ஓணத் திருநாள்
திருவோணத் திருநாள் அது கேரள மக்களின் மங்கலத் திருநாள்
குடும்பத்தவர் அனைவரும் ஒன்றுகூடிக் கொண்டாடும் நன்னாள்
திருமாலின் அவதாரம் பத்து என்பரதில் வாமன அவதாரமும் ஒன்று.
மஹாபலி மன்னனுக்கு வரந்தந்து வாழ்வளித்த அவதாரமாகும்.
மஹாபலி என்றுரைக்கும் மாவேலிமன் நருக்கு வரவேற்பு தந்து
உபசரித்து விருந்தளித்து மகிழ்ச்சிகாணும் நன்னாள் - ஓணத்திருநாள்

பன்னிரண்டு மாதங்களில் ஒன்றாகும் "சிங்ஙம்" எனும் மாதம் (ஆகஸ்டு - செப்டம்பர்)
மனமயக்கும் கேரளத்தின் வளங்கொழிக்கும் சொர்ண மாதம்
மழைமேகம் ஓய்ந்தங்கே கதிரவன் ஒளிபரப்பும் சுகமான மாதம்
கதிர் முற்றித் தலைசாய்த்து பச்சைப் பாய் விரிக்கும் மாத மிதில்
வளமான சூழலில் மக்களுக்கு இன்பந்தர வருகின்ற திருனாள் - ஓணத் திருநாள்

மனத்தூய்மை அதுவேபோல் புறத்தூய்மைக்கும் சாட்சியாய்
அழகுமகளிர் 'முண்டு'டுத்தி ஆபரணங்கள் பல பூண்டு
'கைகொட்டிக்களி' ஆடிக் களிக்கின்ற காட்சிதனைப்
பிரமன் படைத்த ஒருநாவால் எடுத்துரைக்க இயலாது.
மகளிர் ஆட்டம் கைகொட்டிக்களி என்றால் மற்றாங்கே
'கதகளி' ஆடவர்க்குக் கைவந்த கலையாட்டம்.

கண்களுக்கு விருந்தென்பது ஆட்ட பாட்ட மட்டுமன்று
மகளிர் மனைகளிலே கைவண்ணத்து வண்ணக்கோலமுந்தான்
சிவப்பென்றும், பச்சையென்றும், வெண்மையென்றும் மஞ்சளென்றும்
வண்ணவண்ண மலர்களால் கர்பனையில் உருவெடுக்கும் 'பூக்களம்'

கருத்துக்கும் கண்ணுக்கும் விருந்தளித்து மகிழ்வது போல
வயிற்றுக்கும் விருந்தளிக்கும் கேரளத்துப் புகழ்பாடும் பண்டங்கள்
அவியல், பொரியல், காளன், ஓலன், தோரன் என்றும்
எரிசேரி, புளிசேரி, பாலடைப் பிரதமன், சக்கப்பிரதமன்
இன்ன பிற எண்ணற்ற தின்பண்டங்கள் இனிதாய்ப் படைத்து
தலைவாழை யிலையதனில் நாமணக்க வாய் மணக்க
விருந்துண்டு மகிழ்ச்சி கொளும் திருவோணத் திருநாள்.

இந்து என்றும் முஸ்லிம் என்றும் கிறிஸ்து என்றும் பேதமின்றி
கேரள மக்கள் ஒற்றுமையாய்க் கொண்டாடும் இந்தத் திருநாள்
ஒருமைப்பாட் டுணர்வுக்கோர் எடுத்துக் காட்டாய் விளங்கும் நாள்
ஆண்டுதோறும் ஒரேமுறை வருகின்ற திருவோணத்திருநாள்.

டாக்டர். அலர்மேலு ரிஷி

© TamilOnline.com