கோவிந்தசாமியின் இம்மாத "அரிய" கருத்து - பாசம் ஒன் வே டிராபிக்கா
எச்சரிக்கை: கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்துக்கள் அல்ல.

கோவிந்தசாமி: "என்னைய்யா இது அநியாயமாக இருக்கு, வர வர காஸ்ட் ஆ·ப் லிவிங் இங்கே ரொம்ப ஏறிடுச்சு இந்த மாதம் போன் பின் $110 எனக்கு வந்திருக்கு" என்று தன் கட்டைக் குரலில் சத்தமாகக் கூற எல்லோரும் அவனை திரும்பிப் பார்க்க அவனே தொடர்ந்து "இரண்டு நாள் முன்னால் இந்தியாவிற்கு போன் செய்தேன் என் கடைசி தங்கையிடம் பேச, ஏதோ ஒரு 5 நிமிடம் பேசலாம் என்றால் அந்தப் பக்கம் போனை வைக்காமல் பேசிப் பேசி அரை மணிநேரம் ஆகிவிட்டது" என்று கோபமாகக் கூற உடனே ஒருவர் "சொந்தத் தங்கையிடம் தானே பேசினே அப்போ பரவாயில்லை ஒண்ணும் தப்பில்லை" என்றார்.

கோ.சாமி அவரைக் கோபமாகப் பார்த்து "என்ன சொன்னே, சொந்தத் தங்கை அதனாலே தப்பில்லைன்னா. இதைப் பாரு மாதம் இருமுறை நான் இங்கேயிருந்து போன் பண்றது போதாதாம் வாரத்துக்கு ஒரு முறை பேசணுமாம், இங்கே என்ன காசு கொட்டியா கிடக்கு ஒரொரு காசு சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்படறோம் என்கிறது அங்கே புரியமாட்டேன்கிறதே" என்று சொல்ல, முதலில் பேசியவர் "நம்ம குரலைக் கேட்கிறதாலே அவங்களுக்கு ஒரு சந்தோஷம், அதனாலே முடிஞ்சபோதெல்லாம் ஒரு போன் நாம அடிக்கறதுதான் அவங்களுக்கு சந்தோஷம், கூடப் பிறந்த பாசம் இல்லையா?" என்று கூற கோவிந்தசாமி "அப்ப பாசம் என்கிறது ஒன் வே டிரா·பிக்கா?" என்று கேட்க "என்ன சொல்றீங்க?" என்ரு அவர் கேட்க "புரியவில்லயா? நம்ம குரலைக் கேட்கணும்னு அவங்க ஆசைப் பட்டா அவங்க அங்கிருந்து மாதம் ஒரு முறை கூப்பிட்டால் நாம் மாதம் மூன்று முறை கூப்பிடலாம். அதை விட்டு விட்டு எப்பவும் நாம் தான் இங்கிருந்து போன் செய்யவேண்டும் என்றால் பாசத்தைப் பற்றிய சந்தேகம் வருதே" என்று போட்டான் ஒரு போடு.

