வித்தியாசமான நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ்
இன்றைக்கும் நாட்டிய உலகில் தஞ்சாவூர் கிட்டப்பாப் பிள்ளையின் சிஷ்யப் பரம்பரைக்குத் தனி மரியாதை உண்டு. வம்சா வழியாகக் கிட்டப்பாவின் பரம்பரையினர் நாட்டிய உலகிற்குச் சேவை செய்தவர்கள். அலாரிப்பு, சந்ததி, ஜதிஸ்வரம், ஷப்தம், பத வர்ணம், தில்லானா போன்ற நடன முத்திரைகளை உண்டாக்கியவர்கள். இவைதான் இன்று உலகம் முழுவதும் கையாளப்பட்டு வருகின்றன.

நாட்டிய உலகில் பரவலாக அறியப்பட்டவரும், இன்றைக்குத் தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சிகளைத் தந்து கொண்டிருப்பவருமான நர்த்தகி நடராஜன் கிட்டப்பாவின் சிஷ்யை. இவருக்குச் சின்ன வயதிலிருந்தே மென்மையான உணர்வுகளும், நாட்டியம், சங்கீதம் மீதான ஆர்வமும் அதிகமாக இருந்திருக்கிறது.

நாட்டியத்துக்கும் இவரது குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாவிட்டாலும், இயல்பிலேயே இவருக்குள்ள கலை ஆர்வம் தீவிரமானதன் பலன் இப்போது நாட்டியத்தாரகையாக இவரை உருவெடுக்க வைத்திருக்கிறது. தன்னுடைய கலை அனுபவங்கள் பற்றி நர்த்தகி கூறுகிறார்.

நாட்டியம் கற்பதற்குப் பட்டபாடு!

''மதுரையில் இருக்கின்ற அனுப்பம்பட்டி என்னோட சொந்த ஊர். சங்கீதத்துக்கும் நாட்டியத்துக்கும் சம்பந்தமில்லாத குடும்பம் எங்க குடும்பம். எங்க குடும்பம் மட்டுமில்லை, அந்த ஊரே கலை உணர்ச்சியில்லாத ஊர். என்னோட சின்ன வயதிலே அங்கே கலைநிகழ்ச்சிகள் ஏதும் நடைபெற்று நான் பார்த்ததேயில்லை.

எப்படி அப்படி ஒரு சூழ்நிலையிலிருந்து வந்து இப்படி ஆனேன்னு என்பது இன்னும் ஆச்சர்யமா இருக்கின்ற விசயம். சின்ன வயதில் நாட்டியத்தின் மேல் அத்தனை ஆர்வம் கிடையாது. ஆனால் கர்நாடக இசையைக் கேட்டால் எனக்குள்ள ஓர் உந்துதல் ஏற்படும். ஒரு உற்சாகம் ஏற்படும். அந்த வயதில் எனக்குள் பெண் தன்மை இருப்பதை உணர்ந்தேன். அப்ப எனக்குப் பல்லாங்குழி விளையாடுவது பிடிக்கும். அதே மாதிரி பழைய பழக்க வழக்கங்கள் மேல் ஒரு ஈடுபாடிருந்தது. இதுக்கும் என்னுடைய சங்கீத நாட்டிய ஆர்வத்திற்கும் தொடர்பு இருக்கிற மாதிரியான உணர்வுதான் எனக்குள் இருந்தது.

ஏழு வயதில் நான் பார்த்த சினிமாக்களில் இடம் பெற்ற நடனக் காட்சிகள் எனக்கு ரொம்பப் பிடிச்சதாயிருந்தது. மெல்லிசைப்பாடல்களை நான் அதிகம் விரும்பியதில்லை. அந்தக்கால நாட்டிய நட்சத்திரங்களான பத்மினி, குமாரி கமலா, வைஜயந்திமாலா இவங்க ஆடறப்போ ரொம்பக் கவனமாப் பார்ப்பேன். வீட்ல வந்து அதே மாதிரி ஆடிப் பார்ப்பேன். ஆரம்பத்தில் சினிமா பார்த்துத்தான் நான் நாட்டியத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல் லணும்.

இரண்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக் கூடத்தில் முதல்முதலாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அது சிவனும், சக்தியும் ஆடுகின்ற நடனம். வேறொரு சிறுமியை சிவனாகவும் என்னைச் சக்தியாகவும் நடிக்க வச்சாங்க. அந்த ஆசிரியை தீர்க்கதரிசின்னுதான் சொல்லணும். அப்போதே எனக்குள் பெண்மையின் லட்சணங்கள் இருந்திருக் கும்னு நினைக்கிறேன்.

