கோவிந்தசாமியின் "அரிய" கருத்து 2 - பாசம் ஒன் வே டிரா·பிக்கா?
எச்சரிக்கை: கோவிந்தசாமியின் கருத்துக்கள். நம் கருத்து அல்ல.

அட்லாண்டா நண்பர் ஒருவர் இந்தியாவிற்கு (சென்னைக்கு) மனைவி, இரண்டு குழந்தைகளுடன் 3 வார லீவில் சென்றுவிட்டு திரும்பியிருந்தார். ஒரு 10 நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு ஐந்தாறு வாரமாக அட்லாண்டா நண்பர்களைப் பார்க்கவில்லையே என்று அவர் வீட்டில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரையும் கூப்பிடவில்லை ஒரு சில குடும்பங்களை மட்டுமே அழைத்திருந்தார். நல்ல ஜாலியான குடும்பம். ஆகவே நாங்களெல்லாம் சந்தோஷமாக அவர்கள் வீட்டிற்குச் சென்றோம்.

அது ஒரு வெள்ளிக்கிழமை இரவு. முக்கியமாக நமது K.M கோவிந்தசாமியின் குடும்பத்தைக் கூப்பிடாமல் அவாய்ட் செய்திருந்தனர். நாங்களும் "அப்பாடி" அவர்கள் தொந்திரவு இருக்காது என சந்தோஷப் பட்டோம். இந்த சந்தோஷம் நிலைக்குமா? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டு அந்த குடும்பத்தைப் பற்றி பல்வேறு வம்புகளை அள்ளி வீசிக்கொண்டு இருந்தோம் (பயத்துடன் தான்). எல்லோருக்கும் ஏதோ பட்சி சொல்லியது அந்தக் குடும்பம் இன்று இந்தப் பார்ட்டிக்கு வரமாட்டார்கள் என்று. அந்த எண்ணமே எல்லோருக்கும் நிம்மதியைக் கொடுத்தது. நேரமாக ஆக நிம்மதி இன்னும் அதிகமாகியது. எல்லோரும் ஹாப்பியாக எல்லா தலைப்புகளையும் பேசித் தள்ளிக்கொண்டிருந்தோம்.

இந்த நண்பரின் குடும்பம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தவராமல் சென்னைக்கு போய்வருவார்கள். கணவன், மனைவி, இருவருக்குமே அப்பா, அம்மா இறந்துவிட்டதால் சென்னைக்குச் சென்றால் தங்குவது அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுடன் தான். தங்கள் குழந்தைகளுக்கு இந்தியா பற்றி நன்கு தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் கண்டிப்பாக 2 வருடத்திற்கு ஒரு முறை போய் வந்து கொண்டிருந்தார்கள். அப்படியும் அந்தக் குழந்தைகள் அவ்வளவாக தமிழில் பேசாதது அவர்களுக்குப் பெரிய குறை. வீட்டில் இவர்கள் குழந்தைகளுக்காக எப்போதும் தமிழில்தான் பேசுவார்கள். குழந்தைகளுக்கு ஓரளவு தமிழ் புரியுமே தவிர பேச வராது. இவர்கள் குறை சென்னை சென்றால் அங்குள்ள சொந்தக்காரக் குழந்தைகள் கான்வெண்டில் படிப்பதால் இங்கிலிஷ் பொளந்து கட்டுவதைப் பார்க்கும் ஆவலில் அந்தக் குழந்தைகளின் பெற்றோர் இந்தக் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசும் படி தங்கள் குழந்தைகளிடம் கூறிவிடுகிறார்கள். இவர்கள் கரடியாகக் கத்தினாலும் தங்கள் குழந்தைகளின் ஆங்கில ஞானத்தை (புலமையை) ரசிக்கக் கிடைக்கும் வாய்ப்பினை அவர்கள் தவறவிடுவதில்லை. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல பெரியவர்களே இந்தக் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். இதை நண்பரும் அவர் மனைவியும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.

