நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
ஹரிகதை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இது எந்த காலத்தில் தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது தெரியுமா?

கி.பி.15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மராத்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் தோன்றியது. அம்மன்னர்களிடம் அமைச்சராயிருந்து ஓய்வு பெற்ற பெரியசாமி சாஸ்திரி என்பவர் தாம் முதன் முதலில் ஹரிகதையை அறிமுகப்படுத்தியவர்.

நாம சங்கீர்த்தனம்: பிற்காலத்தில் ஹரிகதை என்பது 'நாம சங்கீர்த்தனம்' என்று பெயர் பெற்று அதாவது பக்தர்கள் ஒன்று கூடி ஒரே குரலில் இறையணர்வு மிக்க பாடல்களைப் பாடிப் பரமனை வழிபடும் மரபாயிற்று. பகவான் ஒருமுறை நாரதரிடம் கூறினாராம்.

"நான் மோட்சத்திலோ முனிவர்களின் இருதயத்திலோ அல்லது ஒளிமிக்க கதிரவனிடத்திலோ வாசஞ்செய்ய வில்லை எங்கே என் அன்பர்கள் ஒன்றாய்கூடி என் நாமத்தை உச்சரிக்கின்றார்களோ அங்கேதான் என் இருப்பிடத்தை நான் காண்கின்றேன்" என்றாராம் அப்பர் சுவாமிகளும் "பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி" என்றுதான் பாடியுள்ளார்.

இவ்வாறு பக்தர்கள் பாடிப் பரவசமடைந்து பகவானைத் துதிப்பதற்கென்றே பஜனை மண்டபங்கள் எழலாயின. தஞ்சை சரபோஜி மன்னரும் தம் அரண்மனையில் சரஸ்வதி மஹாலில் 'சங்கீத மஹா¡ல்' ஒன்றைக் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக இருந்தவர் மில்டன்சிங்கர் இவர் ஒருமுறை இந்தியா வந்திருந்த போது சென்னையில் 'நாம சங்கீர்த்தனம்' ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் தன் தாய் நாடு திரும்பிய இவர் 'நாம சங்கீர்த்தனம்' பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார். அமெரிக்காவில் சமூகவியல் மாநாடு ஒன்று நடை பெற்றபோது அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் மில்டனின் நண்பர் ரங்கராமானுஜ ஐய்யங்கார் அவர்கள். தன் ஆராய்ச்சிக் கட்டுரையை அவரிடம் காண்பித்து அவரது பாராட்டுதல்களைப் பெற்றார். ஆன்மீக ஒருமைப் பாட்டிற்கு வழிகோலிய இச்சம்பவம் - அமெரிக்கரின் உள்ளத்தையும் ஈர்த்த நாம சங்கீர்த்தனம் -தமிழகம் எண்ணிப்பார்த்துப் பரவசப்பட வேண்டிய ஒன்றாகும்.

பக்திக்கு விளக்கம் கூற வந்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 'அறிவின் முதிர்ச்சி பக்தி; பக்தியின் முதிர்ச்சி ஞானம்' என்று அழகான விளக்கம் ஒன்று தந்திருக்கிறார். இவ்வாறு பக்தி செலுத்தியவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. காசி மாநகரத்தில் கபீர்தாசர், துளசிதாசர்; வங்காளத்தில் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், ஆந்திர மாநிலத்தில் ஷேத்ரஞ்யர், இராமதாசர்; கர்நாடகத்தில் புரந்தரதாசர், கனகதாசர்; மதுராவில் ஹரிதாசர், இராஜஸ்தானில் பக்தை மீரா பாய் மற்றும் நாராயணதீர்த்தர் சதாசிவ பிரம்மேந்திராள் இவ்வாறு கூறிக்கொண்டேபோகலாம். இவர்களெல்லாம் பகவானின் மஹிமையைக் கீர்த்தனங்களாகப் பாடிப் பரவசமடைந்தார்கள். ஆனால் நாம சஙகீர்த்தனம் என்ற பெயரில் பிரார்த்தனை செய்யும் முறையை அறிமுகம் செய்தவர் கோவிந்தபுரம் போதேந்திர ஸ்வாமிகள்.