உடனே இவர், "சீச்சீ, பாவம் அவங்களுக்கு அதை afford பண்ண முடியாதே, நாம அதை புரிஞ்சுக்கணும்" என்று சொல்ல, கோவிந்தசாமி அடுத்த புல்லட்டைப் போட்டான். "அப்ப எப்போ கேட்டாலும் கடைக்குப் போனோம் அதை வாங்கினோம் இதை வாங்கினோம் என்று பெருமைக்கு ஒண்ணும் குறைவில்லை. ஹோட்டலுக்குப் போய் சாப்பிட ரூ. 500 ரூ 600 செலவு செய்யறேன்னு சொல்றாங்க, ரூ 4000 / ரூ 5000ன்னு எப்படி பட்டுப் புடவை வாங்க முடியுது? அதை மட்டும் கவலையே படாம வாங்கராங்க, நமக்கு ஒரு போன் பேச ரூ.500 ஆகுமா? அதை இவ்வளவு பாசம் பாசம் என்று பேசரவங்க ஏன் அவ்வளவு கணக்குப் பார்க்கறாங்க? அப்ப நாம காசு செலவு பண்ணி அவங்களுக்கு போன் பண்ணினா அந்த பாசம் பீரிட்டு வரும் அவங்களுக்கு செலவு என்றால் அந்தக் குற்றாலம் மாதிரி கொட்டுற பாசம் டக்கென்று அடங்கிடுதே, இதுக்கு என்ன சொல்றீங்க?" என்று கேட்டதும் பலர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கோவிந்தசாமியே தொடர்ந்து சொல்லத் தொடங்கினான். "என் தங்கை வீட்டிலே இவ்வளவு வருஷமாக போனே வைத்துக்கொள்ளவில்லை. எதுக்கு வீண் செலவு, பக்கத்து வீட்டுலதான் இருக்கே என்று அப்புறம் இதனாலே (போன்) அவங்க கூட ஏதோ தகராறு வந்த பிறகு, இப்பத்தான் ஒரு வருஷமாக போன் இருக்கு, இப்ப பக்கத்திலே சுற்றி இருக்கிறவங்க அடிக்கடி இவங்க வீட்டுக்கு போன் பேச வந்து தொந்திரவு செய்றாங்களாம் என்று நான் பேசும் போது சொல்கிறார்கள், ஒரு வருடம் முன்னால் வரை இவங்க அடுத்தவங்களைத் தொந்தரவு பண்ணினதை எப்படி இவ்வளவு சீக்கிரம் இவங்க மறந்தாங்க என்பது எனக்குப் புரியவில்லை, அதுவுன் தவிற போன் பக்கத்திலேயே போன் பேச ரூ3 என்று உண்டியல் வேறு வைத்து போனைப் பூட்டி வைத்து இருக்கிறார்கள் அடுத்தவர்கள் மிஸ்யூஸ் செய்யக்கூடாது என்று. அது மட்டுமில்லை போனதடவை என் செலவில் U.S வந்தபோது இரண்டு நாளுக்கு ஒரு தடவை சென்னைக்கு, பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணி புருஷன் கிட்டேயும் குழந்தைகளோடும் ஒரு மணி நேரம் பேசுவா கவலையே இல்லாம நாம கொஞ்சம் போனைக் குறைத்துக்கொள் என்று சாந்தமாக சொன்னாக் கூட "இதுக்கெல்லாம் கூட உங்க அமெரிக்காவில கணக்குப் பார்ப்பீங்களா?" என்று ஒன்றும் தெரியாத மாதிரி கேட்பாள்

