ஆண்ட்ரே அகாஸியின் கொள்கை
Image is everything! டென்னிஸ் விளையாட வந்த ஆரம்ப காலத்தில் ஆண்ட்ரே அகாஸியின் கொள்கை இதுதான். நீளமான தலைமுடி, பலவித நிறங்களில் உடைகள் என்று சோம்பிக் கிடந்த டென்னிஸ் ஆட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்தவர் ஆண்ட்ரே. 1986-ல் இருந்து 20 வருடங்களாக டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வரும் ஆண்ட்ரே இந்த வருடத்தோடு ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த வருட US ஓப்பன்தான் இவர் கடைசியாக விளையாடும் போட்டியாக இருக்கும். இந்த வருடம் விம்பிள்டன் போட்டியில் மூன்றாவது சுற்றில் நடாலியிடம் தோல்வியுற்றார். அவர் ஆட்டம் முடிந்து வெளியேறும் போது அரங்கே எழுந்து நின்று கரகோஷத்துடன் அவரை வழியனுப்பியது. எட்டு கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள், 60 ATP கோப்பைகள், 860க்கும் மேற்பட்ட ஒற்றையர் ஆட்ட வெற்றிகள் என்ற நீளமான சாதனைப் பட்டியல் வைத்திருப்பவர் ஆண்ட்ரே. அவரோடு வளர்ந்த சம கால டென்னிஸ் விசிறிகளால் எப்படி அவரை மறக்க முடியும்?

இந்த வருடம் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அகாஸி மட்டுமல்ல, மற்றொரு சூப்பர் ஸ்டாரும்தான் அறிவித்திருக் கிறார். இவர் மார்டினா நவ்ரதிலோவா. ஐம்பது வயதாகும் இவர், கடந்த சில வருடங்களாக இரட்டையர் ஆட்டங்களில் மட்டும் பங்கு பெற்று வருகிறார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் ஆட்டங்களில் 18 முறையும், இரட்டையர் ஆட்டங்களில் 31 முறையும், கலப்பு ஆட்டங்களில் 9 முறையும் கோப்பையை வென்றிருக்கிறார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் ஒற்றையர் ஆட்டங்களில் 167 போட்டிகளிலும், இரட்டையர் ஆட்டங்களில் 176 போட்டி களிலும் கோப்பையை வென்றவர் இவர். இந்த வருடம் US ஓப்பனில் கலந்து கொள்வாரா என்று இவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

நவ்ரதிலோவாவின் நீளமான சாதனைப் பட்டியல் அனைவரும் அறிந்ததே. ஆனால் பலரும் அறியாத விஷயம், இவர் முழுமையான சைவம் என்பது!

சேசி

© TamilOnline.com