நிகழ்ச்சி ரொம்ப நல்லா அமைஞ்சது. நல்ல வரவேற்பிருந்தது. "நல்லா டான்ஸ் பண்ற. முறைப்படி குரு வைத்துக் கத்துக்கிட்டா ரொம்ப நல்லா வருவேன்னு " பார்த்தவங்க சொன்னாங்க. எங்க வீட்ல நான் பள்ளிக்கூடத்துல ஆடுவதற்கே எதிர்ப்பிருந்தது. இதில் ஆம்பளைப் பையன் குரு வைத்து நாட்டியம் கற்றுக் கொண்டால் என் இயல்பே மாறிடுன்னு எங்க வீட்டில் பயப்பட்டார்கள். அதனால நாட்டிய நிகழ்ச்சிகளைத் திருட்டுத்தனமா பண்ணி னேன். லிப்ஸ்டிக், கண் மையெல்லாம் அழிச்சிட்டுத் தான் வீட்டுக்கு வருவேன். அதைத் தெரிஞ்சிகிட்டு வீட்டுல அடி பின்னிடுவாங்க. என்ன செய்வது எனக்கு நாட்டியத்தின் மேல்தான் தீராத ஆர்வம். அதுதான் எனக்கு வாழ்க்கை என்று முடிவு பண்ணிக்கிட்டேன்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து என் கூடவே இருக்கின்ற பாஸ்கர் சக்திதான் என்னை நாட்டியத்துக்குத் தயார் செய்து என்னைப் பேர் வாங்க வைத்தது. என்னோட முன்னேற்றத்துல பாஸ்கருக்கு அப்படி ஒரு கர்வம், பெருமிதம். பாஸ்கர் சக்தி என்னோட உயிர் மாதிரி.

முதன்முதலா நாடக நடிகை லட்சுமி என்பவர்கிட்ட நாட்டியம் கத்துக்கிட்டோம். ஆனால், எனக்கு இன்னும் முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டு மென்று ஆசை. அப்பத்தான் நாமலூர் ஜெயராமன் பற்றிக் கேள்விப்பட்டோம்.

நடிகர் கமலஹாசனின் அக்கா, தங்கைகள் எல்லாம் அவர்கிட்டதான் நாட்டியம் கத்துக்கிட்டாங்க. நான் அவர்கிட்ட நாட்டியம் கத்துக்கிறேன் என்று சொன்னப்ப, லட்சுமி அம்மாள் மறுத்தார்கள். நான் அவங்ககிட்ட கெஞ்சிக் கேட்டுச் சம்மதம் வாங்கி குருவைப் போய்ப் பார்த்தேன். ஆனால் என்னோட கெட்ட நேரம் அவருக்கு அப்ப மஞ்சள் காமாலை வந்து படுத்த படுக்கையாக இருந்தார். என்னை ஆடிக் காட்டச் சொன்னார். என்னோட ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, "முத்திரை எல்லாம் நல்லா பண்றே! யார்கிட்ட கத்துக்கிட்ட" என்று கேட்டார். "சினிமா பார்த்துக் கத்துக்கிட்டேன்" என்று சொன்னேன். உடனே, "ஒரு மாதத்தில் உடம்பு சரியாயிடும். நிச்சயமா எழுந்து வந்து சொல்லித் தர்றேன்" என்று வாக்குக் கொடுத்தார்.

சொன்ன மாதிரியே ஒரு மாதத்தில் வந்துவிட்டார். ஆனால் ஆடுறதுக்கு இடம்தான் இல்லை. எங்க ஆடினாலும் சத்தம் அதிகமா இருக்குன்னு விரட்டி விட்டுடுவாங்க. சில சமயம் அதிகாலை ஐந்து மணிக்கே சென்று திறந்து கிடக்கின்ற பள்ளிக்கூட வகுப்பில் ஆடிட்டு வருவோம். இப்படியே அவர்கிட்ட பைரவி, வர்ணம், சாவேரி, ஜதிஸ்வரம், தில்லானா வரைக்கும் கத்துக்கிட்டேன்.

தமுக்கம் மைதானத்தில் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு பண்ணினோம். அப்ப மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காராக சென்னை கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியார் இருந்தார். அவர்கிட்ட தேதி கேட்டேன். அவரும் உடனே வர்றேன்னு சொல்லிட் டார்.

அம்மாகிட்ட இன்விடேஷன் கொடுத்தேன். அங்க யாருக்கும் நான் அரங்கேற்றம் பண்ணப் போறேன்னு தெரியாது. ஏதோ நர்த்தகி நடராஜன் நிகழ்ச்சி பண்றான்னு நினைச்சிட்டாங்க. ஏன்னா ஏற்கனவே நிறைய நிகழ்ச்சி கொடுத்திருந்தேன். அது மாதிரி இது ஒரு நிகழ்ச்சி என்று நினைச்சிருக்காங்க.

