'தமிழகம் தமிழுக்குத் தகுமுயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு தமிழ்க் கவிஞராய்த் தோன்றியவர்'
கவிஞர் பாரதியார். அவர் அகத்தில் அன்பும் உயர்அறிவுகளில் ஒளியும் வாய்ந்த உலகக் கவிஞர். ஓர் ஊருக்கு ஒரு நாட்டுக்குரியதான ஒற்றைச் சாண் நினைப்புடையாரல்லர்; ஒடுக்கப் பட்டார் நிலைக்கு உள்ளம் உருகி வருந்தியவர். நாட்டோர் நல்லுணர்வு பெறும் பொருட்டு சேரியிலே நாள் முழுதும் தங்கி உண்டும், கடைத்தெருவில் துலுக்கர் விடுதிக்கு சென்று சிற்றுணவு வாங்கிக் கனிவாய்த் தின்றும் களித்தவர். சுருங்கச் சொன்னால் பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசுகின்ற மோசத்தைத் தன் நடவடிக்கையினால், எழுத்தால், பேச்சால் முரசறைந்த சான்றோர் அவர்.
பழைய நடை பழங்கவிதை பழந்தமிழ்க் கொள்கை பேசாமல் புதிய நடை - புதுக்கவிதை புதுக் கொள்கை களை எளிய சொற்களில் எளிய நடையில் படைத்துப் பெருமை பெற்றவர்.
முதன்முதலாக இன இலக்கியத்தைத் தமிழ் இலக்கிய உலகத்திற்குத் தந்த பெருமையும், தமிழ் இலக்கிய வரலாற்றில் கண்கூடான உலகப் பார்வை படைத்த முதல்வர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
1882 ஆம் ஆண்டில் தோன்றி முப்பத்தொன்பதே ஆண்டு வாழ்ந்த பாரதியார் தமிழோடு ஆங்கிலம், இந்தி, வடமொழி, பிரெஞ்சு, ஜெர்மன் போன் பல மொழிகளைக் கற்றிருந்தார். அதனால் பஞ்சபூத செயல்களின் நுட்பங்கள் கூறும் அறிவியற் கலை நூல்களைத் தமிழில் ஆக்கித் தீர வேண்டும் என்கிறார்.
தமிழ் வாழ்க என்று ஆர்ப்பரிப்பதோ, தமிழே பிறமொழிகளின் மூலமொழி என முழக்கமிடுவதோ மட்டும் போதாது. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து 'செயல் மறந்து' வாழ்த்துவதில் அவருக்குச் சிந்தனை யில்லை.
'தமிழ் வளர்ப்பு முயற்சி சங்கம்' - என்னும் அழைப் பினைப் புதுச்சேரியில் பாரதியார் முதல் உலகப் பெரும் போர்க்காலத்தில் தொடங்கினார். அறிவியல் மற்றும் சாத்திர நூல்கள், பிறமொழிக் காப்பியங்கள், உரைநடையில் இயற்றிய மொழிபெயர்ப்புகள், நாட்டுப் பற்று, மொழிப்பற்று பற்றிப் புதுமுறையில் கற்பிக்கும் நூல்கள் ஆகியவற்றை வெளியிடும் பெருந்திட்டத்தோடு தொடங்கப் பெற்ற இச்சங்கம் அரசினரின் அனுமதி கிடைக் காததனால் அமைப்பு முறையோடு பாரதியார் பணியாற்ற இயலாமற் போய்விட்டது.
அயல்மொழிச் செய்திகளைத் தமிழில் வழங்குவ தற்கு வாய்ப்பாகத் தமிழிலுள்ள அரிச்சுவடி எழுத்துக்களோடு மற்றும் சில குறியீடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். ''பிரெஞ்சு இங்கிலீசு முதலிய ஐரோப்பிய மொழிகளிலும் ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலும் உயிருள்ள பாஷைகளிலே வளர்வன எல்லா வற்றிலும் உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்துக் செளகர்யப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ்மொழி விசாலமடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்'' என்கிறார்.
தமிழில் காலத்துக்கு ஏற்ற அறிவியல் கருத்துக் கள் - நூல்கள் - குறியீடுகள் இல்லையெனில் அவைகளை ஏற்படுத்தும் பொறுப்பும் கடமையும் தமிழர்களுக்கு வேண்டும் என்றார் பாரதியார்.
டாக்டர் நா. ஆறுமுகம் |