ஆகஸ்ட் 10 சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் கப்பர்லித் தியேட்டரின் பின்புறம் உள்ள ஒரு பெரிய அறை. சுமார் 100 பேர்களுக்கு மேல் அமர்ந்து இருந்தார்கள். சமொசா, காபியுடன் சுடச் சுடத் தமிழ் சொற்பொழிவுகளும் இலவசமாக வழங்கப் பட்டது. எங்கே, என்ன செய்தி என்று கேட் கின்றீர்களா? விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்திய தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாதான் அது.
தமிழ் மன்றத்தின் புதிய தலைவர் திரு.சிவா சேஷப்பன் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். திரு.தில்லைக் குமரன் அவர்கள், தமிழில் செய்யப்பட்ட பாவாணரைப் பற்றிய ஒரு படக் காட்சியைக் (PowerPoint presentation) காண்பித்து வந்தவர்களை அதிசயிக்க வைத்தார். மூன்று அறிஞர் பெருமக்கள் இந்தியாவிலிருந்து வந்து சிறப்புரை யாற்றி விழாவுக்கு பெருமை செய்தார்கள்.
முனைவர் திரு.மதிவாணன், “தமிழும் உலக மொழிகளும்” என்ற தலைப்பில் தேவநேயப் பாவாணரின் மொழி ஆராய்ச்சிகள் பற்றிப் பேசினார். இவர் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் மாணவர். அவருடன் இணைந்து மொழி ஆராய்ச் சிகள் செய்திருக்கிறார். Etymology எனப்படும் சொற்பிறப்பியல், Language Archeology எனப்படும் மொழி அகழ்வு ஆராய்ச்சித் துறைகளில் புகழ் பெற்ற அறிஞர் இவர்.
பேராசிரியர் திருமதி. நிர்மலா மோகன் 'கண்ண தாசன் காவியத் தாயின் இளைய மகன்' என்ற தலைப்பில் பேசினார். பேச்சின் நடுவில் வரும் எடுத்துக் காட்டுகளாக அமைந்த பாடல்களை இவரது இனிய குரலில் பாடி கேட்டவர்களை அயர வைத்தார்.
பேராசிரியர் நிர்மலா மோகன் மதுரை செந்தமிழ் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் புதுக்கவிதை, மகாகவி பாரதி, பாரதிதாசன், சங்கத்தமிழ் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
முனைவர் திரு. இரா.மோகன் அவர்கள் 'சிரித்தாலே இனிக்கும்' என்ற தலைப்பில் வந்தவர்களைச் சிரிக்க வைத்து மகிழ வைத்தார். முனைவர் இரா. மோகன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். அதாவது Chairman of Faculty of Tamil Studies, Madurai Kamajar University. தேவநேயப் பாவாணரின் திருக்குறள் மரபுரையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இவர் மிகச் சிறந்த பேச்சாளர். இவர் தமிழ் நாட்டில் பல நூற்றுக்கணக்கான பட்டி மன்றங்களில் நடுவராகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
சிந்திக்க வைத்த மதிவாணன்:
தேவநேயப் பாவாணரின் ஆராய்ச்சியிலிருந்து, வருகின்ற கருத்தாவது, 'உலகில் உள்ள மொழிகளில், 6 மொழிகள் மற்ற எல்லா மொழிகளும் உருவாகக் காரணமான தாய் மொழிகளாக இருக்கின்றன. இந்த 6 மொழிகளிலே தமிழே மூத்த முதல் மொழியாக விளங்குகின்றது.' மற்ற ஐந்து மொழிகளூம் தமிழில் உள்ள பல சொற்களை பிரதிபலிக்கின்றன. மேலும் உலகிலுள்ள பிற மொழிகளிலும் தமிழில் உள்ள பல சொற்கள் காணப்படுகின்றன. அவர் கோடிட்டுக் காட்டிய சில உதாரணங்கள்:
தமிழில் 'காண்' என்றால் பார் என்று பொருள். சீன மொழியில் 'கண்' என்றால் பார் என்று பொருள்.
