மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
அன்பார்ந்த வாசகர்களே,

பருவ மழை தொடங்கியதற்கும் (??!), ஆடிப்பெருக்கு மற்றும் நமது தமிழ் மரபிற்கே உரிதான ஐய்யனார் விழாவிற்கும் எனது வாழ்த்துக்கள். ஜூலை 18, சென்னையில் தக்ஷின் சித்ரா நடத்திய ஐய்யனார் விழாவில் எனது இளம் மாணவர்கள் 60 பேர் (வயது 3 முதல் 16 வரை) மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள் என்பதை பூரிப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். கும்மி மற்றும் இந்த விழா தொடர்பான இதரக் கலைகளில் அவர்கள் ஆடிப் பாடி கூடியிருந்தோரை மகிழ்வித்து அவர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றார்கள். நான் தற்போது நமது முன்னாள் எஜமானர்களின் ஊரான லண்டனிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்தும், சொற்பொழிவுகள் ஆற்றியும் நமக்கே உரிதான இந்தப் பாரம்பரிய இசையை அவர்களிடையே பரப்பிவருகிறேன். கிழக்கத்திய நாடுகளில் தோன்றிய கலைகளுக்கு தமிழர்களிடையேயும் மற்ற ஆசிய மக்களிடையேயும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர்கள் பெருந்திரளாக வந்திருந்து இவற்றில் கலந்துகொள்கிறார்கள். முற்றிலும் தமிழ்ப் பாடல்கள் அடங்கிய இரண்டு இசை வழிபாடு நிகழ்ச்சிகளையும் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் பேட்டியையும் கொடுத்துள்ளேன்.

சென்ற முறை நான் எனது பயணத்தை எங்கே நிறுத்தினேன் என்பதை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். நான் இன்னமும் சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். அந்தக் காலக்கட்டத்தின் அழிக்கமுடியாத நினைவுகள்: தென்னகத்தில் காந்தியின் சூறாவளிச் சுற்றுப்பயணம் குறிப்பாக எனது மாநிலத்தில் (கேரளா), இந்தப் பயணத்தின் போது அவரது கையெழுத்தை (autograph) பெறுவதற்கு அவர் என்ன கேட்டாலும், தங்கம், பணம் அல்லது நமது சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்குப் பயன்படும் எந்தப் பொருளாக இருந்தாலும், நமது மக்கள் பெருமையுடனும் பெருந்தன்மையுடனும் அள்ளிக் கொடுத்தார்கள். இன்றும் நாம் ஒரு நல்ல நோக்கிற்கு அரசியல்வாதியோ அல்லது ஒரு சுவாமிஜியோ கேட்டால் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம், அதன் முடிவு எப்படி இருந்தாலும்!

இசையைப் பொறுத்தமட்டில், அந்தக் காலக் கட்டத்தில் தான் தூய கர்நாடக இசை, பல மாபெரும் மேதைகளின் (குறிப்பாக எனது குரு கேரளாவின் முடிசூடா மன்னனாக விளங்கினார்) கச்சேரிகளினாலும் சினிமாவின் மூலம் பல அழிவே இல்லாத பாடல்களினாலும் ஒரு பொற்காலமாகத் திகழ்ந்தது. ஹரிதாஸ், சகுந்தலா, பாமாவிஜயம் படப் பாடல்களை முணுமுணுக்காதவர்கள் யாராவது உண்டோ? MS சுப்புலட்சுமி, PU சின்னப்பா, MK தியாகராஜ பாகவதர் மற்றும் GN பாலசுப்ரமண்யம் போன்ற சூப்பர்ஸ்டார்கள் மற்றும் புகழ் பெற்ற KB சுந்தராம்பாள் மற்றும் DK பட்டம்மாள். இந்தச் சூழல் சுதந்திரம் அடைந்த பிறகு எப்பேர்பட்ட மாற்றத்தைச் சந்தித்தது என்பதனை பிறகுப் பார்போம்.

