கலாலயா வழங்கிய கர்நாடக சங்கீதம்
கர்நாடக சங்கீத உலகில் சரித்திரம் படைத்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா அவர்களை அறியாத இசை ரசிகர்கள் எவருமிலர். சென்ற மாதம் (ஆகஸ்டு) 28ம் தேதி, வளைகுடாப் பகுதி ரசிகர்களை இசைமழையில் நனைய வைக்கும் வகையில் பாலமுரளியின் கர்நாடக சங்கீதக் கச்சேரி, Palo Atto வில் உள்ள Gunn High Scholl, spanganberg அரங்கில் 'கலாலயா' மற்றும் 'Slicon Andhra' அமைப்புகளின் ஆதரவில் நடைபெற்றது.

வளைகுடாப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் திருமதி கலா ஐயர் கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அருங்கலையில் ஒன்றான கர்நாடக சங்கீதத்தை ஆதரித்து வளர்ப்பதற்காகவும், ஆர்வம் கொண்ட இளையோருக்கு சங்கீதம் கற்பிப்பதற்காகவும் 1985ம் ஆண்டு 'கலாலயா' என்ற அமைப்பினை (www.kalalaya.com) திருமதி. கலா ஐயர் உருவாக்கினார்.

வளைகுடாப்பகுதியில் கலா ஐயரின் பணியை பாராட்டி தமிழ்நாடு ஆர்ட்ஸ் & கல்சுரல் அகாடமி மற்றும் சென்னை சோஷியல் & கல்சுரல் அகாடமி விருது வழங்கி சிறப்பித்தது. சென்ற ஆண்டின் இசைவிழாவின் போது நீதிபதி எஸ். மோகன் அவர்கள் விருது வழங்கினார்.

'கலாலயா கர்நாடக சங்கீத உலகில் முன்னணியில் திகழும் பல இசைக்கலைஞர்களின் இன்னிசைக் கச்சேரிகளை வளைகுடாப் பகுதி ரசிகர்களுக்க வழங்கி வருகிறது. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், எம். பாலமுருளி கிருஷ்ணா, கே.ஜே. யேசுதாஸ், என். ரமணி, டி.என். சேஷகோபாலன், திருச்சூர் வி. ராமச்சந்திரன், கே.வி. நாராயணசுவாமி, சுதா ரகுநாதன், மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ், உன்னி கிருஷ்ணன் போன்ற பல முன்னணிக் கலைஞர்கள் கலாலயாவின் ஆதரவில் கச்சேரிகள் நிகழ்த்தி யிருக்கிறார்கள். இந்த வகையில் silicon Andhra வுடன் இணைந்து மீண்டும் கலாலயா பாலமுரளியின் இசை நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.

சில அரிய இசைக்கலைஞர்களின் குரல் வளத்தை அனுபவித்து ரசிக்கும் போது, சென்ற பிறவியில் இறைவனுக்குத் தேனாகபிஷேகம், செய்து இந்த குரலைப் பெற்றார்களோ என்று வியப்பதுண்டு. அம்மாதிரியான குரலினிமையும் வளமும் கொண்ட முன்னணி இசைக் கலைஞர் பாலமுரளி என்பதில் சந்தேகமில்லை. கண்களை மூடிக் கொண்டு அந்த இனிய குரல் கீழிருந்து மேல் ஸ்தாயி வரை அனாசயமாக சஞ்சாரம் செய்யும் அற்புதத்தையும் நாள் முழுக்க அனுபவித்துக் கொண்டிருக்கலாம். கடந்த அறுபதுக்கும் மேலான வருடங்களாகப் பாடிக் கொண்டிருந்தாலும் பாலமுரளியின் குரல் இனிமை யும், கம்பீரமும் சற்றும் குறையாமல் திகழ்ந்தது. இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் வழங்கி கெளரவித்த இந்த கலைஞர் தலைசிறந்த பாடகர் மட்டுமல்லாது இசைமேதையும் ஆவார். ஆயினும் சமீபகாலத்தில் பாலமுரளியின் கச்சேரிகள் சம்பிரதாயவகையில் விஸ்தாரமான இசை நிகழ்ச்சிகளாக அமைவதில்லை என்பது ஒரு குறையே. இந்தக் கச்சேரியும் இதற்கு விதி விலக்கல்ல...