வருத்தம் அதிகமாக காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் ஒரு 8 வயது பையன் "நீங்க எல்லாம் வீட்டிலே தான் இருக்கீங்களா? என்று அம்மா பார்க்கச் சொன்னாங்க" என்று நல்ல தமிழில் கேட்க அந்த பையன் நாக்கு நீ..ளம் நாகலட்சுமியின் பிள்ளை என அடையாளம் தெரிந்ததும் நான் "ஐயையோ ஒருத்தரும் வீட்டில் இல்லை என்று சொல்லிவிடு $10 தருகிறேன்" என்று தமாஷாகச் சொல்ல மற்றவர்கள் சிரிக்க அதைக் கேட்டுக்கொண்டே அந்த நல்ல குடும்பம் உள்ளே வந்தது. நான் பதறிப் போனேன் என் தர்ம பத்தினி "நேரம் கெட்ட நேரத்திலே என்ன ஜோக் வேண்டிக்கிடக்கு திருவாய் மூடிக்கொண்டு இருங்கோ" என்று யாருக்கும் கேட்காமல் எனக்கு மட்டும் கேட்கும்படி கூற மற்றவர்களுக்கு கேட்காமல் எனக்கு மட்டும் காதில் விழும்படி பேசும் அவள் சாமர்த்தியத்தை (அந்தக் கலையை) நினைத்து மனதிற்குள் வியந்தேன்.

உள்ளே வந்த கோவிந்தசாமி "இந்தப் பக்கம் ஒரு வேலை இருந்தது வந்தோம் அப்படியே நீங்கள் இருந்தால் ஒரு ஹலோ சொல்லிவிட்டு போகலாமே என்று உள்ளே நுழைந்தோம்" எனக் கூற எங்கள் முகம் போனப் போக்கை என்னவென்று சொல்லுவது. சொல்லவே முடியாத அளவிற்கு எல்லோர் முகத்திலும் உணர்ச்சிகள் என்பது அப்பட்டமான உண்மை. உடனே சமாளித்த நண்பர் "வாங்க வாங்க. திடீரென அரேன்ஜ் பண்ணிய பார்ட்டி அதனாலே தான் உங்களைக் கூப்பிடவில்ல என நினைக்கிறேன். மனைவி கிட்டே கண்டிப்பாக உங்களுக்கு போன் செய்யச் சொல்லியிருந்தேன் ஆனா ரொம்ப பிஸி ஆக இருந்ததாலே கூப்பிடவில்லை என்று நினைக்கிறேன்" என்றார். அவர் மனைவி முகத்தில் சிவாஜி கணேசனின் சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் பாட்டின் போது காட்டிய உணர்ச்சியுடன் பயத்தில் சிரித்து கண்ணீரும் எட்டிப் பார்த்தது. எங்களுக்கெல்லாம் நண்பர் மீது கோபம் வந்தது பயத்தில் மனைவியை மாட்டி விடுகிறாரே என்று. அவள் பாவம் கொஞ்சம் அப்பாவி. இதே நிலை என் வீட்டில் நடந்திருந்தால் "அப்பப்பா" உடலே நடுங்குகிறது கோவிந்தசாமி குடும்பம் போன பிறகு என்னை நார் நாராகக் கிழித்து ஆணியில் மாட்டிவிடுவார்கள் என்ன செய்வது அவர் கொடுத்து வைத்தவர். சரி சரி, உன் மேலுள்ள குறை எல்லாம் யோசி என்கிறீர்களா? நியாயம் தான். ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? பக்கங்கள் போய்க்கொண்டே இருக்கும் அதனால் அதை விட்டுவிடுவோம்.

நாக்கு நீ..ளம் பையனப் பார்த்து "மாமா $10 தரேன் என்று சொன்னாரே அதை வாங்கிக்கோ" என்று கூற நான் பேய் முழி முழிக்க "சொன்ன பேச்சு மாறக் கூடாது, குழந்தையும் தெய்வமும் ஒன்று அதனாலே அதைக் கொடுத்துவிடுங்கள்" என்று நேரடியாக என்னை நோக்கிக் கூற நான் வாயைத் திறக்கும் முன் என் பெட்டர் ஹா·ப் மறுபடியும் எனக்கு மட்டும் கேட்கும் அந்த அரிய கலையை உபயோகித்து "இது வேற தண்டம் இந்த மனுஷனாலே" என்று தன்மானத்தைக் காக்க அவள் ஹாண்ட் பாகிலிருந்து $10 பையன் கையில் கொடுத்டு என் மானத்தைக் காப்பாற்றினாள். அந்த பையன் சந்தோஷமாகச் சிரிக்க எனக்கு இந்த உலகமே என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பதாகத் தோன்றியது. மனைவியைப் பார்த்து முறைத்தேன் அவள் திரும்பி என்னைப் பார்த்தப் பார்வையில் P.P ஆகிவிட்டேன் (அதான்யா பெட்டிப் பாம்பு. முக்கால் வாசி புருஷர்கள் அது தானே).