DK பட்டம்மாள், MS சுப்புலட்சுமி, அட MLV கூட மற்றும் புகழ்பெற்ற NC வசந்தகோகிலம் ஆகியோரின் கச்சேரிகளை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அரியக்குடி, முசிறி சுப்பரமண்ய ஐயர், முடி கொண்டான் வெங்கடராம ஐயர் ஆகியோர் புகழின் உச்சியில் இருந்தபோது அவர்களது கச்சேரிகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றிருந்தேன். எப்பொழு தெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் எனது குரு செம்பை வைத்யநாத பாகவதருக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளேன். சூப்பர் ஸ்டார் MK தியாகராஜ பாகவதரின் கச்சேரிகள் சிலவற்றிலும் அவருக்குப் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறேன். அவர் எப்பொழுதெல்லாம் கேரளா வருகின்றாரோ அப்போதெல்லாம் எனது தந்தையிடம் ஒரு சில அரிய பாடல்களை எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அடக்கத்துடன் கற்றிருக்கிறார். வீணை தனம்மாள் குடும்பத்தினருடன் குறிப்பாக நிகரற்ற பால சரஸ்வதி, ஜெயம்மா மற்றும் முத்தமிழ் அறிஞரும் கர்நாடக இசை வித்தகருமான T சங்கரன் ஆகியோரைப் பல முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். இசை மாமேதைகள் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், வேதாந்த பாகவதர், மழவரநேந்தல் சுப்பராம பாகவதர், காரைக்குடி மற்றும் தேசமங்கலம் வீணைச் சகோதரர்கள், ஹார்மோனிய வித்வான் பெரு சுப்ரமண்ய தீட்சதர் இவர்கள் எல்லாம் அனைவராலும் அறியப்பட்டவர்கள். கோவிந்தசாமிப் பிள்ளை, திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், ராஜமாணிக்கம் பிள்ளை, மைசூர் செளடய்யா (வயலின் கலைஞர்), தட்சிணாமூர்த்திப் பிள்ளை, தஞ்சாவூர் வைத்யநாத ஐயர், பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்யப் பிள்ளை, ராம்நாட் முருக பூபதி (மிருதங்கம்) என்று இந்தப் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. இந்தக் கலைஞர்கள் அனைவரும் தமிழகத்தின் இசைப் பண்பாட்டை மட்டுமல்லாமல் அனைத்து தென்னக - கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றையும் வளமூட்டினார்கள்.

எனது தந்தையைத் தவிர, கேரளாவில் புகழ்பெற்ற வித்வான்கள் பலரும் உண்டு - ராகவ மேனன், வைக்கம் வாசுதேவன் நாயர், செமஸ்டியன் ஜோசப், அகஸ்டின் ஜோசப் (யேசுதாஸ் அவர்களின் தந்தை), மாபெரும் வீணை மற்றும் மிருதங்கக் கலைஞரான வைக்கம் கிருஷ்ண ஐயர் - இவர் ஒரு மாபெரும் ஆசானும் கூட ஆலப்பு வெங்கப்பன் பிள்ளை (மிருதங்கம்), கஞ்சிரா கிருஷ்ண ஐயர் மற்றும் பலர் இவரது மாணவர்கள். வீணை வித்வான் தேசமங்கலம் சுப்ரமண்ய ஐயர், வெங்கடேஸ்வர ஐயர், புதுக்கோடு மது பாகவதர் மற்றும் தவச பாகவதர். இவர்களின் மூத்தக் கலைஞர் பிரபல ஹரிகதை வித்வான் பாலக்காடு அனந்தராம பாகவதர் - இவர் மகாவைத்யநாத ஐயரின் நேரடி சிஷ்யர். எனது தந்தை தனது 12ம் வயது முதல் சுமார் ஆறு வருடங்கள் அனந்தராம பாகவதருடன் குருகுல வாசம் செய்திருக்கிறார். பாலக்காடு ராம பாகவதர் அனந்தராம பாகவதர் மற்றும் தலைசிறந்த ஹிர்கதை விற்பன்னரும் பாடலாசிரியருமான என்னப்பாதம் வெங்கடராம பாகவதர் ஆகியோரின் மூத்த சிஷ்யராக விளங்கியவர் பாலக்காடு ராம பாகவதர். 1920ல் மறைந்துவிட்ட அனந்தராம பாகவதரைத் தவிர இந்த எண்ணற்ற மேதைகள் பலருக்கு பக்கவாத்தியம் வாசித்த பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது.

