நமக்கு நன்கு பரிச்சியமான பாலோ ஆல்டோவில் உள்ள கப்பர்லி தியேட்டரில் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்ற நித்யா வெங்கடேஸ்வரனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நமக்குப் பரிச்சியமானதல்ல. இந்த பரதநாட்டியத் தாரகையின் அழகு, ரிதம் மற்றும் உணர்ச்சிகள் நம் கண்முன்னே இந்தியக் கதைகளிலிருந்து கடவுள்கள், பெண் தெய்வங்கள், மனிதன் மற்றும் குழந்தை ஆகியவற்றை மேடையில் தோன்றச் செய்து நம்மைக் கட்டிவைத்திருந்தார். பே ஏரியாவில் உள்ள மற்ற மாணவர்களைப் போலவே நித்யாவும் தனது நான்காவது வயது முதல் பரதத்தை San Joseல் உள்ள ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியில் திருமதி. விஷால் ரமணியிடம் பயின்று வருகிறார்.
சரியாக 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலியுடன் அவரது நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நாராயண தீர்த்தர் எழுதிய வினாயகரைப் பற்றிய பாடலான ஜெய ஜெய சுவாமின் ஜெய ஜெய. அவரது ஜதீஸ்வரம் வித்தியாசமாக இருந்தது. கடினமான நிருத்தம் (தூய நடன அசைவுகள்) இருந்தும் நித்யா இதனை வெகு லாவகமாக ஆடினார். அவர் தென்றலின் ஊடே புகுந்துப் பறப்பது போல இருந்தது. அதே சமயம் அவரது கால்கள் சிக்கலான லயங்களை அழகாகவும் அற்புதமாகவும் பிரதிபலித்தன.
ராகமாலிகையில் அமைந்த வர்ணம் தான் இந்நிகழ்ச்சியின் முத்திரையாக அமைந்தது. கிருஷ்ணரைப் பற்றிய இந்தப் பாடலின் சாராம்சத்தை உணர்வுபூர்வமாக நித்யா வெளிபடுத்தினார். கெளரவ இளவரசர்களால் திரெளபதியின் சேலையை உருவும் காட்சியின் போது நித்யா திரெளபதியாகவே மாறி அவளின் கோபத்தை, அவமானத்தை, இறுதியாக சரணாகதியை மேடையில் தோற்றுவித்து ரசிகர்களை துரியோதனனின் சபைக்கே இட்டுச் சென்றார். கிருஷ்ணரால் ஏமாற்றப்பட்ட கர்ணன் தனது உயிரையே தானமாகக் கொடுக்க முன்வருவதையும் அதன் காரணமாக இறுதியில் இறப்பதையும் நித்யா உணர்ச்சிபூர்வமாகவும் தத்ரூபமாகவும் நம் கண் முன்னே படைத்தார். ஒரு சாதாரண நடனமணி என்று தன்னை ஒதுக்கித் தள்ளமுடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். கர்ணனின் உடம்பிலிருந்து ரத்தம் சொட்டுவது போலவும் இறுதியில் கண்ணனிடம் மோட்சம் அடைந்ததையும் நித்யா நிகழ்த்திக்காட்டியது நம் கண் முன்னே இன்னமும் நிழலாடுகிறது. அவரது ஒவ்வொரு ஜதியையும் ரசிகர்கள் கைத் தட்டி ஆரவாரித்தது குறிப்பிடத்தக்கது. மேடையில் இங்கே தான் இருக்கிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நளினமான பாதங்கள் அவரை மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்றதை மறுக்கமுடியாது. நித்யா ஒரு நிகரற்ற நாட்டியத் தாரகை என்பதில் சந்தேகமே இல்லை.
இடைவேளைக்குப் பிறகு, மஞ்சி ராகத்தில் அமைந்த வருகலாமோ (நந்தனார் சரித்திரத் திலிருந்து ஒரு பாடல்), சிவ சக்தி ராகத்தில் அமைந்த பாரதியாரின் சிவசக்தி, பாபநாசம் சிவனின் கீர்த்தனையான என்ன தவம் செய்தனை மற்றும் ஒரு அதிவேக தில்லானா ஆகியவை இடம்பெற்றன. தீண்டத்தகாதவரான நந்தனாராக நித்யா மாறியது அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழித்தது. குழந்தை கிருஷ்ணன் உயிர் பெற்று நம் முன்னே தோன்றியது போல இருந்தது "என்ன தவம் செய்தனை". சிவசக்தி பாடலுக்கு அவரது நடனம் அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிச் சென்றது.
தில்லானாவில் மிருதங்கத்துடனான ஜுகல்பந்தி காண்போரை அசத்திவிட்டது. நடனம் அமைத்திருந்த விஷால் ரமணி மற்றும் குழுமியிருந்த இசைக் கலைஞர்களை பார்வையாளர்கள் கைத்தட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தது அனைவருக்கும் மன நிறைவினைத் தந்தது. வர்ணம் மற்றும் தில்லானாவை இயற்றியதோடு மட்டுமல்லாமல் நட்டுவாங்கமும் அளித்த மதுரை R. முரளிதரன் மிகச் சிறப்பாகச் செய்தார் என்றால் அது மிகையாகாது. லயத்தின் முடிசூடா ராஜாவும் கூட.
அண்மையில் சென்னையில் நித்யா நிகழ்த்திய நாட்டிய நிகழ்ச்சியை அப்படியே கப்பர்லி தியேட்டரில், சென்னையில் அவரோடு பங்காற்றிய அதே கலைஞர்களைக் கொண்டு மறுபதிப்புச் செய்தார். நித்யாவின் தனி ஆவர்தனம், சென்ற ஆண்டு சென்னை பாரதிய வித்யா பவனில் ஸ்ரீ கபாலி ·பைன் ஆர்ட்ஸ் துவக்க விழாவில் அவர் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கியபோது தொடங்கியது. San Joseல் திருமதி. விஷால் ரமணியிடம் பயிற்சியோடு சென்னையில் திரு. மதுரை R. முரளிதரனின் வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைத்தது அவரது அதிர்ஷ்டமே. சென்னையில், திரு. முரளிதரன் ஏற்பாடு செய்திருந்த இசைக் குழுவினரோடு ஒத்திகை பார்த்து, நான்கு நிகழ்ச்சிகளை வழங்கி பெரிதும் பாராட்டப்பட்டார்.
நித்யா வெங்கடேஸ்வரனுள் ஒரு அனுபவம் வாய்ந்த கலைஞரைக் கண்டது பெரிதும் மன நிறைவைத் தந்தது. இந்தக் கலையின் மீது அவர் ஆசையை மேன்மேலும் வளர்த்துக்கொண்டதோடு மட்டுமல்லா மல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு, மலர்ந்து, இன்று ஒரு திறமையான, நிகரற்ற நாட்டியத் தாரகையாகி இருக்கிறார். |