Atlantaவில் ஆகஸ்ட் 15
சுதந்திர திருநாள், ஆகஸ்ட் 15. அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் ஜூலை 4ஆம் தேதியை கொண்டாடுவதுடன் மறக்காமல் தனது தாய்நாட்டு சுதந்திர தினமான (பிறந்த மண்ணின்) ஆகஸ்ட் 15ஐயும் அமெரிக்காவில் வாழ்ந்தாலும், கோலகல மாக கொண்டாடுகிறார்கள். பார்த்தாலே பரவசம்!

IACA (Indo American Cultural Association) ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் Gwinnett Civil Center லும், Robert Ferst அரங்கிலும் இந்த விழாவை அருமையாக அழகாக நடத்தினார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், திருமதி பத்மினி ஷர்மா அவர்கள் இந்த IACA வின் Vice President. இவர் ஒரு இந்திய (பச்சை தமிழர் - பெண்பாலில் 'பச்சை தமிழச்சி' என்றும் சொல்லலாம்.)

அட்லாண்டா மாநகரில் பத்தாயிரம் இந்திய தலைகளை இந்த விழாவில் பார்க்க முடிந்தது. அது ஒரு கண்கொள்ளா காட்சி. காலையில் 11.00 மணிக்கு விழா தொடக்கம். நமது டென்னிஸ் ஸ்டார் விஜய் அமிர்தராஜ் அவர்களும் Georta Governor Ray Barnes அவர்களும் விழாவை குத்து விளக்கு ஏற்ற மங்களகரமாக விழா தொடங்கியது. திரு விஜய் அமிர்தராஜ் அவர்கள் இன்னும் சிறிது நேரம் இருந்திருக்கலாம். அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருந்தாலும் சிறிது தாமதமாக வந்தவர்கள் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவருக்கு என்ன அவசர வேலையோ சீக்கிரம் கிளம்பி போய்விட்டார்.

அரங்கில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் விரிக்கப்பட்டிருந்தன. எத்தனையோ வித விதமான பொருட்கள் மக்களை கவர விதவிதமான விளம்பரங்கள். இன்னொரு பக்கம் அலை மோதும் கூட்டம். என்னவென்று எட்டி பார்த்தால் அட்லாண் டாவின் அத்தனை இந்திய ரெஸ்டாரண்டுகளும் சைவ அசைவ உணவு வகைகளோடு. வரிசையில் நின்று நமது உணவை வாங்கி சென்று இடத்தை பிடித்து அமர்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. இடத்தை பிடித்தவர்கள் முகத்தில் ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற பெருமிதம் தெரிந்தது.

எத்தனை கலை நிகழ்ச்சிகள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிய்த்து ஒதறி விட்டார்கள். எதை பார்ப்பது, எதை விடுவது என்று தெரியவில்லை. அத்தனை நிகழ்ச்சிகளும் அருமை. அத்தனை பேரிடமும் அதிக உழைப்பு தெரிந்தது.

கூட்டத்தில் ஏதேச்சியாக திரும்பி பார்த்தால் நமது வீரபாண்டிய கட்டபொம்மனும், கவிஞர் பாரதியாரும் தத்ரூபமாக கண்ணில் தென் பட்டார்கள். தமிழர்கள் உண்மையிலேயே அசந்து போனார்கள். அவர்களை பற்றி பின்னால் பார்ப்போம்.

கலை நிகழ்ச்சிகள் பல இந்திய மொழிகளில் நடைபெற்றது. அங்கும் தமிழர்கள் கொடிகட்டி பறந்தனர். திரு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த முதல்வன் படத்திலிருந்து 'உப்பு கருவாடு' பாடலுக்கு மூன்று ஜோடிகள் மிக லாவகமாக நடனமாடி கைதட்டல்களை அள்ளி சென்றனர். அடுத்து பதினாறு வயதிற்கு மேல் உள்ளவர்களின் நிகழ்ச்சில் நமது தமிழ் மகளிர் தொன்று தொட்ட கலையான 'கும்மி' நடனமாடி ஆடியன்சை அசத்தி விட்டனர்.

ஒரு நிமிடம் ஆடியவர்கள் 16 + அல்ல. 16 +++ அத்தனை பேரும் இரு குழந்தைகளின் மம்மிகள். கும்மி ஆட்டத்தை பின்னி எடுத்துவிட்டார்கள். கரகோஷம் வானை பிளந்தது. கலை நிகழ்ச்சி போட்டியின் எந்த கேள்வியும் இல்லாமல் முதல் பரிசை தட்டி சென்றனர். அந்த மம்மிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாழ்க! வளர்க!

இதை இயக்கி அத்தனை பேரையும் ஆட்டிவித்த திருமதி உமா முரளிதர் அவர்களையும் எத்தனை பாராட்டினாலும் தகும். தொடர்ந்து அட்லாண் டாவிற்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தருமாறு விரும்பி கேட்டு கொள்கிறோம். ஆடிய எட்டு பெண் களும் பார்ப்பவர்களை அசத்தியது பொய்யல்ல. முதல் பரிசை தட்டிச் சென்று அடுத்த நாள் 18ம் தேதி Robert Ferst கலை அரங்கிலும் மறுபடி இந்த கும்மி ஆட்டத்தை ஆடி மக்களை மகிழ்வித்தார்கள்.

