ஆண்டுதோறும் மகளிர் தினம் என்று கொண்டா டப்படும் நாள் என்ன என்று கேட்டால் பெரும்பாலோர் சொல்லக்கூடிய பதில் மார்ச் 8ந் தேதி என்பது தான். இன்னொரு நாளும் உண்டு. அது அக்டோபர் 15-ம் நாள். அன்றய தினம் 'கிராமப்புற மகளிர் தினம்' என்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஆம். கிராமங்களில் வசிக்கும் பெண்களுடைய பிரச்சினைகள் வித்தியாசமானவை. அவற்றில் முதல் பிரச்சினை, பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பிரச்சனைகளாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை ஒரு வாழ்க்கை முறையாகவே பார்க்கிறார்கள்.
உதாரணமாக பெண்கள் பெயரில் வீடு வாசல் நிலம் நீச்சு எதுவும் இருக்காது. வங்கி கணக்கு கிடையாது. தனியாக சினிமா நாடகம் என்று போக முடிவெடுக்க முடியாது. கடை கன்னி பக்கம் போய் எதாவது பொருள் வாங்கலாம் என்றால் கூட ஆண்களிடம் கேட்க வேண்டும். காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரையிலான பரந்த பூமியில் எந்த கிராமத்திலாவது போய் "ஏங்க நீங்களே கடைக்குப்போய் சாமான் வாங்கக் கூடாதா?" என்று கேட்டுப்பாருங்கள். சொல்லிவைத்தார்ப்போல் ஒரே மாதிரி பதில் தான் வரும். "ஆங்! நாங்களே தனியாகப்போவதா? அதெப்படி? எங்க குடும்ப கெளரவம் என்னாவது?"
இது மட்டுமா? ஆண்கள் வருடத்திற்கு நான்கு ஐந்து மாதங்கள்மட்டும் விவசாய வேலை செய்வார்கள். மற்ற நாட்களில் சீட்டாடுவது போன்று நேரத்தை வீணாக்கிகொண்டிருப்பார்கள். பெண்க ளுக்கோ ஆண்டு முழுவதும் வீட்டு வேலை. தினமும் காலையில் பால் கறப்பது முதல் மாடு குளிப்பாட்டுவது, குழந்தைகளை கவனிப்பது சமைப்பது போன்று இயந்திரமாய் சுழன்றுகொண்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களிடம் 'உங்கள் தொழில் என்ன?' என்று கேளுங்கள். 'வீட்டில் சும்மா தான் இருக்கேன்.' 'கணவர் என்ன செய்கிறார்?' 'அவருக்கு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. அதில் வேலை செய்கிறார்' என்ற ரீதியில் பதில் வரும்.
இது பத்து வருஷத்திற்கு முந்தின நிலையாக இருந்தது. இன்று நிலைமை முழுதுமாக மாறா விட்டாலும், வெகுவாக முன்னேறியிருக்கிறது. காரணம் தன்னார்வ குழுக்களின் அயராத உழைப்பும் மத்திய மாநில அரசுகளின் முனைப்பும் தான். பத்தாண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் 'மைராடா' மற்றும் குஜராத்தில் 'சேவா' போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் இன்று சில ஆயிரங்களைத் தாண்டும் எண்ணிக்கையில் வளர்ந் திருக்கின்றன.
சரி. இந்த தன்னர்வ குழுமங்கள் கிராமப்புற பெண்களுக்கு என்ன செய்கின்றன என்று பார்ப்போம். நம் நாட்டுப்ப் பெண்களுக்கு கல்வி அறிவு குறிப்பாக கணித அறிவு, கூட்டல் கழித்தல், கையெழுத்து போடுவது, வங்கிக்கணக்கு திறப்பது பணம் எடுப்பது, போடுவது போன்ற விஷயங்கள் தெரிவதில்லை. இந்த அவல நிலமையைப்போக்க பல சேவை நிறுவனங்கள் முன்வருகின்றன. ஆயினும் இதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. தன்னார்வக்குழுமங்களின் முதல் சவால் பெண் களிடம் நேரிடையாகப்பேசுவது. என்னதான் சேவை மனப்பான்மையுள்ள பெண்கள் கிராமத்திற்குச் சென்றாலும், முதலில் ஆண்களைத்தான் சந்திக்க வேண்டும். அவர்களைச் சமாளித்து பிறகு தான் பெண்களை அணுக முடிகிறது.
