அமுதைப் பொழியும் நிலவே - நீ அருகினில் வராததேனோ! என்று சிறுவயதில் நிலவைப் பார்த்து பாடிய கவிதை இன்றும் நினைவில் உண்டு. மனதினில் ஆசையை மூட்டியப் பின்னே மறைந்தே ஓடிடலாமா? என்று நிலவின் மீது சிறு கோபம் கொண்டதும் உண்டு. அழகான மாலை வேளையில்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி! என்ற கானம் காதின் வழி நுழைந்து நெஞ்சை நிறைத்ததுண்டு. இனிமையான காலைப் பொழுதில்: காலைப் பொழுதே வருக வருக! கன்னிக் கதிரே வருக வருக!
என்று வரவேற்கத் தவறியதில்லை. விருதுநகரில் கடைகடையாக ஏறி இறங்கி 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் பத்மினி பாடி ஆடும், 'எத்தனை கேள்வி, எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன்' என்ற பாடல் எந்த ஒலிப்பதிவு செய்யும் கடையில் உள்ளது என்று தேடி அலைந்த சுவையான நாட்கள் இளமைப் பருவத் துள்ளலை நினைவுருத் துவதுண்டு.
பி.சுசீலா, இவரது குரலில் தன்னைப் பறிகொடுத்த தென் இந்திய மக்கள் ஏராளம், ஏராளம். கே.வி. மகாதேவன் காலத்தில் நம்மைப் பார்த்து:
"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?" என்று கேள்விக் கணை தொடுத்த சுசீலா, இளையராஜா காலத்தில்:
ஓடுகின்ற தண்ணீயில ஒரசிவிட்டேன் சந்தனத்த சேர்ந்திச்சோ சேரலையோ சிவத்த மச்சான் நெத்தியிலே
என்று நம் ரசனையை ஒரு உரசு உரசிப்பார்த்தார். வெண்ணிலவே மண்ணில் வந்து மேடைஏறி நர்த்தனம் ஆடியது போல், நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட பி.சுசீலா, நம் முன் மேடையில் ஏறி நம் செவிக்கு விருந்து கொடுத்தால்?
"செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்றான் பொய்யா மொழிப் புலவன். அய்யகோ! சுசீலாவின் கச்சேரியன்று, விற்பனைக் காகச் செய்யப்பட்ட பதார்த்தங்கள் விற்பனை யாகமலே வீடு வந்து சேர்ந்தனவே, இந்த உண்மையின் காரணத்தாலே வள்ளுவனை, பொய்யா மொழிப் புலவன் என்றனரோ?
செப்டம்பர், 7 அட்லாண்டா வாழ் தமிழ் மக்களுக்கு ஓர் இனிய நாளாக உதித்தது. பி.சுசீலா அவர்களின் கச்சேரியை அட்லாண்டா தமிழ் சங்கமும், இன்னோ கான்ஸப்ட் நிறுவனமும் சேர்ந்து, தமிழ் மெல்லிசை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தனர். மிகக் குறுகிய கால கட்டத்துக்குள், ஒரு திரையரங்கையே இன்னிசை மேடையாக மாற்றிய பெருமை இன்னோ கான்ஸப்ட் உரிமையாளர் பாலுவைச் சாரும். கச்சேரி முடிந்த பின், திரையரங்க உரிமையாளரே பாலு அமைத்த மேடையைப் பற்றிச் சிறப்பாக பேசினார் என்றால், இதைவிட வேறு என்ன பாராட்டு வேண்டும்?
பி.சுசீலா அவர்களின் பெருமையை தமிழ் ரசிகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், மெல்லிசைக் கச்சேரி ஆரம்பிக்கும் முன் பி.சுசீலாவைப் பற்றிப் பேசிய தேன்ராஜாவின் குறிப்பில் இருந்து சில: "ஏப்ரல் 2001 இல் ராஜ் டிவி நிறுவத்தினர், பி.சுசீலாவின் 50 வருட திரைப்பட சேவையைப் பாராட்டி சென்னையில் ஓர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இந்த 50 வருடத்தில் பி.சுசீலா 40,000 க்கும் மேலாகப் பல மொழிகளில் பாடி சாதனை செய்துள்ளார். 1969இல் இந்திய அரசாங்கம் பின்னனிப் பாடகிக்கான பரிசை அறிவித்த பொழுது, உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்காக தான் பாடிய, 'நாளை இந்த வேளை பார்த்து' என்ற பாடலுக்காக, அறிவித்த அதே வருடத்தில் முதன்முதலில் பரிசைத் தட்டிச் சென்ற பெருமை பி.சுசீலாவையேச் சாரும்.
