இசை நிகழ்ச்சிகளுக்குப் பெரிதும் ஏங்குகிறோம். அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் விரிகுடாத் தமிழ் மன்றம் தெள்ளுத் தமிழ் பாடல்களை ஒரு நாளெல்லாம் இந்நிகழ்ச்சி மூலம் அளித்தது பாராட்டத் தக்கது. மேன்மேலும் மன்றம், இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தந்து தேமதுரத் தமிழிசை இக்கண்டமெங்கும் பரவும் வகை செய்யும் எனும் நம்பிக்கைப் பிறக்கின்றது. வாழ்க தமிழ், வளர்க மன்றத்தின் பெரும்பணி!

© TamilOnline.com