போதேந்திர ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில் மண்டன மிச்ர அக்ரஹாரத்தில் புருஷோத்தமன் என்ற பூர்வாசிரமப் பெயருடையவர். காஞ்சி பீடாதிபதி ஆத்ம போதேந்திரர் ஐந்தே வயது நிரம்பிய புருஷோத்தமனைத் தம் மடத்துக் குழந்தையாக்கிக் கொண்டு 16 வயதிற்குள்ளாகவே வேத வேதாந்த சாத்திரங்கள் அனைத்தையும் கற்பித்துப் பின்னர் மடத்தின் 59வது பீடாதிபதியாக்கினார்.

சிறப்பு இது மட்டுமல்ல, இவர் வாழ்க்கையில் அநேக அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன, ஸ்ரீ தர ஐயாவாள் சந்திப்பு: போதேந்திரர் தம்முடைய குரு மேற்கொண்ட சேது யாத்திரை நினைத்தபடி முற்றுப்பெறாமல் பாதிவழியிலேயே கருடநதி தீரத்தில் மஹா சமாதி அடைந்து விட்ட குருவின் ஆசையைத் தான் முற்றுப்பெறச் செய்ய வேண்டுமென்று எண்ணி அந்த யாத்திரையைத் தான் மேற்கோண்டார். பல புண்ணிய தலங்களைத் தரிசித்து விட்டு திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார். இதுவரை கண்டிராத அளவிற்கு அங்கு பக்தர்கள் நாம சங்கீர்த்தனம் செய்யும் அழகைக் கண்டு வியந்து போனார். இந்தக் கைங்கர்யத்தைச் செய்து வருபவர் 'திருவிசலூர்' என்ற ஊரைச்சேர்ந்த ஸ்ரீதர ஐயாவாள் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட ஸ்ரீதர வெங்கடேசர் என்பவர் என்று அறிந்தார் அந்த மஹா¡னுபாவரைச் சந்திக்க விரும்பினார் போதேந்திர ஸ்வாமிகள்.

ஸ்ரீதர ஐயாவாள் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் திருவிடைமருதூர் மஹாலிங்க சுவாமியைத் தரிசிக்க வருவது வழக்கம். எனவே அடுத்து வந்த பிரதோஷ நாளில் இருவரும் சந்தித்தனர். நாமசங்கீர்த்தனம் இருவரையும் நெருக்கமாக ஈர்த்தது. மடத்துப் பணிகள் தன்னைக் கட்டிபோட்டது போல் உணர்ந்த ஸ்வாமிகள் மடத்துப் பொறுப்பைத் தம் சிஷ்ய ஸ்வாமிகள் 'அத்வைதபிரகாசர்' என்பவரிடம் ஒப்புவித்துவிட்டு ஐயாவாளுடன் தல யாத்திரை மேற்கொண்டார். இருவருமாக ஊர் ஊராகச் சென்று நாம சங்கீர்த்தனம்செய்து, நாம மஹாத்மியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லி பாகவத உபந்யாசங்களைச் செய்து மக்களின் மனத்தை இறைவன் பக்கம் ஈர்த்தனர். எங்கெல்லாம் மக்கள் நாம மஹிமையை ஏற்கத் தயங்குகிறார்கள் என்று அறிந்தார்களோ அங்கெல்லாம் சிற்சில அதிசயங்களை நிகழ்த்திக்காட்டி நாம மஹிமையை உணர்த்தினார்கள்.

போதேந்திர ஸ்வாமிகளும் ஸ்ரீதர ஐயாவாளும் நிகழ்த்திய சுவையான சில அதிசயங்களை அடுத்த இதழில் காணலாம்.

டாக்டர். அலர்மேலு ரிஷி

© TamilOnline.com