எரிந்த கோபுரங்கள்
இரட்டை பிறவிகள் அல்ல நாங்கள்
இருவராக படைக்கப்பட்டோம் நியூயார்க் நகரில்
உலகமே வியக்கும்படி
உயரமாக வாழ்ந்திருந்தோம்

இரட்டை கோபுரங்கள் என்றாலும்
இறைவன் கோவில் கோபுரங்கள் அல்ல
இரவும் பகலும் எங்களுக்கு உறவு
இருபத்தெட்டு வருடங்கள் கடந்துவிட்டோம்

எங்களுக்குள்ளே நூற்றி பத்து மாடிகள் உண்டு
ஏராளமாக அங்கு பணியாளர்களும் உண்டு
எங்களை தரிசித்த பக்தர்கள் எண்ணில் அடங்கா
எங்களை காணாதவரோ விரல்களில் அடங்குவர்.

அமெரிக்காவின் தலைவாசலில் காவலிருந்தோம்
அடுத்திருந்த கட்டிடங்கள் எங்களுக்கு இளையவர்கள்
ஆறெழுத்தில் அடங்கும் அட்லாண்டிக் சமுதத்திரம்
அடிவாரத்தின் அருகாமையில் சலசலத்திருக்கும்

செப்டம்பர் பதினொன்று செவ்வாய்க்கிழமை
செங்கதிர் சூரியன் என்றும் போல் உதிக்க
நிர்மால்ய நீல வானம் எங்கும் பரந்திருக்க
நீல பறவைகளும் எங்களை சுற்றி பறந்ததும்மா

காலையிலிருந்தே அன்றும் கூட்டம்
காண வந்தோரும் பணியாளரும் ஆயிரங்கள்
என்றும் போல் அன்றும் எங்களிடம் வந்திருக்க
ஏனோ எங்களுக்குள் சஞ்சலத்தின் எதிரொலி

ஒன்பதை தொட திணறும் கடிகார முள்
ஓடி களைத்த நிலை போலும்
படைத்தவன் பார்வை கூட மறைக்கப்பட்டதோ
பாவிகள் எங்களை அழித்த வேளையில்

உலகே காணாத கொடூர முறையிலே
வெள்ளி நிறத்திலே வாயு வேகத்திலே
விமானங்களால் எங்களை தாக்கி எரித்ததில்
வெந்துபோய் மடிந்தவர்களோ ஏராளம் எராளம்.

அடைக்கலம் தரும் அமெரிக்கவுக்கா இப்படி ஒரு சோதனை
அதிர்ச்சியால் அழுது உறைந்தது உலகம்
ஒரு கணத்தில் பாவிகள் முடித்த நாச வேலைக்கு
ஒரு வார்த்தை தலைப்பு தீவிரவாதம்.

பி. கிருஷ்ணமூர்த்தி

© TamilOnline.com