சிவா சேஷப்பன் கணினி மென்பொருள் பொறியாளராகத் தொழில் புரிந்து வருகிறார். கடந்த 12 வருடங்களாக சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பௌதீகம் (physics), விண்ணியல் (astronomy, cosmology) துறைகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரி மேன்படிப்பில் வானொலி விண்ணியல் (radio astronomy) துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறார். பள்ளி நாட்களில் மேடை நாடகங்களில் நடித்திருக்கும் இவருக்கு விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் முதன் முறையாக வட அமெரிக்காவில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மேடையேற்றம் செய்த போது சகுனியாக நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. சமூக சேவைகளில் ஈடுபாடுள்ள இவர், தொடர்ந்து ஐந்து வருடங்களாக சான் ·பிரான்சிஸ்கோ எய்ட்ஸ் வாக் (San Francisco AIDS Walk)-ல் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார். சுஜாதா, ஐஸக் "ஸிமோவ் போன்ற எழுத்தாளர்களை விரும்பிப் படிக்கும் இவர், தனக்கும் விஞ்ஞான அடிப்படையில் சிறுகதைகள் (science fictions) எழுத விருப்பம் என்று பயமுறுத்தி வருகிறார்.
2003-ம் ஆண்டு விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இவர் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் தமிழ் இணைய மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவிலும் பெரும் பங்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். மாநாட்டின் கண்காட்சி மையத்தின் தலைவராக (Director of Exhibition hub) செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் வெளியான அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன் பேட்டியை திரு. குமார் குமரப்பனுடன் இணைந்து நடத்தி, தென்றலுக்காகத் தொகுத்து அமைத்தார். |