நமது முன்னாள் ஆர்மி ஆபிஸர் நல்ல குடிகாரர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவருக்கு இரணடு பேத்திகள் 16 வயதிலும் 14 வயதிலும். அந்த பெண்களுக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடிக்கும். எப்போது நேரம் கிடைத்தாலும் குடிக்கிற மிலிட்டரி தாத்தாவிற்கு உள்ள கிளப் மெம்பர்ஷிப்பில் அவரைப் போட்டுத் துளைத்து எடுத்து நீச்சல் குளத்திற்குக் கூட்டிப் போகச் சொல்வார்கள். இவரும் வேறு வழி இல்லாது கூட்டிச் செல்வார்.
அங்கு நீந்தி விளையாடும் மற்ற பெண்களைப் பார்பதிலும் எக்ஸ்க்கு படு குஷி. ஒரு நாள் அந்த மாதிரி சென்றிருந்தபோது இவரது வெளியூரிலிருக்கும் நெருங்கிய நண்பர் திடீரென்று அங்கு வேறு ஒரு உறவினருடன் வந்திருந்தார். நீச்சல் குளம் அருகே நமது எக்ஸ் ஆர்மியைப் பார்த்தது குஷியாகி வந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது "ஏன் நீச்சல் குளத்தில் இறங்காமல் இங்கே நிற்கிறேயே" என்று நண்பர் கேட்க இவர் "என் பேத்திகளுக்குத் தண்ணீர் என்றால் உயிர் டெய்லி நீச்சல் குளதில் வந்து நீந்த வேண்டும் என்று உயிரை எடுக்கிறார்கள் அதனால் தான் வந்தேன் இல்லையேல் நான் பாட்டுக்கு நான் உண்டு என் பாட்டில் உண்டு என்று சிவனேன்னு வீட்டில் தான் இருப்பேன்" என்று கூற நண்பர் "அடேடே உனக்கும் உன் பேத்திகளுக்கும் அப்ப ஒரே பிராப்ளம் தான்" என்று கூற இவர் "என்ன பிராப்ளம்" என்று கேட்க அவர் கூலாக "உங்க குடும்பத்திலேயே எல்லோருக்கும் தண்ணி பிராப்ளம் தான்" என்று சிலேடையாகக் கூற ஒரே சிரிப்பு மயம்தான்.
நண்பர் ஒருவருக்கு அவரது மாமனார் வீட்டில் சிறிது இடம் ஒரு ·ப்ளாட் கட்டிக்கொள்ள கொடுத்து அவரும் அங்கு 900 சதுர அடியில் ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அவரது மாமனாருக்கு நான்கு பெண்கள் 2 பையன்கள். இருந்த மூன்று கிரெளண்டில் 2 1/2 கிரெளண்டை பிள்ளைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து மீதம் உள்ள 1/2 கிரெளண்டை 4 பெண்களுக்கு தாராளமாக ·ப்ளாட் கட்டிக்கொள்ள கொடுத்திருந்தார். பெண்களும் சந்தோஷமாக புருஷனிடம் அதைச் சொல்லி எல்லோரும் அவர்கள் செலவில் ஆளுக்கு ஒரு சிறிய ·ப்ளாட்டைக் கட்டிக்கொண்டனர். L.I.C கட்டிடம் உயரமா? அல்லது இந்த நான்கு ·ப்ளாட்களும் உயரமா என்று ஒரு போட்டியே வைக்கலாம். இந்த ·ப்ளாட்ஸில் லி·ப்ட் கிடையாது. மேலே நான்காவது ·ப்ளாட் வரை ஏறி இறங்குவதற்குள் மூச்சு முட்டித் தள்ளிவிடும்.
இந்த இடத்தை மாப்பிள்ளைகளுக்குக் கொடுத்த தில் மாமனார் மாமியாருக்குக் கொள்ளை பெருமை. நாம் இடம் கொடுத்ததால் தான் இவர்கள் கட்ட முடிந்தது இல்லையேல் பாவம் இடத்திற்கு எவ்வளவு காசு செலவு செய்யவேண்டும் என்று.
அதனால் எப்போது மாப்பிள்ளைகள் அங்கு வந்தாலும் மாமியார் தவறாமல் இடத்திற்குத் தான் மதிப்பு கட்டிடத்திற்கு ஒரு மதிப்பும் கிடையாது என அடிக்கடிக் கூறி இவர்களைச் சங்கடப்படுத்துவாராம். அதை மாமனாரும் மிகவும் ரசிப்பாராம் ஒரு வெற்றிப் புன்னகையுடன்.
