"டாக்டர், என் மகன் ஆதித்யா ரெண்டு மாசமா பேசவே இல்லை" என்றார் சிவராமன் பதட்டமாக.
பதினாறு வயது ஆதித்யாவின் முன் அந்த பிரபல உளவியல் நிபுணர் ஒரு காகிதத்தை வைத்தார். "ஆதித்யா, உன் மனசுல முதல்ல என்ன தோணுதோ அதை எழுது" என்றார்.
ஆதித்யா எழுதினான்: 'ஜார்ஜ் சோரோஸ்'.
"என்னைக் குழப்பிட்டே" என்றார் டாக்டர் புன்னகைத்தபடியே.
"நான் உனக்கு எல்லா வசதியும் கிடைக்கணும்னு உலகமெல்லாம் சுத்தி அலையறேன். நீ என்னடான்னா ஒரு நாணய வர்த்தகர் பேரை எழுதிக் காட்டறே!" என்றார் சிவராமன் எரிச்சலோடு.
"நாணய வர்த்தகத்தின் குரு அவர், தெரியுமா?" பேசத் தொடங்கினான் ஆதித்யா. "நாணய வர்த்தகத்தைப் பத்தின விழிப் புணர்வை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தினது அவர்தான். 1992-ல பவுண்ட் ஸ்டெர்லிங்கை வித்து-வாங்கி ஒரு பில்லியன் டாலருக்கு மேல சம்பாதிச்சார்" என்றான்.
"அன்னியச் செலாவணி அல்லது நாணயச் சந்தையில அடிக்கடி 'வலுவானது', 'வலு வற்றது' அப்படீங்கற சொற்கள் அடிபடுதே. எப்பவுமே ஒரு நாணயம் மற்றொரு நாணயத்தை வைத்துதான் எடைபோடப் படுதுன்னு நெனைக்கிறேன். அதன் மதிப்பு கூடினா வலுவாகிறது, மதிப்பு விழுந்தா வலுவிழக்கிறது, சரியா?" என்றார் டாக்டர்.
"ஆமாம். தினமும் சராசரியா 2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நாணயம் வாங்கி விற்கப்படுகிறது. வாரன் ப·பெட் ஒரு பங்கு வர்த்தகர். அவர்கூட 2005-ல டாலர் வலுக்குறையும்னு சரியா ஊகிச்சு 151 மில்லியன் டாலர் சம்பாதிச்சார்" என்றான் ஆதித்யா. அவன் தொடர்ந்தான், "யூரோ, பவுண்ட் மற்றும் ஸ்விஸ் ·ப்ரான்க் நாணயங்களுக்கு எதிராக ஓராண்டுக் காலக் கீழ்மட்டத்தை டாலர் எட்டியது."
"பரவாயில்லையே, நாணய வர்த்தகத் திலேயே கோடிகோடியா சம்பாதிக்கலாம்போல இருக்கே!" என்றார் டாக்டர்.
"நிச்சயமா. அதை ஒரு நாளில் எந்த நேரத்தில வேணும்னாலும் செய்யலாம். இப்போ நீங்க முழுநேரம் வேலை செய்றீங்க. கொஞ்சம் அதிகப்படி சம்பாதிக்கணும்னா, நாணய வர்த்தகம் மிக நல்ல வழிகளில் ஒன்று. பங்கு வர்த்தகம் மாதிரி மாசக்கணக்கா, ஏன், வருஷக்கணக்கா காத்திருக்க வேண்டிய தில்லை. ஒரு நாணயம் ஏறுமா இறங்குமான்னு சொல்லத் தெரிஞ்சா, சில மணி நேரத்திலயே சம்பாதிக்கலாம்.
"நாணயம் சைபர் வெளியில பெரிய நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், பன்னாட்டு வங்கிகள் மற்றும் அன்னியச் செலாவணிச் சந்தைகள் வழியே விற்றுவாங்கப் படுகிறது. தொலைபேசி, கணினி வழியா இது நடக்குது. சந்தைக்கே போக வேண்டிய அவசியமில்லை. 24 மணி நேரமும் வணிகம் நடக்குது. பங்கு அல்லது பண்டச் சந்தைகளைப் போல இதுக்கு ஒரு வணிகத்தலமே கிடையாது."