அப்புறம் பீக் டயத்தில் டெக்ஸாஸ், நியூ யார்க், கலி·போர்னியா, சிக்காகோ என்று தெரிஞ்சவங்களுக்கும் தெரியாதவர்களுக்கும் போன் அடிப்பா நான் பொறுக்க முடியாமல் "அம்மாடி கொஞ்சம் தயவு செய்து சாயங்காலம் 7 மணிக்கு மேலே பண்ணினா சீப்பாக இருக்கும்" என்று சொன்னபோது "இதுக்கெல்லாம் கூட நேரம் பார்க்க முடியுமா எப்ப தோன்றதோ அப்போதானே பேசமுடியும். பாவம் நீங்களும் U.S ல கஷ்டம்தான் படறீங்க நாங்கதான் தப்பா நீங்க நல்லா இருக்கீங்கன்னு நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்களே உங்களை விட அங்கே நன்றாகத் தான் இருக்கோம். இந்த மாதிரி எல்லாம் கேவலமா கணக்குப் பார்க்கமாட்டோம்" என்று நக்கலாக சொன்னா, என்னாலே இன்னும் அதை மறக்கமுடியவில்லை. என் அக்காவும் அவ புருஷனும் ஒண்ணுமே சொல்லமாட்டாங்க ஏன்னா போன் பில்லை நான் கட்டறதனாலே அதுவுமில்லாம சின்ன வயசிலிருந்து இரண்டு பேர்க்கும் பேச்சுவார்த்தையே ரொம்பக் கம்மிதான். அவளுக்கு போன் வந்த பிறகு ஒரு தடவை நான் சென்னை போனபோது ரொம்ப அர்ஜெண்டா ஆபிஸ¤க்கு போன் செய்யவேண்டி இருந்தது. அப்போ இவகிட்ட ஒரே ஒரு அர்ஜெண்ட் கால் U.S.க்கு பேசிக்கிறேன் சொன்னப்ப அவள் சொன்னாள் என் புருஷனுக்கு அதெல்லாம் பிடிக்காது என்று. ஏம்மா என் வீட்டுக்கு U.S வந்தேயே அப்போ இரண்டு நாளுக்கு ஒரு முறை உன் புருஷனோடு பேசினேயே அது மட்டும் அவருக்கு பிடித்ததா? என்று கேட்டேன். இதைக் கேட்டுக் கொண்டு உள்ளே இருந்த வந்த அவள் புருஷன் "என்னடி அவன் கிட்ட வெட்டிப் பேச்சு ஒண்ணு என்ன ஒன்பது போன் பண்ணிக்கச் சொல்லு எதிர்த்தா மாதிரிதான் STD போன் பூத் இருக்குது" என்று சொல்லி மறுபடியும் அவன் அறைக்குள் போய்விட்டான். எனக்கு ரத்தமெல்லாம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது என்றான். எங்களுக்கு எல்லாம் உள்ளூர ஆகா வல்லவனுக்கு வல்லவன் இவர்கள் குடும்பத்திலேயே இருப்பதைப் பற்றி சந்தோஷம் தான் இருந்தாலும் வெளியே சொல்லமுடியாததால் "ச்சூ..ச்சூ" கொட்டினோம்.

எப்படி இருக்குப் பாரு? என்று கோ.சாமி நீளமாகப் பேச அப்பவே ஒருவர் "ஐய்யையோ, அநியாயமாக இருக்கே" என்று சொல்ல கோ.சாமி "எதுயா அநியாயம்? எது அநியாயம்? யார் செய்யறது தப்பு? உங்க அப்பா அம்மா விட்டிலே பக்கதிலே இருக்கிறவங்க இதை மாதிரி போனை மிஸ்யூஸ் பண்ணினா அவங்க சும்மா இருப்பாங்களா? அவங்களும் இதையே தான் செய்வாங்க உடனே நீங்களும் வயசானாலும் ரொம்ப ஸ்மார்ட் என்று புகழ்வீர்கள் என் சிஸ்டர் என்ற உடனே என்னவோ கேவலமா பேசறியே?" என்று கேட்க சொன்னவர் "நான் ஒன்றும் சொல்லலையே நீங்க தானே உங்க சிஸ்டரைப் பற்றி கம்ப்ளெயின் பண்ணிணீங்க" என்று சொல்ல கோ.சாமி "இந்த கதைய மாத்தர வேலை எங்கிட்ட வேணாம் அதுக்கு வேற ஆளைப் பாரு" என்று சொல்லி "என் குடும்ப விஷயத்தைப் பற்றி பேச இங்கே யாருக்கும் அருகதை கிடையாது எங்களது பரம்பரையே மகாராஜா பரம்பரை தெரியுமா? சாப்பாடு ரெடியா? சீக்கிரம் சோத்தப் போடுங்க நான் கிளம்பணும்" என்று கூற எல்லோரும் இவனே அவன் குடும்பத்தைப் பற்றி ஒரு வண்டி குறை சொல்லி பிறகு திடீரென பழியை யார் மேலோ போடுவதைப் புரிந்துகொள்ள முடியாமல் "பேய் முழி" முழித்தனர்.

© TamilOnline.com