தமிழிசையும் தெலுங்கிசையும் ‘சங்கமம்’!
ஆகஸ்ட் 17ம் தேதி, விரிகுடாப் பகுதி தமிழ் மன்றமும் தெலுங்கு மன்றமும் முதன்றையாக இணைந்து ‘சங்கமம்’ என்ற இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியாகக் கொண்டாடப் பட்டது. இது ‘சுரபி’ என்ற புது இசைக்குழுவின் முதன் முயற்சி. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் இரசிகர்களும், தெலுங்கு ரசிகர்களும், திரளாகத் திரண்டு வந்து இரசித்தனர்.

‘இசை என்பது, மொழிக்கு அப்பாற்பட்டது, எனவே தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களை அனைவரும் இரசித்து மகிழுங்கள்’ என்ற முகவுரையோடு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார் விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் தலைவர் சிவகுமார் சேஷப்பன். ‘ஓம்கார நாதானு...’ என்ற ‘சங்கராபணம்’ படப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. பாடகர்கள் பிரபுவும், ஆர்த்தியும் அழகாகப்பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.

இந்த இசை நிகழ்ச்சியின் முன்னனி பாடகர்கள், விரிகுடாப் பகுதியின் பிரபல பாடகர்கள் மது, அனிதா, பிரபு, மற்றும் ஆர்த்தி. இவர்களில் மது, பிரபல பின்னணி பாடகர்கள் S. ஜானகி, P. சுசிலா, சித்ரா ஆகிய பாடகர்களோடு இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். அனிதா, பிரபல பின்னணி பாடகர்கள் யேசுதாஸ், உன்னி கிருஷ்ணன் ஆகிய பாடகர்களோடு இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

ஒரு தமிழ்ப் பாட்டு, ஒரு தெலுங்குப் பாட்டு, என மாற்றி மாற்றி 23 பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் ‘சுரபி’ இசைக்குழுவினர். தமிழ்ப் பாடல்களில் ‘போவோமா ஊர்கோலம்’ (சின்ன தம்பி), ‘ஆயிரம் நிலவே வா’ (அடிமைப்பெண்), ‘ஆல போல், வேல போல்..’ (எஜமான்), ‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி) ஆகிய பாடல்கள் நம்மைக் கவர்ந்தன. ‘சலாம் குலாமு’, ‘ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா’ ஆகிய பாடல்கள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமோ என தோன்றியது. தெலுங்குப் பாடல்களில் ‘ஓம்கார நாதானு...’ (சங்கராபணம்), ‘ஏதோ ஒக ராகம்’, ‘செளந்தர்ய லகரி’, ‘பிராணமே..’ (தெனாலி), ‘பங்காரு கோடி’ (நூவே காவாலி) ஆகிய பாடல்கள் நம்மைக் கவர்ந்தன. எட்டாம் வகுப்புப் படிக்கும் சிறிய பாடகி காயத்ரி, ‘ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்’ (மகாநதி) பாடலைச் சிறப்பாகப் பாடினார்.

பாடகர்களுக்கு பக்க பலமாக, ஹரி நிகேஷின் துடிப்பான டிரம்ஸ், முகுந்தன், நடராஜ், ராஜ் ஆகியோரின் தெளிவான கீ போர்ட், முரளியின் இதமான மிருதங்கம், சைலென் கருர் மற்றும் ராகேஸின் சிறப்பான கிடார் ஆகியவை இசைத்தன.

பாடல்களின் தேர்வு, புதியதாகவும் இல்லாமல், பழையதாகவும் இல்லாமல், மத்தியமாக இருந்தன. இசை என்பது, மொழிக்கு அப்பாற்பட்டது என்பது உண்மை தான். இருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு நேயர்களை திருப்தி செய்ய, இரு மொழியினருக்கும் பரியச்சமான (மொழிமாற்றம் செய்யப்பட்ட) பாடல்களைத் தேர்ந்தெடுத் திருந்தால் இந்த நிகழ்ச்சி இன்னும் நன்றாக வந்திருக்க கூடும்.

மொத்தத்தில், ‘சுரபி’ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, ‘அமுதசுரபி’யாக இல்லாவிட்டாலும், காதுக்கு ‘இனியசுரபி’யாக இருந்தது!

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com