துரும்பும் தூணாகலாம்
எளிய எங்கள் வீட்டுக்கு நானே
இட்டுக் கொண்ட நாமம்-
முருகாற்றுப் படை
பெயரிட்ட நாள் முதலாய்
முருகாற்றுப் படை 'சுனையோடு,
அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதனோடு திரியும்'
முருகனாய்த் தன்னை எண்ணிக்
கொண்டதோ, என்னவோ!
அந்த நாளில், அங்கு விலாஸ்
காலண்டரில் கொண்டைய
ராஜுவின் ஓவியத்தில்
வள்ளி தெய்வானையுடன்
வடிவேல் முருகன் வண்ண மயில்
மேலமர்ந்து வருவது போலே...
முன்னிருந்த முற்றத்தை வள்ளியைப்
போல் வலது கையாலும்,
பின்னிருந்த தென்னந் தோப்பை
தெய்வானையைப் போல் இடது
கையாலும் இறுக அணைத்துக்
கொண்டிருப்பது போலும்
என்னுள்ளே...
இனிதாய் ஓர் கற்பனை!
தோப்பென்றால்...
காணி நிலத்திடையே பாரதி கேட்டது
போல் பத்து பன்னிரண்டில்லை
ஏதோ, ...ஒரு நாலு, ஐந்து...
முன்னிருந்த முற்றத்தில் பூத்துக்
குலுங்கும் இருவாட்சி, பிச்சியில்
இல்லாத மணம் பின்னிருந்த
தென்னந் தோப்பினின்று
வருகுதோ என்று என்னுள்ளே
இனிதாய் இன்னுமோர் கற்பனை!
கற்பனைக்கென்ன..வேலியா, விலங்கா?...
இப்படித்தான் -
போன சுக்கிர வாரமென்று ஞாபகம்
கோயிலுக்குப் போன இடத்தில்
'அம்மன் கொண்டாடி'
ஆறுமுகப்பண்டாரத்திடம்
தென்னங் கன்றுகளின் பெருமைகளை
விஸ்தாரமாய் விரித்துரைத்துவிட்டு,
"அஞ்சு கண்ணும் அஞ்சுதல் நீக்கிடும்,
ஆறுதல் வழங்கிடும் பஞ்ச பூதங்களாம்"
என்று நான் சொல்லப் போக,
அம்மன் கொண்டாடியும்,
கோட்டைத் தெரு இருளப்பத் தேவரும்
புதனன்றே பஸ் பிடித்து
செங்கோட்டை, கடையம்,
கயத்தாறு வரை போய்
"இலத்தூரில் இப்படியும் ஓர்
அரைக்கிறுக்கு இருக்குதென
தமுக்குத் தட்டி விட்டார்களே... "
என்று மரிய பாக்கிய சார்வாள்
சொல்லிச் சொல்லி மறுகிப்
போனதாகக் கேள்வி.
கற்பனைக்கென்ன... வேலியா, விலங்கா?...
இன்னொரு நாள்...
ஐந்து தென்னங்கன்றும்
"கருவாய், உயிராய், கதியாய்,
விதியாய், குருவாய்," நிறை
கோயிலாய்க் கோலம்
கொண்டதோவென வியக்க,
வியர்க்க நான் கண்ட
காட்சியுண்டே...
அதை அருணகிரி நாதரோ,
அப்பரோ, அப்பருக்கும்
அப்பன் பாரதியோ
வார்த்தையில் வடித்திட
தமிழில் சந்தியுமில்லை
பதமுமில்லை, போங்கள்!
திருமாலைப் போலும்
நெடிதாய் ஒன்று -
நண்பனாய்...
தேவியைப் போல் ஒசிந்து
வளைந்து ஒன்று -
மந்திரியாய்...
பைரவர் போல் பரந்து,
வளர்ந்தொன்று -
நல்லாசிரியனுமாய்...
பர்வதத்துக்கு இணையாய்,
வானத்தை வணங்கிக் கொண்டு
மற்றொன்று -
பண்பிலே தெய்வமாய்...
"யானாகிய என்னை விழுங்கி,
வெறும் தானாய்," தனியனாய்
நின்றிட்ட பழநியைப் போலும்
இனியனாய் இன்னுமொன்று -
பார்வையிலே சேவகனாய்...
இப்படி
நண்பனாய்...
மந்திரியாய்...
நல்லாசிரியனுமாய்...
பண்பிலே தெய்வமாய்...
பார்வையிலே சேவகனாய்...
குயிலொன்று அங்கு
ஜிவ்வெனக் கிளம்பி
குமராவெனக் கூவி அழைத்திடும்
போதெல்லாம், கூடி இங்கு
இவரெல்லாம் சிலாகித்துத்
தலையாட்டிடும் கூத்துக்குத்
திருவையாறும் இணையாமோ!
திருக்குற்றால அருவியாமோ!
இவர்ளை நான் நெஞ்சு நிறைய
நேசிக்கிறேன்...
உப்பென்றோ, சீனியென்றோ
உவர்ப்பென்றோ துவர்ப்பென்றோ
பாராது, காலால் நீரை உறிஞ்சி
காய்ச்சி, வடித்து, நன்றி கூறுதற்கு
மொழியறியாது, தளை, சீர் பாராது தலையில் இளநீர்க் குடத்தில்
நன்றி நவிலல் எழுதிடும்
அழகுக்காக அல்ல!
இவர்ளை நான் நெஞ்சு நிறைய
நேசிக்கிறேன்...
பகலெல்லாம், பருத்திக் காட்டினில்
காய்ந்து சருகானப் பஞ்சுக்
கரங்களுக்குப் பச்சை மருதாணி
இடுதல் போலே...
நிலா மலர்ந்த இரவுகளில்,
தென்னங் கீற்று வீணையின்
பச்சை ஓலைத் தந்தி
நரம்புகளை மெல்லிதாய்க் கிள்ளித்
தென்றல் இசைத்திடும் தத்தத்
தரினா ஒத்தடங்களுக்காகவும்
இல்லை...
இவர்ளை நான் நெஞ்சு நிறைய
நேசிக்கிறேன்...
எங்கள் வீட்டு விட்டத்தில்
தஞ்சைப் பெருங் கோயிலோ!
திருமலை நாயக்கர் மகாலோ!
என்று என்னைத் திகைக்க வைத்திடும்
அந்த சிட்டுக் குருவியின் கூடு!
தென்னையிலிருந்து, விதி முடிந்து
இற்று விழுந்த துரும்புகளைத்
தூக்கி வந்து, தூணாக, உத்திரமாக,
வேலியாக, விதானமாக, சன்னலாக,
சாளரமாக, மெத்தையாக,
பார்த்துப் பார்த்து
பார்த்துப் பார்த்து
அந்த சிட்டுக் குருவி மணி மண்டபம்
வடித்திட தன்னை எலும்பொடு
தோலுமாய் வழங்கி மயங்கிடும்
அந்த பஞ்ச பூதங்களின் பாரி
மனத்தினை எண்ணி, எண்ணி...
இவர்ளை நான் நெஞ்சு நிறைய
நேசிக்கிறேன்...
இல்லை... இல்லை...
நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து
ஆராதிக்கிறேன்!

வேதம்மாள்

© TamilOnline.com