சேமியா போளி
தேவையான பொருட்கள்

சேமியா - 1 டம்ளர்
தேங்காய் துருவல் - 1 கப்
சர்க்கரை - 1 பெரிய கப்
மைதா மாவு - 300 கிராம்
கேசரி பவுடர், ஏலக்காய்,
பச்சை கற்பூரம், நெய் - தேவையான அளவு

செய்முறை

மைதா மாவுடன் சிட்டிகை உப்பும், கேசரி பவுடரும் சேர்த்துத் தண்ணீர் விட்டுத் தளரப் பிசைந்து மூன்று பெரிய ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊற வைக்கவும்.

கேசரி பவுடருக்குப் பதில் மஞ்சள் பொடியும் போட்டுக் கொள்ளலாம்.

சேமியாவை வாணலியில் நெய் விட்டுச் சிவக்க வறுக்கவும்.

அதிலேயே ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுப் பாதி வேகும் போது சர்க்கரையும், தேங்காய் துருவலும் போடவும்.

நன்றாக கிளறி கெட்டியானதும் ஏலக்காய், பச்சை கற்பூரம் போட்டு இரண்டு ஸ்பூன் நெய் விட்டுப் பூரணம் செய்து கொள்ளவும்.

போளிக்கு முன் சொன்ன மாதிரியே மைதா மாவை உள்ளங்கையளவு தட்டிப் பூரணத்தை நடுவில் வைத்து வட்டமாக, எண்ணெய் அல்லது நெய் தொட்டுக் கொண்டு மெல்லியதாகத் தட்டி தோசைக்கல்லை அடுப்பில் போட்டு நிதானமாக எரிய விட்டு இருபுறமும் நெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

தங்கம் ராமசுவாமி

© TamilOnline.com