இப்போது நிலைமையை கொஞ்சம் மாற்ற நமது மற்றொரு நண்பர் நான் படும் வேதனையை சகிக்காமல் "அப்புறம் எப்படி இருந்தது இந்தியா ட்ரிப்?" எனக் கேட்க பார்ட்டி கொடுக்கும் நண்பர் "ஓ.கே. 3 வாரம் பறந்து விட்டது, சூடுதான் கொஞ்சம் அதிகம், குழந்தைகள் வாடிப் போய்விட்டனர். அட்லாண்டா வந்து இறங்கியதும் நிம்மதியாக இருந்தது. ஆனா ஒண்ணு இந்தியாவில் செலவு பயங்கரம் டாலர் செலவு செய்யரவங்களுக்கே அதிகம்னா பாவம் லோகல் ஆட்கள். எப்படித்தான் சமாளிக்கறாங்களோ? பாவம்" என்றார். நடுவில் புகுந்த கோவிந்தசாமி "என்ன பாவம் வேண்டி கிடக்கு? அங்கே எல்லாம் ரொம்ப சாமர்த்தியசாலிகள். அதுவும் நம்ம டாலரைக் கொண்டுபோனோம்னா நம்மை மொட்டை அடித்துவிடுவார்கள்" எனக் கூற அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம், எல்லோரும் ஷாக் அடித்தது போல நின்றோம்.

நாக்கு நீ..ளம் உடனே என்ன ஒரு $5000 செலவு ஆகியிருக்குமா எனக் கேட்க நண்பர் "என்னமா இப்படி கேட்கிறீர்கள் 4 டிக்கெட்டே $5300 அப்புறம் லோக்கல் டிராவல் மற்ற செலவுகள் இரண்டு சொந்தக்காரங்க கல்யானம், வீட்டுக்கு பர்ச்சேஸ் எல்லாம் சேர்ந்து $15000 காலி. ஒன்று இரண்டு சொந்தக்காரங்களுக்குக் கொஞ்சம் உதவி வேறு பண்ணவேண்டியிருந்தது. கல்யாணத்திற்கு நாலு கோல்ட் காயின் கேட்டிருந்தார்கள் அதற்கு அப்புறம் பணம் தரேன் என்று சொல்லியிருக்கிறார்கள். பாவம் ரொம்ப செலவு அதனால் நானும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன். இங்கே இருந்து போகும் போது கி·ப்ட்டே ஒரு $1500க்கு வாங்கிப் போயிருந்தோம்" எனக் கூற வயத்தெரிச்சல் வரது விட்ட பெருமூச்சு அந்த அறையின் உஷ்ணத்தைக் கூட்டியது. நாக்கு நீ..ளம் உடனே "இரண்டு பேரும் நல்லா சம்பாதிக்கிறீங்களே என்ன ஒரு மாதச் சம்பளம் தானே" என்று இவர் கணக்கை அவள் கூற நண்பர் முகம் சுருங்கியது.

இதற்குள் கோ.சாமி "இதெல்லாம் சுத்த வேஸ்ட். அங்கே ஒரு பய நாம கொடுக்கற கி·ப்ட்டுக்குத் தாங்க்ஸ் கூடச் சொல்லமாட்டாங்க. கொடுக்கிறது நம்ம கடமை மாதிரி வாங்கி வைத்துக்கொள்வார்கள் அதுவும் தவிர எல்லாம் இங்கேயே கிடைக்குது என்று வேறு சொல்லுவார்கள். அப்ப இது உங்களுக்கு வேண்டாமா? என்று கேட்டால் டக்குனு எடுத்து உள்ளே வைத்து வேறு ஏதாவது நல்லதா வாங்கியிருக்கலாம் என்று சொன்னேன் என்பார்கள். தன்மானச் சிங்கம் மாதிரி பேசுவார்களே ஒழிய கண் எல்லாம் நம்ம பெட்டி மேலேயேதான் இருக்கும். எல்லாம் வேஷம், சொந்தமாவது, பந்தமாவது" எனக் கூற நான் உள்ளே புகுந்து "ஒட்டு மொத்தமாக எல்லோரையும் அப்படிச் சொல்லமுடியாது ஆனா ஒன்றிரண்டு பேர்கள் அப்படியும் இருக்கிறார்கள்" என்றேன். என் விலாவில் பளிச் என்று ஒரு இடி விழ அது என் தர்ம பத்தினியின் கைங்கர்யம் எனப் புரிந்தது. என்ன நாம் சொன்னது தவறா? என யோசிக்க ஆரம்பித்தேன். உடனே கோ.சாமி "என்னடா அறிவின் சிகரம், எழுத்தாளர் இன்னும் வாயைத் திறக்கவில்லையே என்று நினைத்தேன், அப்பா என் கவலை தீர்ந்தது எனக் கிண்டலாகச் சொல்லி "அப்புறம், வேற என்ன சொல்லு" எனக் கேட்க வழக்கம் போல திரு திரு எனத் திருட்டு முழி முழித்தேன்.