தொடக்கத்தில் இந்த தன்னார்வ குழுமங்கள் மூலம் பெண்களுக்கு சில தொழில் பயிற்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் தொழில் செய்ய தெரிந்தால் மட்டும் போதாது; அந்த தொழிலை வெற்றிகரமாக நடத்த பணம் தேவை. ஆண்களின் தலையீடு இல்லாமல் பெண்களே பணத்தை புரட்டி தொழிலை தொடங்கி செய்த பொருளை விற்று லாபம் பெற வேண்டும். ஆக இதை மனதிற்கொண்டு மகளிர் குழுக்கள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே பங்களாதேசம் போன்ற நாடுகளில் 'சுய உதவி குழுக்கள்' என்ற இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் பட்டதை அடுத்து இந்தியாவிலும் 1992-93 ம் ஆண்டு முதல் முறையாக பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் சுய உதவி குழுக்கள் அனேகமாக பெண்களுக்காகவே செயல் படுகின்றன.
நாடு முழுவதும் தன்னார்வக்குழுமங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் ஒரே சீரான வரைமுறைக்குள் செயல்படாமல் விதவிதமான அமைப்புகள் வெவ் வேறு வழிமுறைகள் என பரவிக்கிடந்தன. 'நபார்டு' என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் தளராத முயற்சியின் மூலம் பங்களாதேசத்து குழுக்களின் அமைப்பு முறைகளில் சில மாற்றங்கள் செய்து இந்திய சுய உதவி குழுக்களுக்கு நம்நாட்டு சூழ்நிலைக்கேற்ப ஒரு தனித்தன்மையை உருவாக்கி குழுக்களுக்கு தகுந்த பயிற்சி, தேவையான கடனுதவி மற்றும் சிறப்பான ஆலோசனைகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகின்றன.
இனி இக்குழுக்கள் எப்படி செயல் புரிகின்றன என்று பார்ப்போம். ஒரு கிராமத்தில் உள்ள பெண்கள் ஒன்று கூடி சுய உதவி குழு தொடங்க தீர்மானிப் பார்கள். இந்த பெண்கள் ஒத்த நோக்கு உடையவர் களாகவும் பொருளாதார ரீதியாக ஒரே தரத்தில் இருத்தலும் நலம். ஒரு குழுவில் சாதாரணமாக 20 பேருக்கு மிகாமல் உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒரு கிராமத்தில் எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் தொடக்கப்படலாம். இந்த அமைப்பின் நோக்கம் அவரவர் சக்திக்கேர்ப்ப பணத்தை சேமிக்க வேண்டும், சேமித்த பணத்தை லாபகரமாக செலவழிக்க வேண்டும், போன்றவையாகும்.
மாதத்திற்கு இருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை குழுவின் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டங்களில் ஆண்கள் தலையீடு இல்லாமல் பெண்கள் சுயமாக சிந்தித்து முடிவுகள் எடுப்பார்கள். குழு உறுப்பினர்கள் சக்திக்கேற்ப சிறு தொகை ஐந்து ருபாய் முதல் 50 ருபாய் அல்லது அதற்கும் மேல் சேமிப்பில் போடுவார்கள். தேவையான உறுப்பினர்களுக்கு கடனாகக் கொடுத்து வட்டியுடன் வசூலித்து ஒழுங்காகக் கணக்கு வைத்துக் கொள்வார்கள். பணம் போதவில்லை எனில் வங்கியிலிருந்து கடன் பெறுவார்கள்.