தன் தந்தையைப் பார்த்தபடி மேலும் ஆதித்யா சொன்னான், "எல்லாத்துக்கும் மேலே, இதுக்காக வியாபாரப் பயணம் சென்று உங்கள் குடும்பத்துக்கே அன்னியராக வேண்டியதில்லை."
சிவராமனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்ததைப் பார்த்த டாக்டர், "நீங்க ரெண்டு பேரும் கொஞ்சநேரம் தனியாப் பேசறது நல்லது" என்று சொல்லி இறுக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
இருவரும் வெளியே ஒரு பூங்காவிலிருந்த புல்வெளியில் நடக்கும் பொழுது சிவராமன் கேட்டார், "உனக்கு எப்படி இந்த விஷயத்தில் இவ்வளவு ஆர்வம்?"
இந்தக் கேள்வி ஆதித்யாவின் வாயை அவிழ்த்துவிட்டது. "ஒரு நாட்டுக்குப் போனால் அங்கே அந்த தேசத்தின் நாணயம் யூ.எஸ். டாலருக்கு எதிராக வலுக்கிறதா இல்லையா என்று கவனிப்பேன். இந்தியாவுக்குப் போனபோது ஒரு டாலருக்கு 40 ரூபாயாக இருந்தது. இப்போ 45 ரூபாய் ஆயிடுச்சு. ஒரு சட்டையின் விலை 120 ரூபாய் என்றால் முன்பு அதை 3 டாலருக்கு வாங்கியவர் இன்றைக்கு அதை 2.66 டாலருக்கு வாங்கலாம்.
"இதே போல லட்சக்கணக்கானவர்கள் வாங்குவதை யோசித்துப் பாருங்கள். அதே பணத்துக்கு அதிகப் பொருள்களை வாங்கமுடியும் போது பணத்தின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது. அப்போது நாட்டின் பொருளாதாரம் செழிப்பாகிறது."
மகன் மனம் திறந்து பேசியது சிவராமனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் "யுஎஸ் டாலர் வலுவானால் அமெரிக்க நுகர்வோருக்கு நல்லது. அதுக்கு மற்றொரு பக்கமும் இருக்கிறது: அமெரிக்க ஏற்றுமதியாளர் களுக்கு அது நல்லதல்ல" என்றார்.
"நிஜமாவா?" என்றான் ஆதித்யா கண்ணில் கேள்வியோடு.
"தன்னுடைய அப்பா சொன்னது சரிதான் என்று ஒரு மனிதன் புரிந்துகொள்ளும் சமயத்தில், தான் சொல்வது தவறு என்று நினைக்கும் மகன் ஒருவன் இருப்பான் என்று எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறது" என்றார் கண்ணைச் சிமிட்டியபடியே சிவராமன். இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு!
"சொல்றேன் கேளு: டாலர் வலுவானால் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. 1000 டாலர் மதிப்புள்ள மருத்துவக் கருவிகளை GE ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டதாக வைத்துக்கொள். டாலரின் மதிப்பு 40 ரூபாயானால், இந்திய மருத்துவமனை 40000 ரூபாய் அந்தக் கருவிக்குத் தரவேண்டும். டாலர் வலுக்கூடி 45 ரூபாய் ஆகிவிட்டால், அதே கருவிக்கு 45000 ரூபாய் தர வேண்டுமல்லவா? அதனால்தான் வலுவான டாலர் அமெரிக்க ஏற்றுமதியாளருக்குக் கெடுதல், அமெரிக்க நுகர்வோருக்கு நல்லது என்றேன்" என்று விளக்கினார் சிவராமன்.
"இப்போ வலுவில்லாத டாலரைப் பார்க்கலாம், இன்றைய நிலை அதுதானே" என்று தொடர்ந்தார் சிவராமன். "ஒரு டாலருக்கு ரூபாய் மதிப்பு 44.85. டிசம்பர் 2005-ல அது 46.10 ஆக இருந்தது. இதேபோல யென் மற்றும் பவுண்டுக்கு எதிராகவும் பலமிழந்துவிட்டது. அப்போ, அமெரிக்க ஏற்றுமதிப் பொருள்கள் மற்ற நாடுகளில் மலிவாகக் கிடைக்கும். அது அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு ரொம்ப நல்லது. ஆனால், அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்காவிலே இருந்து இறக்குமதி செய்யறவங்களுக்கும் விலை கூடிவிடும்" என்று சொல்லி முடித்தார் சிவராமன்.
