இவரால் முடியும், இவர் மூலம் நம்மாலும் முடியும்
கடந்த சில வாரங்களாக வேலை நிமித்தம் ஹைதராபாதில் இருக்கிறேன். அங்கு ஒரு நண்பரின் மூலம் பல தெலுங்கு எழுத்தாளர்களைப் பற்றியும், கவிஞர்களைப் பற்றியும் அறியக் கிடைத்தது. (ஒரு கவிஞர் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, 'வால்நட்சத்திரங்கள் தோன்றினால் அது ஒரு அற்புதமான இயற்கையின் காட்சி எனக் கொள்ள வேண்டும்; கெட்ட நிமித்தமாக எண்ணக்கூடாது' என்று எழுதியிருக்கிறார்!). ஸ்ரீஸ்ரீ, ஆருத்ரா, ரோனங்கி அப்பளசுவாமி, சாகந்தி சோமையாஜுலு (சாசோ), நாராயண பாபு என்று பலரைப் பற்றி அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

'வெவ்வேறு மாநிலத்தைச் சார்ந்த இரு இந்தியர்கள் இலக்கியம் பற்றிப் பேசுவார்களேயானால், அநேகமாக அது இந்திய எழுத்தாளர்களைப் பற்றி இருக்காது' என்ற பொருள் படும் வகையில், தமிழ் இலக்கிய உலகில் தனிமுத்திரை பதித்துள்ள திரு. சுந்தர ராமசாமி அவர்கள், அவரது 'ஜே. ஜே. சில குறிப்புகள்' நாவலில் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. இப்படி நமக்கு அருகில் இருந்த, இருக்கும் படைப்பாளிகளைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமல், கீட்ஸ், ஷெல்லி, என்று மட்டுமே பேசமுடிகின்ற நிலை மாற வேண்டும்; மாற்றுவது நமது கடமை.

புதிய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களுக்கு தென்றல் வாசகர்கள் சார்பிலும், தென்றல் படைப்பாளர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள். பிற துறைகளில் அவர் காட்டிய செயல்வீரமும், புரிந்த சாதனைகளும் அவரது தலைமையில் நாட்டில் எல்லாத்துறைகளிலும் தேவைப்படுகின்றன. உத்வேகம் செறிந்த அவரது முதல் உரையைக் கேட்டபின்னர், நிச்சயமாக நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்று தோன்றுகிறது. 'குடியரசுத் தலைவர் பதவிக்கு அதிகாரம் ஏதும் இல்லை; அலங்காரப் பதவிதான். இதில் யாரும் எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டுவர முடியாது' என்று முழங்கியவர்கள், முணுமுணுத்தவர்கள் பலர். எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. இப்போது இல்லை! இவரால் முடியும்; இவர் மூலம் நம்மாலும் முடியும் என்ற பெரும் நம்பிக்கை வந்திருக்கிறது. 'என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்' என்றிராமல், நாம் அனைவரும் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிப்போம் - செயல்படுவோம்.

தென்றல் இம்மாதம் மேலும் ஒரு இலக்கைத் தொடுகிறது. உங்கள் கையில் இருக்கும் இந்த இதழ் முதல் ஒவ்வொரு மாதமும் 6000 பிரதிகள் அச்சிடப்படும். வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு எங்கள் நன்றி. இதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணம், இந்த மாதம் முதல், அட்லாண்டா நகரிலும், மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் தென்றலின் வீச்சு அதிகரித்துள்ளது என்பதே. அதற்குப் பின் இருப்பவர் நண்பர் அட்லாண்டா கணேஷ் - தென்றல் குழுவின் புதிய உறுப்பினரான அவரை வரவேற்கிறோம்.

ரேவதி அவர்களின் 'Mitr - my friend' திரைப்படம் தேசிய அளவில் விருது பெற்றுள்ளது. அவருக்கும், நடிகை ஷோபனாவுக்கும் வாழ்த்துக்கள். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமே கணக்கிட்டுக்கொண்டிருந்த காலம் மாறி, அவர்களின் கலை மற்றும் கலாசாரத் தாக்கங்களையும் இந்தியா உணர ஆரம்பிப்பதின் பிரதிபலிப்புதான் இது.

செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள தமிழிணைய மாநாட்டில், முதலாவது உலகத் தமிழ் இணையப் போட்டியில் சிறுவர் சிறுமியர்களை பங்கேற்க உற்சாகப்படுத்துங்கள். இது இணையத் தமிழ் வளர்ச்சியில் பங்கேற்க ஒரு வாய்ப்பு.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
ஆகஸ்ட் - 2002

© TamilOnline.com