எனக்கு ரொம்ப ஆச்சரியம் அன்றைக்கு நல்ல மழை. ஹால் முழுவதும் நிறையப் பேர் இருந்தாங்க. மழை யாரையும் வெளியே எழுந்திரிச்சிப் போக விடலை. நிகழ்ச்சியும் நல்லா அமைந்திருந்தது. எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். நான் பத்தாவது படிக்கும்போது இந்த அரங்கேற்றம் நடைபெற்றது.

ஆறேழு வயசுதான் நடனம் கற்றுக் கொள்வதற்குச் சரியான வயது என்று நான் நினைக்கிறேன். பதிமூன்று வயசாகும்போது உணர்வுகள் நல்ல பக்குவத்துக்கு வரும். அப்பத்தான் உணர்வுகளைப் புரிஞ்சு சரியான பாவனையோட ஆட முடியும்.

அரங்கேற்றத்துக்குப் பிறகு தென் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக ஜெயராமன் வாத்தியா ரோட நிகழ்ச்சி பண்ணினேன். நல்ல வாய்ப்புக் கிடைச்சது.

ஆனந்த விகடனில் அட்டைப்படமாகப் போட்டு என் நாட்டியத்திற்கான விமர்சனத்தையும் எழுதியிருந் தாங்க. அது எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நாட்டியத் தாரகை வைஜெயந்தி மாலாவுக்குக் கத்துக் கொடுத்த கிட்டப்பா பிள்ளை தஞ்சாவூரில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரைச் சென்று பார்த்தேன். அவரும் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அதனால எனக்குக் கத்துக் கொடுக்கச் சம்மதித்தார்.

பெங்களூர் போறேன் அங்க வான்னு சொல்வார். நானும் கொஞ்சம் காசு பணம் தயார் செய்து கொண்டு பெங்களூர் போவேன். எப்ப வந்தே என்று கேட்பார். இப்பத்தான் வர்றேன்னு சொல்வேன். சரி நாளைக்கு மெட்ராஸ் போறேன், அங்க வான்னு சொல்லுவார்.

மெட்ராசில் அவர் இருக்கிற இடத்தைத் தெரிஞ்சு கேட்டால் இந்த இடத்தில இருக்கேன். உடனே வான்னு கூப்பிடுவார். ஆட்டோவுக்குக் கூட காசு இருக்காது. அப்புறம் கஷ்டப்பட்டுத் தயார் பண்ணிப் போனால் மதுரைக்கு வான்னு கூப்பிடுவார். இப்படியே நிறையத் தடவை அலைய வச்சிருக்கார். நானும் என்னோட நாட்டியத்தைத் தேடி அலைஞ்சேன். இது சரிப்பட்டு வராது என்று தெரிந்து குருகுலம் மாதிரி அவர் வீட்டிலேயே ஒரு வருஷம் தங்கிக் கத்துக்கிட்டேன்.

ஒரு வருஷத்துக்குப் பிறகு சிதம்பரம் நாட்டியாஞ் சலியில் கிட்டப்பாவோட நானும் சேர்ந்து ஆடினேன். கிட்டப்பாவிடம் கற்றுக் கொண்ட பின், சென்னையில் கலாஷேத்திராவில் எனக்கு ஒரு இன்டர்வியூ நடந்தது. ஆடிக் காட்டச் சொன்னாங்க. நான் அலாரிப்பு ஆடிக் காட்டினேன். பத்மா சுப்பிரமணியம் வந்து யார்கிட்ட கத்துக்கிட்டேன்னு கேட்டாங்க. நானும் சொன்னேன்.

"இது என்ன பாணி தெரிமா? இந்த யாக்கை நெறி தெரியுமான்னு ?" கேட்டாங்க. எனக்குத் தெரியாது. ஆனால் பிடிச்சிருக்கு பண்றேன்னு சொன்னேன்.

"இது ரொம்ப அபூர்வமான விசயம். யாரும் இப்படி மேக்கப் போட்டு ஆடறதைக் கேலி பண்றாங்கன்னு சொல்லி நிறுத்திடாதே. சங்கோஜப்படாதே. ரொம்ப வருஷத்துக்கு முன்னால நிறைய பேர் இதைப் பண்ணியிருக்காங்க. நல்ல வரவேற்பிருக்கும். தொடர்ந்து பண்ணு" ன்னு சொன்னாங்க.

நான் நினைத்த மாதிரியே நாட்டியத்துக்கான வாழ்க்கைக்குள்ள வந்துட்டேன். சந்தோஷமா இருக்கிறேன். தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு: கண்ணம்மா
தொகுப்பு: த.சந்திரா

© TamilOnline.com