மனதைத் தேற்றிக்கொண்டு மனைவியையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு "நான் என்ன சொல்ல வரேன்னா" என ஆரம்பிக்க கோவிந்தசாமி "உனக்கு நாலு வார்த்தை ஒழுங்கா பேசக்கூட வராது எழுத வேற ஆரம்பிச்சுட்டே, எல்லாம் காலத்தின் கோலம், கொஞ்சம் சும்மா இரு" என்று என்னை அடக்கி நான் பரிதாபமாக முழிக்க "அவன்" சாரி "அவர்" பேசத் தொடங்கினான்/ர். "நான் சொன்ன மாதிரி அங்கே போனாலே எல்லோரும் நம்ம காசை புடுங்குவதிதான் குறியாக இருப்பார்கள். நம்ம காசு மட்டும் செலவு அவங்களுக்கும் சேர்த்துப் பண்ணலை என்றால் நம்மை ஒரு துளியும் மதிக்கமாட்டார்கள். அவங்க இங்கே வந்தாலும் நாம தான் செலவு செய்யணும் அங்கே போனாலும் எல்லாதிற்கும் நாம தான் செலவு செய்யணும் என்றால் இது எந்த ஊர் நியாயம்" எனக் கேட்க எல்லோரும் ஒரு மாதிரி சங்கடத்தில் நெளிந்தோம்.

வேறு யாரும் பேசாததால் நான் மறுபடியும் தைரியத்தை வரவழித்துக்கொண்டு "எங்கள் குடும்பத்தில் எல்லாம் அப்படி இல்லை, உங்கள் குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியாது" எனக் கூறினேன். அப்போது பார்த்து சென்ற முறை என்னுடைய தூரத்து கசின் ஒருவரின் மனைவி விற்கக் கொடுத்திருந்த பவழங்கள் சரங்கள் ஆறையும் 6 முத்துச் சரங்களையும் விற்று என்னிடம் பணத்தைத் தராமல் "ஸ்வாகா" செய்தது நினைவிற்கு வந்துத் தொலைந்தது. சீ.. வேளை கெட்ட வேளையில் இதெல்லாம் ஏன் தான் நினைவிற்கு வருகிறதோ? சனியன்.

பாய்ந்து வந்தாள் நாக்கு நீ..ளம் நாகலட்சுமி சரி அடிதான் விழப் போகிறதோ என்று மனைவியின் பின்னால் ஒழிந்துகொள்ள முயன்றேன். என் மனைவி ஒரு கையை நீட்டி ஒரு கிங்கரி போல நின்று அந்த ராட்சசியைத் தடுத்தாள். "எஙக் குடும்பத்தைப் பற்றி யாராவது தப்பா பேசினால் நாக்கை அறுத்துவிடுவேன் ஜாக்கிரதை" எனக் கூற கோவிந்தசாமியின் நாக்கு எப்படி அறுபடாமல் இருக்கிறது என்று நாங்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டோம்.

நன்றி

அட்லாண்டா கணேஷ்

பின் குறிப்பு: எனக்கு அந்தக் குடும்பத்தின் மேல் வர வர பயம் குறைந்து கொண்டே வருகிறது. நாக்கை அறுப்பேன், மூக்கை உடைப்பேன் என்று கூறினால் நான் பயந்துவிடுவேனா? நோ நோ நோ நெவர். எப்போதாவது விரலை உடைப்பேன் என்று கூறினால் வேண்டுமானால் பயப்படுவேன் ஏனெனில் எனது எழுத்துச் சேவை தடை பட்டுவிடுமே என்று. அதனால் அந்தக் குடும்பத்திடம் பேசும்போது எப்போதும் கைகளை பின்னால் கட்டிக்கொண்டுதான் பேசுவேன். வாழ்க என் தைரியம்! வளர்க என் உறுதி!!

© TamilOnline.com