பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு ஒருமாதம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வைகோ கைது விவகாரம் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
பொடோ சட்டம் சட்டமாகப் பிரகடனப்படுத்தும் போதே இச்சட்டம் 'தேவையற்றது' , 'தீமைப்பயக்கும்' என்று எதிர்க்கட்சிகள் யாவும் ஒருமித்த குரலில் எதிர்த்தன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற திமுக உள்ளிட்ட சில கட்சிகள் திருத்தங்கள் சிலவற்றைக் கூறின. பொடோ சட்டம் பயங்கர வாதிகளை அழிக்க, ஒடுக்க நினைக்கும் சட்டம் என்பதைவிட அரசியல்வாதிகளை பழிவாங்கக்கூடிய சட்டமாக இருக்குமென்ற அச்சம் பரவலாகவே எல்லோர் மத்தியிலும் இருந்தது.
வைகோ கைது விவகாரம், பொடோ அரசியல் வாதிகளை பழிவாங்கத் பயன்படுத்தப்படும், தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துவிட்டது. ''பொடோ சட்டம் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது. முழுக்க முழுக்க பயங்கரவாதிகளை/தீவிரவாதிகளை ஒடுக்க மட்டுமே பயன்படுத்தப்படும்'' என்று அழுத்தம் திருத்தமாக பிரதமர் வாஜ்பாயும், துணைபிரதமர் எல்.கே. அத்வானியும் திரும்பத் திரும்ப கூறி வந்தார்கள்.
ஆளும்கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளும் இதை நம்பி வந்தார்கள். பொடோ சட்டத்தை மிகத் தீவிரமாக ஆதரித்த கட்சிதான் மதிமுக. இதுபோல் ஆளும் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் பொடோ சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஒரே கட்சி அதிமுக தான்.
ஆளுங்கட்சிக்கு பிடிக்காதவர்களை பழிவாங்கவே பொடோ பயன்படும் என்று ஆரம்பத்திலேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இது உண்மையாகும் வகையில் - தன்னை பழி வாங்கவே ஜெயலலிதா பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக வைகோ குற்றம் சாட்டு கின்றார்.
ஆனால் ஜெயலலிதாவோ வைகோவின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கின்றார். வைகோவை நான் போட்டியாக கருதவில்லை என்றும் தனக்கு தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறுகின்றார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வைகோ சார்பாக பேசியும், ஆதரவாளராகவும் வருகின்றார். அந்த அடிப்படையில் தான் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ஜெயலிதா குறப்பிட்டார்.
வைகோ மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பூர்வாங்க ஆதாரங்கள் உள்ளன. சட்டவல்லுநர்களின் ஆலோ சனை பெற்றுத்தான் வைகோ கைது செய்யப் பட்டுள்ளார் எனவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் புலிகள் ஆதரவு தொடர்ந்தால் மதிமுகவுக்கு தடை விதிக்கப்படுமெனவும் எச்சரிக்கை செய்கின்றார்.
ஆனால் தேசிய, மாநில அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது ரத்து செய்வது போன்றவை தேர்தல் ஆணையத்தின் உரிமை. இதில் மாநில அரசு தலையிட முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சட்டத்தை யார்மீறினாலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை யார் ஆதரித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் வைகோவை போல வெளிப்படையாக ஆதரித்து பேசவில்லை. வெளிப் படையாக ஆதரித்துப் பேசினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜெயலலிதா எச்சரிக்கை செய்கின்றார்.
தமிழக அரசியலில் வைகோ கைது விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. இத்தருணத்தில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழகத்தை இரண்டு மாநிலமாக்க வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்துள்ளார். இக்கோரிக்கை தமிழக அரசியல் வாதிகளிடையே கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
வன்னியர்கள் பெரும்பாலும் வசிக்கக்கூடிய மாவட்டங்கள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு மாநிலமாக்கினால் அதற்கு தான் முதலமைச்சராக வரமுடியும் எனக் கருதுகிறார். இதனால் தான் தமிழகத்தை இரண்டு மாநிலமாக்க வேண்டுமென்ற திட்டம் என பலரும் விமரிசிக்கின்றனர்.
கல்வி, குடிதண்ணீர், சுகாதாரம், வீட்டுவசதி போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாவட்டங்களுக்கு தனிக்கவனம் செலுத்தி அவற் றையும் இதர மாவட்டங்கள் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இரண்டு மாநில யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் ராமதாஸ்.
ராமதாஸ் திட்டப்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, நாகை ஆகிய 13 மாவட்டங்கள் தனி மாநிலம். மீதமுள்ள 16 மாவட்டங்கள் தனிமாநிலம் என்கிறார்.
வளர்ச்சி வளர்ச்சியின்மை, சமமற்ற வளர்ச்சி என்பன தமிழகத்தில் காணப்படும் பொதுவான போக்கு. இதற்கு இரண்டு மாநிலமாக பிரிப்பது சரியான தீர்வாகாது என்பது எல்லோரது ஒருமித்த கருத்து. ஒவ்வொரு சாதியும் அவரவர்களுக்கு தனித்தனியான மாநிலம் என்று பிரித்தால் தமிகம் என்பது மிஞ்சாது. எல்லோருக்குமான அதிகார்ப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் பற்றிய சிந்தனையை செயற்பாட்டை விரிவாக்கம் செய்வதுதான் இன்றைய அவசிய அவசரப் பணி.
ராமதாஸ் திட்டப்படி தமிழகம் இரண்டாகப் பிரிப்பது அல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமிழக நலன் சார்ந்து உருப்படியாக சிந்தித்து பணியாற்ற வேண்டும். சுயநல அரசியலுக்கு தமிழகத்தை கூறுபோட நி¨னைப்பது ஏற்கக் கூடியதல்ல.
தமிழக அரசியலில் வைகோ கைது, ராமதாஸ் இருமாநிலக் கோரிக்கை ஆகியன அரசியலில் கவனத்தை ஏற்படுத்தி உள்ளன.
துரைமடன் |