திறமைசாலி தான்!
சத்யஜித் ரே கண்டெடுத்த சுவலட்சுமி, தமிழ்ப் படங்களில் தனது திறமைகளைக் காட்டிவருகிறார். அஜித் நடித்த "ஆசை" படத்திற்கு புதுமுக நடிகையை கதாநாயகி ஆக்க எண்ணிய இயக்குனர் வசந்த் கண்ணில் இவர் பட்டார். அந்தப் படம் வெற்றிப் பெற்றாலும் இந்த பெங்காலி நடிகையை யாரும் முதலில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சுவலட்சுமி தொடர்ந்து சட்டம் பயின்றார். வந்துக்கொண்டிருந்த ஒரு சில வாய்ப்புகளும் நின்றுவிடவே, அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காகச் சென்றார். இடையில் சின்னத்திரையில் "சூலம்" தொடரில் ஒப்பந்தம் ஆனார். கலிபோர்னியாவைச் சேர்ந்த Dr. பானர்ஜி என்பவரை தனது சொந்த ஊரான கோல்கத்தாவில் மணந்தார். தற்போது தேனிலவுக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், விரைவில் சென்னை திரும்பி, "சூலம்" தொடரில் தொடர்ந்து நடிக்க இருக்கிறார். தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 19ம் தேதி, சென்னையில் திருமண வரவேற்பு கொடுக்க இருக்கிறார். உருப்படியான வேடங்கள் வந்தால் தான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார். இந்த திறமைசாலியைப் பயன்படுத்த இனி தயாரிப்பாளர்கள் தான் முன் வரவேண்டும்.

வெற்றித் தழுவல்கள் மொழி மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடும் போது, விக்ரம் - அபிதா நடித்து பாலா இயக்கிய 'சேது' கன்னடத்திலும் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டதை குறிப்பிட்டே ஆக வேண்டும். கன்னடத்தில் "ஹட்சா" மாபெரும் வெற்றி பெற்றது. Dr. ராஜசேகர் நடித்து அவரது மனைவி நடிகை ஜீவிதா தெலுங்கில் இயக்கிய "சேஷ¤" சோபிக்கவில்லை. தற்போது "சேது" இந்தி பேசப் போகிறது. கதாநாயகனாக சல்மான் கான் நடிக்கிறார். இந்த வேடத்திற்கான முயற்சிகளில் அவர் ஏற்கனவே இறங்கிவிட்டார். தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார் சல்மான். இந்த முயற்சிகளுக்கெல்லாம் தாங்கள் தான் காரணம் என்று விக்ரமும் பாலாவும் பெருமை அடையலாம்.

மறைந்திருக்கும் திறமை தனது படங்களில் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்று நடிகர் விஜய் முயன்றுவருகிறார். "பத்ரி" படத்தில், இவரது விரல்கள் மீது ஒரு காரை ஓடச்செய்தார். தனது புது படமான் "யூத்"தில் எழுபது அடி உயரத்திலிருந்து குதிப்பது போல ஒரு காட்சி அமைத்திருக்கிறார். சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனும் இயக்குனர் வின்செண்ட் செல்வாவும் டூப் போட்டு எடுக்கலாம் என்று கூறியும், விஜய் தானே செய்வதாகக் கூறினார். படப்படிப்புக் குழுவினர் மூச்சடைத்து நிற்க விஜய் அந்தக் காட்சியில் உயரத்திலிருந்து லாவகமாக குதித்தார். படத்தில் ஒரு சிலக் காட்சிகளை அவரே இயக்கியிருப்பதாகத் தெரிகிறது. இவருள் ஒரு இயக்குனர் மறைந்திருக்கிறார் என்று இயக்குனர் வின்செண்ட் செல்வா புகழ்ந்தாராம். ஆனாலும் கூட, தொடர்ந்து பல படங்களில் விஜய் நடித்து வருவதால், அவர் இயக்குனாரவது வெகு சமீபத்தில் இல்லை.

எதுவும் நிச்சயம் இல்லை இயக்குனர் பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தார் ரதி. படப்பிடிப்புக் குழுவினருடன் இலங்கை செல்லவும் தயாராக இருந்தார். ஆனால் தற்போது அவர் அந்தப் படத்தில் இல்லை என்று செய்தி. கதாநாயகியாக பாரதிராஜா ஒரு புதுமுகத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். கைவசம் ஏராளமான படங்கள் இருப்பதால், ஒன்று குறைந்தால் அதைப் பற்றி அதிகம் வருத்தப்படவில்லையாம் ரதி.

சரியான வட்டத்தில் தான் இருக்கிறார்! பிரசாந்த் - சினேகா நடித்த இவரது முதல் படமான "விரும்புகிறேன்" இன்னமும் வெளியாகவில்லை. ஆனால் மணிரத்தினதிடம் பயின்ற இயக்குனர் சுசி கணேசன், தனது இரண்டாவது படம் "5 ஸ்டார்" வேலைகளைத் தொடங்கிவிட்டார். மணிரத்னம் தயாரிப்பான இப்படத்தில் சமீபத்திய வழக்கம் போல ஐந்து புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் ஒரு மாதம் ஒத்திகைப் பார்க்கப்பட்டது. "உதிரிப் பூக்கள்" மற்றும் "நிறம் மாறாத பூக்கள்" புகழ் விஜயன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள ரவி வர்மன், இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

© TamilOnline.com