"ஏதோ ஒரு பண்டம் போல டாலரை வர்த்தகம் செய்வதைப் பார்க்க ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது" என்றான் ஆதித்யா.
"ஆமாம். உனக்குத் தெரியுமா? பங்கு மார்க்கெட்டைப் போல யாரும் அன்னியச் செலாவணி மார்க்கெட்டை நெறிப்படுத்துவது கிடையாது. நாணயத்துக்கான தேவை மற்றும் தரவைப் பொறுத்தே அதன் விலை மாறுபடுகிறது. சரி, இப்போ நான் போனில் டாக்டரைக் கூப்பிடப் போறேன். அதுக்குள்ள, ஒரு நாட்டின் நாணயத்துக்கு ஏன் தேவை கூடுகிறது அல்லது குறைகிறது என்று யோசி" என்றார் சிவராமன்.
ஆதித்யாவைப் பற்றிய விவரங்களைக் கேட்டு டாக்டர் சந்தோஷப்பட்டார். பொதுவான ஒரு விஷயத்தைப் பேசுவது சூழலை லகுவாக்க நல்ல வழி என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.
ஒரு காலத்தில் பேசுவதில்லை என்று கருதப்பட்ட ஆதித்யா பேசத் துடித்துக் கொண்டிருந்தான். "அப்பா, நிறையக் காரணங்கள் இருக்கலாம். முக்கியமான காரணம் அந்த நாட்டின் மத்திய வங்கி வட்டிவீதத்தை உயர்த்தினால், அந்த நாணயம் அதிக வட்டியைப் பெறுகிறது என்பது. சென்ட்ரல் பாங்க் ஆ·ப் ஜப்பான் வட்டி வீதத்தை இறக்கி, யூஎஸ் ·பெடரல் ரிசர்வ் வட்டியை ஏற்றினால், ஒரு முதலீட்டாளருக்கு ஜப்பானில் கிடைப்பதைவிட அமெரிக்காவில் அதிக வட்டி வருமானம் கிடைக்கும். அப்போது யென்னுக்கு எதிராக டாலர் வலுவடையும். தவிர, ஒரு நாட்டின் வர்த்தக உபரி (Trade Surplus) அதிகம் இருந்தாலும் அந்நாடு ஒரு வலிமையான ஏற்றுமதி நாடாகக் கருதப்படும். அந்த நாணயம் உயர்வாக மதிக்கப்படும்."
"சரியாகச் சொன்னாய். ஆனால், வட்டிவீதம் குறைவதால் மட்டும் அந்நாட்டு நாணயம் பலவீனமாவதில்லை. அதன் பொருளாதார பலத்தையும் பொறுத்து நாணயம் மேலும் கீழும் போகலாம். ஏன், அரசியல் குழப்பம் கூட முதலீட்டாளரை நம்பிக்கை இழக்கச் செய்து நாணயத்தை நிலைகுலைக்கலாம்" என்று விளக்கினார் சிவராமன்.
"அப்பா, இந்த வார இறுதியில் www.forex.com, www.fxcm.com, www.mgforex.com போன்ற நாணய வர்த்தக வலைதளங்களைப் போய்ப் பார்க்கலாமா?" என்று ஆர்வத்தோடு கேட்டான் ஆதித்யா. அதேசமயம் எங்கே அப்பா வழக்கமான தனது வணிகப் பயணத்தில் வேறெங்காவது போய்விடுவாரோ என்று நினைத்த அவன், "இந்தமுறை எங்கே போறீங்கப்பா?" என்றான்.
"எந்த ஊர் ஆனாலும், அது நம்மூரு போலாகுமா?" என்று இளையராஜா குரலில் சிவராமன் ராகம்போட்டுப் பாடியதும் இருவருக்கும் பலமாகச் சிரிப்பு வந்தது.
சிவா மற்றும் பிரியா 'Dollarwise Penny foolish' என்ற நூலை எழுதியுள்ளனர். மேலும் அறிய: www.wisepen.com
ஆங்கிலத்தில்: சிவா மற்றும் ப்ரியா தமிழ்வடிவம்: மதுரபாரதி |