வருடா வருடம் இந்த இந்திய சுதந்திர தினத்தை அருமையாக கொண்டாடும் IACA விற்கும் நமது நல்வாழ்த்துக்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் கவிஞன் பாரதியாருக்கும் இங்கே என்ன வேலை?

முன்பே சொன்னபடி திடீரென்று கட்டபொம்மனை யும் பாரதியாரையும் அந்த கூட்டத்தில் பார்த்து வியந்து ஐய்யா, இந்த வேடத்திலே நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோதுதான் தெரிந்தது அவர்கள் இருவரும் தமிழ் மண்ணின் பிரதிநிதிகளாக துவக்க விழாவில் நடந்த Paradeல் பங்கு பெற்றவர்கள் என்று. கட்டபொம்மனுக்கு அந்த உடையும், மீசையும், Make-up யும் கனகச்சிதம்! எப்படி இந்த வேடப் பொருத்தம்? எப்படி இவர் திடீரென்று கட்டபொம்மன் ஆனார் என்ற ஆவலில் அவருடன் பேசியபொழுதுதான் தெரிந்தது அவருக்கு இது ஒன்றும் புதிதல்ல. தனது 7வது வயதிலிருந்து கட்டபொம்மன் வேடத்தை மேடைகளில் பலமுறை நடித்து காட்டியிருக்கிறார் என்று.

7 வயதிலேயே கட்டபொம்மன் வேடமா என்று கேட்டால் ஆமாம் எனது தந்தை சிவாஜி அவர்களின் தீவிர ரசிகர். கட்டபொம்மன் படத்தை பார்த்த திலிருந்து அந்த நடிப்பை பார்த்து அசந்து போய் ஆச்சர்யப்பட்டு கட்டபொம்மனின் வீரத்தை உணர்ந்து அவன் சுதந்திர தாகத்தை புரிந்து அந்த வீரத்தில் ஒரு சிறிய பங்காவது தனது மகனுக்கு இருக்க வேண்டும் என்ற வெறியில் தனது மகனை 7 வயதிலேயே ஜூனியர் கட்ட பொம்மனாக ஆக்கிவிட்டார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? இவரும் அந்த வயதிலிருந்தே கட்டபொம்மனின் வீர வசனங்களை மேடையில் பேசி மக்களின் கைத்தட்டலை தவறாமல் பெற்று வந்தார். அவர்தான் எங்கள் அட்லாண்டா வாசியான திரு வி.கே. ரங்கா அவர்கள். ஜூலை மாதம், சிகாகோ மாநகரில் நடந்த FETNAவில் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பாக இவர் அங்கே சென்று 25 நிமிடங்கள் SOLOவாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலிருந்து மறைந்த மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் பேசிய வசனங்களை நடித்து காட்டி அமோக பாராட்டுதல்களை பெற்று அட்லாண்டா தமிழ் சங்கத்திற்கு பெருமை தேடி கொடுத்திருக்கிறார். இவரது திறமை வாழ்க, வளர்க. இவரது கலை தாகம் தீர நமது வாழ்த்துக்கள். கம்ப்யூட்டர் துறையில் முழு நேரம் உள்ள இவர் கலைத் துறையிலும் ஒரு நல்ல நடிகராக பிரகாசிக்க வேண்டும் என்று தீராத தாகத்தை மனதில் வைத்திருக்கிறார். இவரது உறுதி நிச்சயமாக இவரை இவர் கம்ப்யூட்டர் துறையில் பிரகாசிப்பது போலவே பிரகாசிக்க வைக்கும் என்பது உறுதி. எல்லாம் வல்ல இறைவனிடம் இவரது கலைதாகம் தீர பிரார்த்திக்கிறோம்.

ஐய்யயோ புரட்சிக் கவிஞர் பாரதியை மறந்து விட்டோமே. ஒளிபடைத்த கண்களோடு 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்று பாரதியை போலவே இவரது வேட பொருத்தம் அமைந்து இருந்தது. ஐயா ஒரு கவிதை சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டபொழுது நல்ல கதை ஒன்று சொன்னார். சிறு வயதிலிருந்தே ஒரு பாரதி வெறியர். அதற்காகவே பாரதியார் போலவே மீசையை வளர்த்து இருக்கிறார். கவிதைகளில் மிகவும் நாட்டம் உள்ளவர். எண்ணங்களை எழுத்தில் வடித்து சரியான நேரத்தில் வெளியிட காத்திருக்கிறார். பாரதி படத்தை பார்த்து அவர் குடும்பஸ்தனாக இருந்து பட்ட கஷ்டங்களை பார்த்து பயந்து இன்னும் single ஆகவே இருக்கிறார். ஒருவேளை பாரதி என்ற பெயருள்ள பெண்ணுக்காக காத்து இருக்கிறாரோ? பாரதியாரே அறிவர். இந்த கூறிய நாராயணனின் எண்ணக் கதிர்கள் உலகம் முழுவதும் பரவ நமது வாழ்த்துக்கள்.

தகவல்: அட்லாண்டா கணேஷ்
எழுதியவர்: வி.கே. ரங்கா

© TamilOnline.com