பாண்டிச்சேரியில் வங்காள விரிகுடாக் கடலின் அருகில் கானாபத்திய ஆகமப்படி அமைந்துள்ளது தான் மணக்குள விநாயகர் திருக்கோயில்.
பாண்டிச்சேரியை பிரெஞ்சு நாட்டினர் ஆண்ட போது இந்த ஆலயத்தை இடையூறாகக் கருதி அவர்களால் வெறுக்கப்பட்டு, மணக்குள விநாயகர் கடலில் வீசியெறியப்பட்டாராம். ஆனால், மறுநாளே பூட்டிய கோயிலினுள் வந்து உட்கார்ந்திருந்த விநாயகரை - அவர் திருவிளையாடலைக் கண்ட கவர்னர் மனம் மாறிப் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தை அவருக்கே சாசனம் செய்து கொடுத்த துடன் தினந்தோறும் பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்ததினால் இவருக்கு 'வெள்ளைக்காரப் பிள்ளையார் என்ற பட்டப்பெயரும் உண்டு. சரித்திரப் புகழ் பெற்றதுதான் புதுவையில் அமைந்துள்ள இந்த ஆலயம்.
இன்றும் வெளிநாட்டிலிருந்து வருவோர் பழமையின் சின்னமாக இந்த ஆலயத்தில் எழுந்தருளி உள்ள விநாயகப் பெருமானைத் தரிசிக்காமல் போவதில்லை. விநாயகப்பெருமானுக்கு இந்தப் பெயர் ஏற்படக் காரணம் இந்தக் கோயிலுக்கு மேற்குப் பகுதியில் குளம் ஒன்று இருந்ததாகவும் அக் குளம் கடற்கரையையொட்டி அமைந்திருந்ததால் அதில் நீரைக் காட்டிலும் மணலே அதிகமாக இருந்ததாம். எனவே அது மணற் குளம் எனப்பட்டது. இந்தக் குளத்தின் கீழ்க்கரையில்தான் இந்த விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. எனவே மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பிரசித்தியாயிற்று. இன்று இந்தக் குளம் இல்லை, ஆனாலும் மூலவருக்கு அருகே இடதுபுறத்தில் சிறிய சதுர அளவில் அன்றைய மணற்குளம் இன்றும் உண்டு. அதைப் பார்க்க விரும்பும் பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் கற்பூர தீப ஒளியில் - ஈர மணலைக் கைகளில் அள்ளிக் காண்பிக்கிறார்கள். இங்கு கடல் வெகு அருகில் இருந்த போதும் சுத்தமான நீர் இந்த மணற் குளத்தில் சுரக்கிறது. இதில் எதைப் போட்டாலும் அதன் நிறம் கறுப்பாக மாறிவிடும். தீராத நோய்களையும் இந்த நீர் தீர்க்கும் என்பது நம்பிக்கை. தடங்கல் ஏற்பட்டுத் திருமணம் தள்ளிக் கொண்டே போகின்றவர்கள், மணக்குள விநாய கரை வேண்டிக் கொண்டு உற்சவம் செய்தால் திருமணம் வெகு விரைவில் கூடும் என்பதும் பெரும்பாலானவர்களின் நம்பிக்கை.
எத்தனையோ கவிஞர்களால் பாடப் பெற்றவர் இந்த விநாயகப்பெருமான். மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.
'வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாதமணி மலரே! ஆழ்க உள்ள சலனமில்லாது! அகண்ட வெளிக்கண் அன்பினையே சூழ்க துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைத்திடுக வீழ்க கலையின் வலியெல்லாம் இருத யுகந்தான் மேவுகவே'
மகாகவி மணக்குள விநாயகர் பற்றிப் பாடிய பாடல் இது. நம் மனக்குறைகள் அகல மணக்குள விநாயகரைத் துதிப்போம். குறை களைவோம்.
வைதேகி தேசிகன் |