ஆகஸ்டு மாதம் 30ம் தேதி மாலை, சான்லி யாண்டிரொவில், பத்ரிகாஸ்ரமத்தில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. பத்ரிகாஸ்ரமம் சான்ப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், சான்லியாண்டிரொ மலையடிவாரத்தில் அழகும் அமைதியும் குடிகொண்டு விளங்குகிறது. சுவாமி ஓம்காரநந்தா அவர்களின் முன்னிலையில் பாரதி கலாலயாவின் ஆசிரியர்களும், மாணவர்களும் நாட்டிய மற்றும் இசை நிகழ்ச்சிகளை வழங்கி பெருமானின் அருளை வேண்டினார்கள்.
பாரதி கலாலயா 1997 ம் ஆண்டு பிரிமாண்டு பகுதியில் துவங்கி இயங்கி வருகிறது. இந்திய பாரம்பரிய இசை, நடன வகுப்புகளை நடத்திவரும் இப்பள்ளி 30 மாணவர்களுடன் தொடங்கி இன்று 150 மாணவர்களை கொண்டதாக உள்ளது.
கண்ணனின் பிறப்பு முதல் துவங்கி, கோகுல லீலைகள், காளிங்க நர்த்தனம், கம்ச வதை, அமைதி ததும்பிய ஸ்ரீக்ருஷ்ண ராஜ்யம் எல்லாவற்றையும் கொண்ட கண்ணன் கனியமுதம் என்ற பாடலுக்கு, பரதநாட்டிய மாணவர்கள் நடனம் செய்தார்கள். சுமார் ஐந்து முதல் பனிரெண்டு வயதிற்குள் உள்ள இந்தச் சிறு குழந்தைகள், மிகவும் அருமையாக, பரத நாட்டிய நிகழ்ச்சியிலே, கதையம்சத்துடன் கோலாட்டம், விளக்கு நடனம் எல்லாவற்றையும் இணைத்து ஆடியது, காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந் நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைத்து நடத்தியவர், பாரதி கலாலயாவின் பரத நாட்டிய ஆசிரியர் வித்யா வெங்கடேசன்.
பாரதி கலாலயாவின் இசை மாணவர்கள் பஜனைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், கர்னாடக இசைக் கீர்த்தனங்கள், ஹிந்துஸ்தானி இசைப் பாடல்கள் என்று எல்லா இசை வழிகளிலும் இறைவனை வழிபட்டார்கள். பாடல்களுக்குத் துணை வாத்தியங்களாக ம்ருதங்கம், வயலின், புல்லாங்குழல், தபலா எல்லாம் மாணவர்களே வாசித்தது பாராட்டுக்கு உரியது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அனுராதா சுரேஷின் கச்சேரி நடந்தது. அனு என்று அறிந்தவர்களால் அன்புடன் அழைக்கப்படும் அனுராதா, பாரதி கலாலயாவை நிறுவியவரும், அதன் முதல்வரும் ஆவார். இவர் இசைப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பலரில், இங்கு நான் குறிப்பிட விரும்புவர்கள்- பாபநாசம் சிவன் அவர்களின் மகள் டாக்டர். ருக்மணி ரமணி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் மகள் இராதா. இசையில் தூய்மை, தாள நுணுக்கங்களில் கவனம், அடர்த்தியான சொற்கள் நிறைந்த பாடல்களைக் கூட நேர்த்தியாகப் பாடும் வல்லமை, பக்திச் சுவை விஞ்சி நிற்கும் பாணி ஆகியவை அனுவின் சிறப்புக்களில் சில எனலாம்.
அனுவுடன், ரோகிணி சிதம்பரம் என்கிற மாணவி பாடினார். பாரதி கலாலயாவின் மற்றொரு ஆசிரியை மைதிலி ராஜப்பன் வயலின் வாசித்தார். மிருதங்கம் வாசிக்க இருந்த ரவீந்திர பாரதி அவர்கள் வேலை காரணமாக வர இயலாமற் போன காரணத்தால், மிருதங்கம் இல்லாமலே கச்சேரி களை கட்டியது.
அமெரிக்க நாட்டில் பற்பல மொழி பேசுபவர்களும் கூடும் இடமான கோவிலிலே நடந்த இந் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு பல்வேறு மொழிகளில் அமைந்த பாடல்களை தேர்ந்து எடுத்திருந்தார் அனு. தீக்ஷிதரின் “ஸ்ரீமஹாகணபதிம்” என்ற கெளளை இராகக் கிருதியில் துவங்கி, “சகல சராசரா” என்கின்ற ஆரபி இராக கீர்த்தனை, ஸ்ரீராகத்தில் அமைந்த அன்னமாச்சாரியாரின் “வந்தேவாஸுதேவம்”, சுத்த தன்யாசியில் அமைந்த புரந்தர தாசரின் “நாராயணா”, விருத்தமாக ஒரு ஆண்டாள் பாசுரம், கல்கி அவர்களின் “காற்றினிலே வரும் கீதம்”, “ஹரிதுமஹரோ” என்ற மீராபஜன் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த 'சௌந்தரராஜம்' என்று ஒரு இசை வானவில்லைப் படைத்தார். கண்டசாபு, மிஸ்ரசாபு, ஆதி, ஜம்ப தாளம், ருபகம், ஏக தாளம் என்று பல விதமான தாளக் கலவையுடன் பாடல்களைத் தேர்ந்து எடுத்திருந்ததும் ஒரு சிறப்பு அம்சமாகும்.
பாகீரதி சேஷப்பன் |