வாருங்கள் வடம் பிடிக்க...
முன்னர் ஒரு முறை சொன்னது போல், ஊர் கூடித்தேர் இழுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்னும் மூன்று வாரங்களில் தமிழிணைய மாநாடு 2002 ஆரம்பிக்கப் போகிறது. மற்ற மாநாடுகள் அரசு அமைப்புக்களால் அல்லது அப்படிப்பட்ட அமைப்புக்களின் துணையுடன் நடந்தன. முதல்முறையாக அத்தகைய உதவி இல்லாமல் இந்த மாநாடு நடக்கிறது. பொருளாதார மந்தநிலையாலும், பிற பிரசினைகளாலும் பெரிய நிறுவனங்களிடமிருந்து பொருளுதவி குறைவாகவே கிடைத்திருக்கிறது. தமிழ்மக்கள் அனைவரும் இயன்ற அளவில் முன்னின்று பங்கேற்க வேண்டும்.

உத்தமம் அமைப்பின் நண்பர் மணி மணிவண்ணனது பேட்டி இந்த இதழில் வந்துள்ளது. எப்போதும்போல் தெளிவாகவும், சுருக்கமாகவும் பல கோணங்களில் இந்த மாநாடு, தமிழ் மென்பொருள் போன்றவை பற்றி தமது கருத்தை சொல்லியுள்ளார்.

இரண்டு கருத்துக்கள் என்னைப் பெரிதும் பாதித்தன:

ஒன்று - ·பிஜி, மேற்கிந்தியத் தீவுகளில் தமிழ் வம்சாவழியினர் தமிழ் பேச, படிக்க வழியில்லாமல் போனதால் தமது பண்பாட்டு வேர்களை பெரிதும் இழந்துவிட்டனர். இந்தக் கோணத்தில் நான் யோசித்தது இல்லை. தாய்மொழி மிகவும் முக்கியம்; அதிலும் வெளிநாட்டில் இருப்பவர்க்கு மிகமிக முக்கியம்.

இரண்டு - எல்லாம் இலவசமாகவோ அல்லது மலிவாகவோ கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை பல முயற்சிகளுக்குத் தடையாகி விடுகிறது.

பொழுதுபோக்கிற்காக (சினிமா, கிரிக்கெட், இசை...) செலவு செய்வதில் ஒரு சிறு அளவு இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவாகச் செலவிட்டால் தமிழரது தொழில்நுட்ப அறிவும், திறமையும் எல்லாத் தமிழர்களுக்கும் பயன்பட ஆரம்பிக்கும். கணினியில் வந்த முதல் மொழிகளில் ஒன்று என்பது பெருமைப்படத் தக்க ஒன்று என்பதோடு நின்றுவிடாமல், அனைவருக்கும் பயன்படத்தக்கது என்ற நிலையை அடையும்.

'தமிழ் ஆராய்ச்சி' மடலாடற்குழுவில் ஒருவர், 'இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் அழிந்துவிடும்' என்னும் பொருள்பட - ஆதங்கத்துடன் எழுதியிருந்தார். அதற்கு, கோபப்படாமல், பொறுமையுடன் தர்க்க ரீதியில் அழகாக பதில் அளித்திருந்தார் நண்பர் மணிவண்ணன். அந்த மின்னஞ்சலை அப்படியே வெளியிட வேண்டும் என்று தோன்றியது; ஆனல் அதற்கு இட வசதியில்லை. தென்றல் வலைத்தளத்தில் விரைவில் பிரசுரிக்க முயல்கிறேன்.

அரசியல், சினிமா பின்னிப்பிணைந்த தமிழ்நாட்டில் கிட்டதட்ட எல்லாவகையான கூத்துக்களும் நடந்து முடிந்துவிட்டன என்று நினைத்திருந்தேன். 'பாபா' படத்தை ஒட்டி அரசியல் தலைவர் திரு. ராமதாஸ் அவர்கள் ஆரம்பித்து வைத்த 'வைபவம்' ஒரு மாதிரியாக முடிந்து விட்டது. சில முக்கிய கேள்விகள் எழுந்தன; ஆனால் எப்போதும்போல பொங்கியெழும் உணர்ச்சி மற்றும் வன்முறை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பெரும் ஆதரவைப் பெற்றுள்ள நடிகர்கள், ரசிகர்கள்மீது தங்களால் ஏற்படும் பாதிப்பின் அளவை அறிந்து செயல்பட வேண்டியது அவசியம். இதைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டும். பின்னர் பார்ப்போம்.

http://www.wikipedia.org என்ற வலைத்தளத்தைப் பார்த்தேன். அனைவரும் எழுதக்கூடிய ஒரு தளம். அதாவது, வலைத் தளத்துக்கு வரும் எவரும், அங்குள்ள செய்திகளை மாற்றலாம்; புது செய்திகளைச் சேர்க்கலாம். இது போல தமிழின் ஒரு தளம் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் (pasokan@chennaionline.com) என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
செப்டம்பர் - 2002

© TamilOnline.com