ஆசிய விளையாட்டுப் புதிர்கள்
செபாக் டக்ரா" என்றார் நண்பர். என்ன சொல்கிறார் என்று புரியாமல் முழித்தேன். புன்முறுவலுடன் "ஆசிய விளையாட்டு, தெரியாதா?" என்று புதிர் போட்டார். பிறகு விளக்கினார். செபாக் டக்ரா (Sepak Takraw) என்பது பழமையான ஆசிய விளையாட்டு - இது வாலி பாலைப் போன்றது. பிரம்பாலோ, பிளாஸ்டிக்கிலோ செய்யப்பட்ட பந்தை கையால் அடிக்காமல் கால் பந்தைப் போல் காலாலும், தலையாலும் அடிப்பார்கள். அந்த விளையாட்டு பார்ப்பதற்கே பாலே நடனம் போல் இருக்கும். பந்தை வேகமாக அடிக்க தலைகீழாக நின்று "சிசர் கிக்" செய்து மீண்டும் சுழன்று காலை ஊன்றி நிற்கும் அழகும், திறமையும் கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும்.

ஆசிய விளையாட்டுகளில் நடைபெறும் 29-வித ஆட்டப் பிரிவுகளில் செபாக் டக்ராவும் ஒன்று. நண்பர் போட்ட புதிருக்கு மட்டுமல்ல, நடந்து முடிந்த 15-ஆவது ஆசிய விளையாட்டுகளில் பல புதிர்களுக்கு விடையைத் தேட வேண்டியிருக்கிறது.

சௌதி அரேபியாவின் வடக்கே உள்ள தீபகற்ப நாடான குவடாரில் (Qatar) டிசம்பர் 1 முதல் 15 வரை இந்த வருடப் போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக்குழுவில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என்று யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. சுமார் 350 பேர் பங்கேற்றனர் என்ற மதிப்பீடு மட்டுமே கிடைத்திருக்கிறது. இது ஒரு புதிராக நிலவி வருகிறது.

தோஹா (Doha) நகரில் நடந்த போட்டிகளில் பல எதிர்பார்ப்புகளுடன் பங்கேற்ற இந்தியா பத்து தங்கத்தையும் சேர்த்து மொத்தம் 54 பதக்கங்களை வென்று எட்டாவது இடத்தைத் தான் கைப்பற்றியிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், கசகஸ்தான் (4-வது இடம்), உஸ்பெகிஸ்தான் (7-வது இடம்) என்று வரைபடத்தில் தேடவேண்டிய நாடுகளைவிட மோசமான நிலையை எட்டியதுதான். 2010-ல் காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடக்கவுள்ளன. 2014-ல் ஆசிய விளையாட்டு களை நடத்தவும், 2016-ல் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தவும் இந்தியா விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிலையில் "விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் எதிர்காலம் என்ன?" என்ற புதிருக்கு யாரிடமும் விடையில்லை.

இந்தப் போட்டிகளில் இந்தியா மிக மோசமாக அடைந்த தோல்வி ஹாக்கியில் தான். முதன் முறையாக இந்தியா அரை இறுதிக்குக்கூட முன்னேறவில்லை. அதனால் 2008-ல் சீனாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வு பெறவில்லை. ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இப்போட்டி களில் வென்று ஒலிம்பிக்கில் இடம் பெறுமா? இந்திய ஹாக்கியின் பழம் புகழ் திரும்புமா? எதிர்காலம் மாறுமா? புதிர்தான், விடையில்லை.

தமிழ் நாட்டில் தோன்றியதாக நாம் பெருமைப்படும் கபடியில் இந்தியா ஐந்தாவது முறையாக தொடர்ந்து தங்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது. "இது இன்னும் எத்தனை நாளைக்கு?" என்று குதர்கமாகக் கேட்கிறார்கள் சில விமர்சகர்கள். "மற்ற நாடுகள் இந்த ஆட்டத்தைச் சரிவரப் புரிந்து கொண்டு ஆடத் துவங்கினால், ஹாக்கியில் ஆனது போல் இந்தியா கபடியிலும் பின் தங்கிவிடும்" என்கிறார்கள். அதைக் கேட்டு நமது மனம் கனத்தாலும், அது நடக்காது என்ற நம்பிக்கையோடு அவர்கள் போடும் புதிரை எதிர் கொள்கிறோம்.