தமிழில் 'ஆ' என்றால் மாடு என்று பொருள். எகிப்திய மொழியில் 'ஆ' என்றால் மாடு என்று பொருள்.
தமிழில் 'பொங்கலோ பொங்கல்' என்கிறார்கள். கொரிய மொழியில் 'ஹொங்காலோ, ஹொங்காலோ' என்கிறார்கள்.
இரசிக்க வைத்த திருமதி.நிர்மலா:
கண்ணதாசன் அவர்கள், எல்லோரும், எல்லா சந்தர்ப்பங்களிலும் கேட்டு இன்புறும் படியான பாடல்களை தந்திருக்கிறார் என்கிறார் இவர்.
தாலாட்டு - பூஞ்சிட்டுக் கன்னங்கள்.
காதல்- பார்த்தேன், இரசித்தேன்
திருமண விழா- பூமழை தூவி
தத்துவப் பாடல்கள்- போனால் போகட்டும் போடா
நம்பிக்கைப் பாடல்கள்- அதோ அந்த பறவை போல
சோகப்பாடல்கள்- மாலைப் பொழுதின் மயக்கத்திலே
தனது தமிழ் மொழித்திறத்தாலும், நகைச்சுவை கலந்த பேச்சாலும் அனைவரையும் கவரும் வகையில் சொற்பொழிவாற்றி மலரும் நினைவுகளாகக் கவிஞரின் பாடல்களைக் கொண்டு வந்தார்.
சிரிக்க வைத்த இரா.மோகன்:
கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், கல்லூரி நகைச்சுவையுடன் பேச்சை ஆரம்பித்தார்.
'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற திருக்குறளை மாணவர்களுக்குக் கற்பித்தாராம் இவர். மறுநாள் வகுப்பிற்குள் இவர் நுழைந்ததும் ஒரு மாணவன் நகைத்தானாம். ஏனப்பா சிரிக்கிறாய் என்று கேட்டால், “நீங்கள் தானே இடுக்கண் வந்தால் நகைக்கச் சொன்னீர்கள்” என்றானாம்.
பேராசிரியர். மு. வரதராசனார் அவர்கள், என்றுமே வாடாத பூ படிப்பு என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். அந்த கருத்தை எதிர்பார்த்து, என்றுமே வாடாத பூ எது? என்று கேட்டாராம் ஆசிரியர். அதற்கு மாணவரின் பதில்: ”செருப்பு”
மேலும் சில குறிப்புகள்:
தேர்தலுக்குப் பிறகு புதியத் தமிழ்மன்ற செயற்குழு பங்கேற்று நடத்திய முதல் நிகழ்ச்சியாக இந்த பாவாணர் நூற்றாண்டு விழா அமைந்தது. புதிய மற்றும் பழைய செயற்குழு உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் எல்லா ஏற்பாடுகளிலும் தோள் கொடுத்து நடத்தியது மிகவும் பாராட்டுக்கு உரியது.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தமிழ்ப் பெரியோர்களின் படங்களும் அவர்கள் பற்றிய விவரங்களும் இந்த அரங்கத்திலே கண்காட்சியாக வைத்திருந்தார்கள். மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி மட்டுமல்லாமல், கோவை அய்யாமுத்து, கடலூர் அஞ்சலை அம்மாள், மதுரை மௌலானா சாகிப் போன்ற அரிய பெருமக்களின் படங்களும் காணப்பட்டன.
திரு.சிவசுப்பிரமணிய ராஜா அவர்கள் வந்திருந்த விருந்தினர்களுக்கும், தமிழ் ஆதரவாளர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தித் தந்த மன்றத்திற்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.
இது போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ளவர்கள் www.bayareatamilmanram.org என்ற வலைத் தளத்தில் சென்று, வர இருக்கின்ற நிகழ்ச்சிகளைக் காணலாம்.
பாகீரதி சேஷப்பன்.
புகைப்படங்கள்: ஸ்ரீகாந்த் K.S. |