உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள்
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடந்து முடிந்து, இத்தாலி வெற்றி பெற்றது. 'முட்டி' மோதிப் பார்த்த பிரான்சு தோல்வியைத்தான் தழுவியது என்று மோசமான ஜோக் அடிக்கலாம். 2006 உலகக் கோப்பையைப் பற்றி அனைவர் நினைவிலும் இருப்பது இறுதி ஆட்டத்தில் பிரஞ்சு ஆட்டக்காரரான ஸடான் (Zidane) இத்தாலிய ஆட்டக்காரர் மாடரட்ஸியை (Materazzi) தலையால் முட்டியதுதான். ஸடானைத் தூண்டி விடும்படி மாடரட்ஸி என்ன சொன்னார் என்று நிச்சயமாகத் தெரிய வில்லை. ஐரோப்பியப் பத்திரிகைகளும், இணையத் தளங்களும், வலைப் பூக்களும் (blogs) இந்த நிகழ்ச்சியை அலசித் தள்ளின. உதட்டின் அசைவைக் கொண்டு பேசியதை நிர்ணயிக்கும் திறமையாளர்கள் பலரை நியமித்து, ஸடானும், மாடரட்ஸியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று கணிக்க முயன்றனர் பல பத்திரிகையாளர்கள். இதில் பல விதமான கருத்துக்கள் வெளியாயின. ஆட்டத்தின் நடுவாளர் ஸடான், மாடரட்ஸி மோதலைத் தொலைக்காட்சித் திரையில் பார்த்த பின்னரே ஸடானை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றினார் என்ற குற்றச் சாட்டும் நிலவியது. நடுவர் தொலைக் காட்சியைப் பார்த்து முடிவெடுப்பது விதிமுறைகளுக்கு புறம்பானது.

உலகக் கோப்பை ஆட்டங்களை நடத்தும் அமைப்பான FIFA ஒரு குழுவை நியமித்து இந்தக் குற்றங்களை விசாரித்தது. அதன்படி, ஆட்ட நடுவர்மேல் குற்றம் இல்லை என்றும், ஸடான், மாடரட்ஸி இருவர் மேலும் குற்றம் இருக்கிறது என்றும் நிர்ணயித்தது. மாடரட்ஸிக்கு 5,000 ஸ்விஸ் பிராங்க் அபராதமும், இரண்டு ஆட்டங்களில் விளையாடத் தடையும், ஸடானுக்கு 7,500 ஸ்விஸ் பிராங்க் அபராதமும், 3 ஆட்டங்களில் விளையாடத் தடையும் தண்டனையாக விதித்தது. ஸடான் கால்பந்து ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதால் 3 நாட்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேசி

© TamilOnline.com