தமிழக அரசியல் விதி
மத்திய அரசு பொடோ சட்டம் கொண்டு வந்தாலும், அதன் பயன்பாடு - பிரயோகம் - தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் போது தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பொடோவை ஆதரித்த வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கு வைகோ கைது விவகாரம் பெரும் தர்மசங்கடத்தை கொடுத்தாலும் வைகோவை காப்பாற்றும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வகையில் ஈடுபடவில்லை. இதனால் மதிமுகவினர் தமக்குள் சோர்ந்துபோய் தான் உள்ளனர்.

வைகோவை தொடர்ந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், அதன் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்களும் பொடோவின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்தக் கைது விவகாரம் இன்னும் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிலையில் விடுதலைச்சிறுத்தை அமைப்பின் தலைவர் திருமாவளவன் முன்முயற்சியால் பொடோ எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆனாலும் இந்த இயக்கம் பலமான எதிர்ப்பு நடவடிக்கையில் இன்னும் ஈடுபட முடியாமலேயே உள்ளது.

தாய்க்கட்சியான காங்கிரசுடன் தமாகாவை மீண்டும் இணைத்துவிட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதற்கு பலன் கிடைத்துவிட்டது. காங்கிரஸில் தமாகா ஐக்கியமாகிவிட்டது. காங்கிரஸ் பலம் பெறத் தொடங்கிவிட்டது. சட்டப்பேரவையிலும் அதன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுவரை தமாகா தலைவராக இருந்த வாசன் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவராகிவிட்டார்.

காங்கிரஸ் தமக்குள் இயல்பாக கொண்டுள்ள கோஷ்டிப்பிளவுகளை கடந்து ஒற்றுமையுடன் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு செயற்படுமா? என்ற கேள்விக்கு சந்தோஷமான பதில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

தமிழக அரசியலில் அதிரடி அரசியல் நடத்தும் ஒருவராக பாமக தலைவர் ராமதாஸ் திகழ்கிறார். தமிழகத்தை இரு மாநிலமாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு அரசியல் ரீதியில் பல எதிர்ப்புகள் வெளிப்பட்டாலும் பிரிப்புக் கோரிக்கை நியாயமானது என்று வாதாடுகிறார். இந்தச் சர்ச்சை ஒருபுறமிருக்க அடுத்த சர்சையிலும் ராமதாஸ் குதித்தார்.

சமீபத்தில் கர்நாடகத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் சந்தன கடத்தல் வீரப்பனை 'சம்ஹாரம்' செய்யப்பட வேண்டுமென ஆக்ரோஷமாக பேசினார். ரஜினியின் பாபா படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக ராமதாஸ் பா.ம.க மகளிர் மாநாட்டில் கருத்து தெரிவித்தார். தமிழக இளைஞர்களை தவறாக வழிநடத்தும் ரஜினியின் படத்தை பா.ம.க தொண்டர்கள் பார்க்கக்கூடாது எனவும் கருத்து வெளியிட்டார்.

பாமக தொண்டர்களும் ரஜினி ரசிகர்களும் மாறி மாறி தமக்குள் மோதலில் ஈடுபட்டனர். பாபா திரையிடப்படும் திரைஅரங்குகளில் பாமக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓர் அரங்கில் பாபா படப்பெட்டி காணாமல் போனது. அரங்கில் கலாட்டா ஏற்பட்டது என காட்சிகள் தொடர்ந்தன.

தற்போது இருதரப்பும் இந்தப் பிரச்சனையை விட்டுவிட்டதாகவும் இனி யாரும் மோதல்களில் ஈடுபட வேண்டாமென அறிக்கை விட்டுள்ளனர். ரஜினி + ராமதாஸ் விவகாரம் தமிழக அரசியலில் ஏதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஒருவாறு அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது நல்லது.

நெசவாளர்கள் பசி பட்டினியில் வாழ்கிறார்கள் என்ற செய்தி தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. திமுக நெசவாள மக்களின் துயர்துடைக்க கஞ்சித்தொட்டி திறந்து மக்களுக்கு கஞ்சி கொடுத்து வந்தது. அதிமுக இதற்கு போட்டியாக பிரியாணி பார்சல் வழங்கி வந்தது. சில இடங்களில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் கைகலப்பு மோதல் ஏற்பட்டது. இதன் உச்ச வெளிப்பாடாக மதுரையில் திமுகவினர் மீது காவல்துறையினர் புகுந்து சரமாரியாக தொண்டர் களை தாக்கினார்கள்.

இத்தாக்குதலை அடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் கண்டனக் கூட்டம் நடத்துகின்றனர்.

தமிழக அரசு அரசு கல்லூரிகளை பல்கலைக் கழகத்துடன் இணைக்க தீர்மானித்துள்ளது. இந்த முடிவை கல்லூரி ஆசிரியர்கள் எதிர்த்து வருகின்றனர். தற்பொழுது தமிழகத்தில் அரசு கல்லூரிகள் 67 உள்ளன. இந்தக் கல்லூரி ஆசிரியர்கள் இந்த இணைப்பை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் அரசு இந்த இணைப்பால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது. ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்கிறது.

திமுகவிற்குள் உள்கட்சி மோதல் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. மதுரையில் அழகிரி (கருணாநிதியின் மகன்) x பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் மோதல் அறிக்கைப் போர், சுவரொட்டி என வளர்ந்துள்ளது. பிடிஆர் ஸ்டாலின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக தமிழக அரசியல் திமுக x அதிமுக உரசல் + மோதல் என்றாகிவிட்டது. இதுவே தமிழகத்தின் விதி போலாகிவிட்டது.

துரைமடன்

© TamilOnline.com