துப்பாக்கி சுடும் போட்டிகளில் இந்தியா அபாரமாக ஆடி 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்தப் போட்டிகளில் முக்கிய நாயகன் இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பல் ராணா. இவர் 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதோடு, தனது குழுவுடன் இணைந்து மற்றொரு தங்கத்தையும் வென்றிருக்கிறார். 25 மீட்டர் போட்டிகளில் 590 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்திருக்கிறார். இவரை இந்த வருட ஆசியப் போட்டிகளின் ஆட்ட நாயகனாகக் கருதுவதாக அறிவித்ததைத் தவறாகப் புரிந்து கொண்ட இந்திய அதிகாரிகள் இந்தியா திரும்பிச் சென்ற இவரை தோஹாவிற்கு மீண்டும் வரவழைத் தனர். இறுதியில் கொரியாவைச் சேர்ந்த டே ஹுவான் பார்க் (Tae Hwan Park) என்ற நீச்சல் வீரருக்கு அந்தப் பட்டம் வழங்கப் பட்டது. சரியான முடிவைத் தெரிந்து கொள்ளாமல் ஏன் இந்திய அதிகாரிகள் அவசரமான அறிவிப்பைச் செய்து, அவமானத்துடன் மன்னிப்பு கேட்டார்கள் என்பதும் ஒரு புதிர்தான்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த சாந்தி என்ற வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மிக ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த அவரைப் பாராட்டாத பிரமுகர்களோ, பத்திரிகைகளோ இல்லை. திடீரென்று அவர் பெண்மைக் குணம் அற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்டு அவரது பதக்கத்தை இழக்கும் நிலையில் இருக்கிறார். இவரது குறையை அறிந்தே இந்தியத் தேர்வுக் குழு இவரை அணியில் சேர்த்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழும்பியிருக்கிறது. இந்திய நாட்டுக்கும், போட்டி விளையாட்டுகளுக்கும், முக்கியமாக சாந்திக்கும் அவமானம் தேடித்தரும் செயலை இந்திய தேர்வுக்குழு செய்தது ஏன் என்ற புதிரான கேள்வி அனைவர் மனத்திலும் எழும்பியிருக்கிறது.

இந்த வருடப் போட்டிகளில் மற்றொரு புதிர் டென்னிஸ் ஆட்டத்தில். சானியா மிர்ஸா ஒற்றையர் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதோ, லியாண்டர் பேஸ் சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் தங்கமும், மகேஷ் பூபதியுடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் தங்கம் வென்றதோ புதிரல்ல. லியாண்டருக்கும், மகேஷுக்கும் இடையே இருக்கும் பிளவு மேலும் விரிவானதும், ஒருவரை ஒருவர் தாக்கி பத்திரிகைகளில் பேட்டி அளித்ததும் தான் புதிர். இவர்கள் தங்களிடையே உள்ள வித்தியாசங்களை மறந்து மீண்டும் இணைந்து விளையாடுவார்களா? மற்ற போட்டிகளில் இல்லையென்றாலும், டேவிஸ் கப், ஆசிய விளையாட்டுகள், ஒலிம்பிக்ஸ் போன்ற ஆட்டங்களில் இணைந்து இந்தியாவிற்காக விளையாடி வரும் இவர்கள் அதைத் தொடர்வார்களா?நமக்குப் புதிர் போடாமல், எதிராளிகளுக்குப் புதிர் போட்டு அனைவரின் சபாஷையும் பெற்றது இந்தியாவின் சதுரங்கக் குழுதான். கோனேரு ஹம்பி (Koneru Humpy) மிகச் சிறப்பாக ஆடி தனி ஆட்டத்தில் தங்கத் தையும், குழுவுடன் இணைந்து மற்றொரு தங்கத்தையும் பெற்றுத் தந்திருக்கிறார். இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முன்னரே புள்ளி வித்தியாசக் கணக்கில் இந்தியா தங்கத்தைக் கைப்பற்றிய நிலையில் இருந்தது இந்தியக் குழு எவ்வளவு திறமையானது என்பதற்குச் சான்று.

தடகளப் போட்டிகளில் (Track and Field) இந்தியாவிற்கு ஒரே ஒரு தங்கம் 4x400 ரிலே ஆட்டத்தில் மட்டும் கிடைத்திருக்கிறது. நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கத்தை எதிர் பார்த்த அஞ்சு பேபி ஜார்ஜுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்திருக்கிறது. துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் சமரேஷ் ஜங், ராஜ்ய வர்தன் சிங் போன்ற சிறந்த ஆட்டக்காரர்களும் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இந்தியக் குழுவின் அதிகாரிகள் இந்தப் புதிருக்கும் விடை தேடி வருகின்றனர்.

மற்ற பல போட்டிகளில் இந்தியா இருந்த இடமே தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளர் "இந்தியர்கள் இங்கே, அங்கே என்று எங்கும் இருந்தனர். அதே சமயம் எங்கும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியா காணாமல் போன ஆட்டங்களில் ஒன்று செபாக் டக்ரா. முதலில் இந்த ஆட்டத்தில் பங்கு பெறா விட்டாலும், இந்தியா கடைசி நிமிடத்தில் தனது குழுவைப் பதிவு செய்தது. இந்த மனமாற்றத்திற்குக் காரணம் ஒரு புதிர்தான்.

தாய்லாந்தில் இருக்கும் ஒரு பழமையான ஓவியத்தில் ஹனுமான் தனது வானரப் படைகளுடன் செபாக் டக்ரா விளையாடு வதைப் போல் சித்தரிக்கப் பட்டுள்ளதாம். விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய நாம் அந்த ஹனுமானைத்தான் பிரார்த்திக்க வேண்டும்.

சேசி

© TamilOnline.com