ஆக, அவர்களுடைய திறமை வெளிப்படுவதற்கு இந்த 'சுய உதவி குழுக்கள்' திட்டம் ஒரு மிக சிறந்த சாதனம் ஆகும். பெண்கள் தொழில் கற்று அதை செம்மையாக செயல் படுத்த, வங்கி கடன் பெற, தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய என்று எந்த ஒரு கட்டத்திலும் ஆண்களின் உதவி தேவையில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் தன்னார்வக் குழு நேரிடையாக தலையிடுவதில்லை. ஒரு கிரியா ஊக்கியாகத்தான் செயல் படுகிறது.
இந்தத்திட்டத்தின் வளர்ச்சியை பார்த்து அரசாங் கமே முன்வந்து ரேஷன் கடை நடத்துதல், இன்டெர்னெட் மையங்கள் தொடங்குவது, சத்துணவுக்கூடங்களை நடத்துதல், பொதுக் கிணறுகள் மற்றும் ஆழ் கிணறு (Borewell) ரிப்பேர் செய்வது போன்ற பொறுப்புகளை அந்தந்த கிராமங்களில் நன்றாகச் செயல்படும் குழுக்களிடம் ஒப்படைக்கிறார்கள். மேலும் நபார்டு வங்கிமூலம் குழுக்களுக்கு தேவையான பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன.
முன்பெல்லாம் வங்கிக்கடன் வாராக்கடனாகவே இருக்கும். ஆனால் இப்போதோ சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கும் கடன் தவணைகள் உரிய தேதிகளில் 'டாண்' என்று திருப்பி கொடுக்கப் படுகின்றன. ஆகவே வங்கிகள் இக்குழுக்களுக்கு கடன் கொடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளன. நாளாவட்டத்தில் இந்தக்குழுக்கள் சிறுசிறு வங்கி களாகவே மாறிவிடும் வாய்ப்புகளும் இருக்கிறது.
மேலும், வெறுமே பொருளாதார ரீதியாக மட்டும் செயல்படாமல் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் இக்குழுக்கள் முயற்சிக்கும். கிராமத்து பிரசினைகளை வட்ட மற்றும் மாவட்ட அளவில் எடுத்துச்சொல்லி தகுந்த பதில்களை பெறுவார்கள். ஆனால் இதுவே அளவிற்கு அதிகமாக போனால் அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து திட்டத்தையே பாழடித்துவிடும் அபாயமும் இருக்கிறது.
இந்தியாவில் பெண்கள் ஜனத்தொகை சுமார் 50 கோடி இருக்கும். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர் களை நீக்கிவிட்டால் கூட சுமார் 30 கோடி பெண்களுக்கு இப்பொழுது இருக்கும் மூன்று லட்சம் சுய உதவி குழுக்கள் கடலில் பெருங்காயம் கரைத்த மாதிரி. ஒவ்வொரு வீட்டிற்கும் ரேஷன் கார்டு இருக்கவேண்டும் என்பது போல ஒவ்வொரு 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் ஏதாவது ஒரு சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலை வரவேண்டும்.
இறுதியாக அமெரிக்காவில் வாழும் இந்தியர் களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இந்தியாவில் செயல்படும் ஏதாவது ஒரு அரசு சாரா தன்னார்வ குழுவுடன் தொடர்பு கொண்டு, குறைந்தது ஒரு கிராமத்தையாவது தேர்ந்தெடுத்து (தத்தெடுத்து) வருடாவருடம் நீங்கள் விடுமுறையில் இந்தியா செல்லும்போது ஓரிரு வாரங்கள் அந்த கிராமத் திற்குச்சென்று சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் பேசி அவர்களுக்கு உற்சாகமூட்டுங்கள்.
என்.எஸ்.நடராஜன் |