கம்பீர நாட்டையில் 'அம்மா, நீ ஆனந்த தாயே' என்ற வர்ணத்துடன கச்சேரி துவங்கியது. தொடர்ந்து ஆரபியில் 'மஹாதேவ ஸ¤த' என்ற கீர்த்தனை. முதல் மூன்று நான்கு பாடல்கள் வரையில் 'மைக்' சரியாக அமையாமல், ஒலியமைப்பு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதனால் பால முரளியின் இனிய குரலையும் டெல்லி சுந்தரராஜனின் அருமையான வயலின் வாசிப்பையும் இடையூறு இல்லாமல் நன்றாகக் கேட்டு ரசிக்க முடியவில்லை. மைக் அமைப்புகளைச் சரி செய்த பின்னர் இசைக்கப்பட்ட 'ஸொகஸ¤ஜுடாமா' என்ற தியாகராஜர் கீர்த்தனையும், 'வருக, வருக மாமயிலேறியே' என்ற தமிழ் பாடலும் தரமாக அமைந்தன. முதலில் பாடிய கம்பீர நாட்டை வர்ணமும், 'மஹாதேவஸ¤த', 'வருக, வருக' ஆகிய பாடல்களும் பாலமுரளி அவர்களே இயற்றி இசையமைத்த பாடல்கள். இனிமையான பாடல் வரிகளும், தரமான இசையும் அவரது புலமையையும், இசை ஞானத்தையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந் தன.

ஆனாலும் அவர் எந்த ஒரு பாடலைப் பாடும் போதும் விரிவான ராக ஆலாபனை செய்யவில்லை. இதனால் சுந்தர்ராஜன் ஒரு திறமையான, புகழ்பெற்ற வயலின் வித்வானாகத் திகழ்பவரானாலும் அவரது வயலின் வாசிப்பிற்குத் தக்க சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது. ராகஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரங்கள் இவை ஏதுமின்றி நேரடியாக ஸ்ரீரஞ்சனி ராகத்தில் ''ஸ்ரீரம்ய சித்தாலங்காரஸ்வரூபா'' என்ற தியாகராஜர் கீர்த்தனையை பாலமுரளி பாடிய பிறகு, கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம் அவர்களின் மிருதங்கத் தனி ஆவர்த்தனம் நடைபெற்றது. மந்திரக்கட்டு போட்டாற் போல் அவரது 'விறுவிறுப் பான' வாசிப்பிற்குக் கட்டுண்ட ரசிகர்கள், கரகோஷம் செய்து மகிழ்ந்தனர்.

இடைவேளைக்குப் பிறகு பாலமுரளி வானொலில் நடைபெறும் 'நேயர் விருப்பம்' நிகழ்ச்சி போல் ரசிகர்கள் விரும்பிக் கேட்டு தமது இனிய குரலிலேயே பிரபலமாகிய 'நகுமோமு', 'பிபரே ராமரஸம்', 'நாராயணதே' போன்ற பாடல்கள் பலவற்றை ஆலாபனை, ஸ்வரங்கள் போன்ற அலங்காரங்கள் ஏதுமின்றி வரிசையாகப் பாடிவிட்டார். இறுதியில் அவரே இயற்றி இசையமைத்த குந்தளவராளி தில்லானவை விறுவிறுப்பாகப் பாடினார். அதற்கு இணையான மிருதங்க வாசிப்பும் மனதைக் கவர்ந்தது. கச்சேரியின் முடிவில் பாடிய மங்களம் ரசிகர்களின் கைதட்டலுடன் 'பஜனை' பாணியில் அமைந்தது. மூன்று மணி நேரம் நடைபெற்ற கச்சேரியானாலும், பாடகர் பக்க வாத்ய கலைஞர்கள் யாவருமே திறமையான முன்னணிக் கலைஞர்கள் என்றாலும், ஒரு சம்பிரதாயமான, விஸ்தாரமான இசை கச்சேரியைக் கேட்ட நிறைவு கிடைக்க வில்லை. அபாரமான குரலும், அளவற்ற இசை ஞானமும் படைத்த பாலமுரளி, ரசிகர்களின் இந்த குறையை இனிமேலாவது தீர்த்து வைப்பார் என்று நம்புவோம்.

அருணா

© TamilOnline.com