அதில் ஒரு குறும்புக்கார மாப்பிள்ளை ஒரு முறை மாமியார் இப்படிக் கூறியபோது மாமி நீங்கள் குஜராத்தில் உள்ள புஜ்ஜில் இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவீர்கள் என்று கூற அவர்கள் ஏன் என்று கேட்க இப்போது வந்த பூகம்பத்தில் எல்லா கட்டிடமும் விழுந்து கிரெளண்ட் மட்டும் தான் இருக்கிறது ஆகையால் கிரெளண்டுக்குத்தான் மதிப்பு என்று 100 தடவைக்கு மேல் சொல்லிவிட்டீர்கள் அங்கே உங்களுக்கு கிரெளண்ட் இருந்தால் இன்று கோடி கோடி பெறும் என்று கூற மாமியார் முகம் சிவக்க, மற்றவர்கள் சிரிக்க அன்றோடு இடத்திற்குத்தான் மதிப்பு என்ற பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாம்.
நமது எக்ஸ் ஆர்மி ஆபிஸர் ஒருமுறை அட்லாண்டா வந்து என்னுடன் ஒரு மாதம் தங்கி இருந்தார். அப்போது வீக் எண்டில் எல்லாம் ஜாலியாக வெளியே போய்க்கொண்டிருந்தோம். இரண்டாவது வாரத்தில் அவருக்கு வீக்டேஸில் வீட்டில் ரொம்ப போர் அடித்ததால் என்னுடன் அவரும் வெளியே சுற்ற ஆரம்பித்தார். நான் மார்கெடிங் வேலையில் இருந்தேன். எனது கம்பெனி டெக்ஸாஸில் இருந்தது. நான் அட்லாண்டா ஏரியாவிற்கு இன்-சார்ஜ். இங்கே ஆபிஸ் எதுவும் கிடையாது ஆகவே எனக்கு அவரைக் கூட்டிப்போவதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. இந்தியன் கஸ்டமராக இருந்தால் அவரையும் கூடக் கூட்டிப்போவேன் அல்லது காரிலேயே இருக்கச் சொல்லி நான் மட்டும் போய்வருவேன். இது அவருக்கு ரொம்ப குறை. அமெரிக்கன் கஸ்டமர்களிடம் போகும் போது அவரும் உள்ளே வருவேன் என்று அடம் பிடிக்கத் துவங்கினார்.
நான் ஒரு பத்திரிக்கைக்கு விளம்பரங்கள் பிடிக்கும் வேலையில் இருந்தேன். அப்போது எனது சேல்ஸ் டாக்கில் எந்த பிசினஸ் ஆளாவது எதையாவது விற்கவோ வாங்கவோ ஆசைப்பட்டால் அவர்களிடம் இந்தப் பத்திரிக்கை அமெரிக்கா முழுவதும் போகிறது ஆகையால் உங்கள் பிசினஸை வாங்க எந்த மூலையிலாவது ஒருவர் இருந்தால் கூட அவர்கள் கண்ணில் படும் என்று கூறுவேன். இதை நமது ஆர்மி ஆபிஸர் நன்கு கவனித்து இருக்கிறார் போலும். அவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போய் ஆர்மியில் சாதாரணமாகச் சேர்ந்து நன்றாக முன்னுக்கு வந்தவர், ஆனால் ஆங்கிலம் கொஞ்சம் வாங்கல். இவர் தொந்தரவு தாங்காமல் ஒரு அமெரிக்க கஸ்டமரிடம் கூட்டிப் போனேன். இவரையும் அறிமுகப் படுத்தி எனக்கு உதவி செய்கிறார் என ஒரு பொய்யைக் கூறினேன். அந்த ஆளிடம் பேசி கிட்டத் தட்ட பிசினஸ் முடியும் நேரம் அவர் கடைசியாக ஒரு கேள்வி கேட்டார். உங்கள் பத்திரிக்கையை பற்றி எனக்கு தெரியும் ஓரளவு பிரபலம் தான் ஆனால் நீங்கள் சொல்லுவது போல எனது கடை நிச்சயம் விற்றுவிடுமா? எனக் கேட்க நான் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன் நமது எக்ஸ் ஆர்மி சும்மா இல்லாமல் எனக்கு உதவி செய்வதாக நினைத்து "Don't worry which புற்று which Snake no one know" என்று போட்ட போடில் நான் இவர் என்ன சொல்கிறார் என கோபத்தில் முழிக்க என்னிடம் தமிழில் "எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது" என்று சொன்னேன் என்று சொல்லி புற்றிற்கு ஆங்கிலத்தில் என்ன? என்று கேட்க நான் பேய்முழி முழித்தேன். இவர் செய்த குழப்பத்தில் அந்த விளம்பரம் கோவிந்தா ஆகியது. அத்துடன் அவர் நான் வேலைக்குப் போகும்போது கூட வருவது நின்று போனது. |