பாலக்காடு மணி ஐயர் மற்றும் ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நாதஸ்வர தேவகானங்களுக்கு நான் கட்டுண்ட காலமும் இது தான். அந்தக் காலத்தில் கர்நாடக இசை தான் அனைவரும் அறிந்த ஒன்று. அரசியலைப் பொறுத்தவரை அப்போதிருந்த சூழ்நிலை மிகவும் சிக்கலானது. சுதந்திரக் காற்றும் வீசத்தொடங்கும் முன் பல மாநிலங்களும் ஒன்றோடுன்று இணையவும் பலவாகப் பிரியவும் போட்டிப்போட்ட காலம் அது. ஒருங்கிணைந்த கேரளா - ஐக்கிய கேரளம் காண நடத்தப்பட்ட திருவிழா மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மாமேதை கேளப்பன் மற்றும் மகாகவி வல்லத்தோல் ஆகியோரின் சொற்களும் செயல் களும் மக்களிடையே வேதவாக்காகக் கருதப்பட்டது. இந்தத் திருவிழாவின் போது எண்ணற்ற சொற்பொழிவுகள், ஆய்வரங்கள், மற்றும் மாலை நேரக் கச்சேரிகள் என்று பலவும் இருந்தன. மாற்று இல்லாததாலும் எனது சேவை தேவைப்பட்டதாலும் பல கச்சேரிகளின் நான் வாசிக்க நேர்ந்தது. இவற்றில் சிறப்பானது என்று எனக்கு நினைவுக்கு வருவது மைசூர் வாத்யவிருந்தா (மைசூர் மகாராஜா நடத்திவந்த ஆகாஷவாணி). இதனை தலைமை யேற்று நடத்தியவர் மைசூர் குரு ராஜப்பா (மைசூர் செளடைய்யாவின் சகோதரர்). வீணை, வயலின், முக வீணை (குறுகிய நாதஸ்வரம் போன்ற வட இந்திய ஷெனாய் - வாசித்தவர் முதுபெரும் கலைஞர் நாராயணந்தா) , புல்லாங்குழல் மற்றும் நான் வாசிக்கும் மிருதங்கம் ஆகிய வாத்தியங்கள் அடங்கியது இந்தக் குழு. ஒரு பரிட்சார்த்த இசை முறையின் முதல் முயற்சி இது. பின்னர் இது இந்தியன் ஜாஸ் (Indian Jazz) ஆக மலர்ந்தது.

இந்த மாபெரும் திருவிழா மூலம் கர்நாடக இசையைப் பிரபலப்படுத்துதல் மற்றும் ஒரு சில அரசியல்வாதிகள் பிரபலமடைந்தது தவிற பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. கேரளாவின் இணைப்பு, தமிழகம் மற்றும் மைசூரின் பிரிவினை ஆகியவை 1953ம் ஆண்டு நடந்தேறியது. அப்போது நான் சென்னையில் AG's ஆபிஸில் பணியிலிருந்தேன் (ஆகஸ்ட் 1952 முதல்). நான் எனது கல்லூரி வாழ்க்கை பற்றியும், எனது இசை விழிப்பினைப் பற்றியும், இசையின் மெக்காவாக அப்போதும் சரி இப்போதும் சரி விளங்க்கும் சென்னையில் எனது தொடக்க கால வாழ்க்கைப் பற்றியும் நாம் விரைவில் பார்ப்போம்.

இந்தப் பயணம் தொடரும் என்று வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.

T.V. கோபாலகிருஷ்ணன்.

© TamilOnline.com