இப்படி பி.சுசீலா அவர்களின் சிறப்புகளைப் பற்றி எவ்வளவு கூறினாலும் அது மிகையாகாது. ஆனால், அட்லாண்டா தமிழ் மக்கள் கண்ட, கேட்ட, அனுபவித்த ஓர் உன்னதமான சிறப்பு பற்றி கூறுவதுவே என் எண்ணம்...
பெருந்தலைவர் காமராஜருக்கு நூற்றாண்டு விழா காணும் இக்கணத்தில், 'காமராஜ் ப்ளான்' என்று அக்காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட ஓர் உன்னதத் திட்டத்தை இங்கு விவரிப்பது இன்றியமை யாததாகும், அதாவது: மூத்தவர்கள் இளையவர் களுக்கு வழிவிடவேண்டும், மூத்தவர்கள் தள்ளி நின்று இளையவர்களுக்கு வழித்துணையாக இருக்க வேண்டும். இதை இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றுகின்றனரோ இல்லையோ, அரசியலுக்கு சம்பந்தம் இல்லா, பி.சுசீலா தன் கலைத்துறையில் பின் பற்றியது, அட்லாண்டா வாழ் தமிழ் மக்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டது.
தன்னுடன் மேடையில் பாடுவதற்காக சுஹாசினி, கலா வாசுதேவன், கலா சுப்ரமணியம், ஹரி, சுப்ரமணியன், கல்யாணசுந்தரம், ரவிச்சந்திரன் என்று பல அட்லாண்டா வாழ் கலைஞர்களை பி.சுசீலா அவர்கள் தயார் படுத்திய விதமும், அவர்கள் கொடுத்த ஊக்கமும் சொல்லுக்கு மிகையானது.
எழுபது வயதை நெருங்கும் இந்த வயதிலும், பல மணி நேரம் தொடர்ந்து நின்று பாடலை உன்னிப்பாகக் கவனித்து திருத்த வேண்டிய நேரத்தில் திருத்தி, பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டிய சுசீலாவின் பணிவான அன்பு அளவிடமுடியாதது. எந்தப் பாடலைப் பாடினாலும் அதற்கு அந்த மொழியிலேயே குறிப்பு எடுத்து எழுதிவைத்து, பொருளை உணர்ந்து சொல்லுக்கு, உச்சரிப்புக்கு உணர்ச்சியூட்டி சுசீலா பாடிக்காட்டிய விதத்தில் பிரமித்து நின்றேன் என்கிறார் சுஹாசினி. இதில் சுசீலா அவர்களின் மொழித்திறமையும், கவிதையை ரசிக்கும் தன்மையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவுறுகின்றன.
'அமுதைப் பொழியும் நிலவே' என்று ஆரம்பித்த சுசீலா அவர்கள் சில வரிகள் பாடி நிற்க, 'இதயம் மேவிய காதலினாலே...' என்று சுஹாசினி அவர்கள் பாட அரங்கமே அதிர்ந்தது. ஆடல் அரசன் தில்லை நடராஜனே விக்கிரத்தில் இருந்து இறங்கி நாட்டியம் கற்று கொடுத்து, என்னுடன் ஆடு என்று சொன்னால் எப்படி இருக்கும்? இத்தருணத்தைத் தான் கண்ண தாசன்:
'தூக்கிய காலை கீழே வைத்தால் பாக்கியை நான் ஆடுவேன்' என்று பாடினானோ?
அரங்கில் நிறைந்திருந்த ரசிகர்களுக்கு மேலும் மேலும் அதிசயங்கள் காத்து நின்றன. எழுபது வயதிலும் சிறிதும் மாறாத தேனான குரல், 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்று சுசீலா பாடிய பொழுது அமுதை உமிழும் இக்குரலுக்கு எதுவென்று பேர்? என்று கேட்கலாம் போல் இருந்தது. குரலில் மட்டுமல்ல இனிமை, மெல்லிசை நாயகி மற்றவருடன் பழகுவதிலும் ஒரு மென்மை. சிரிக்க சிரிக்க பேசினார், சீரான உடையுடுத்தி தன் கொஞ்சும் தமிழால் அனைவரின் நெஞ்சையும் கவர்ந்தார்.
"தமிழகத்தில் இருந்து வரும் கலைஞர்களை பலவருடங்களாக வரவேற்று, உபசரிக்கும் எங்க ளுக்கு, பி.சுசீலாவின் வருகை ஒரு வரப்பிரசாதம். ஒப்பற்ற விருந்தினர் அவர்" என்று மிக்க மகிழ்ச்சியுடன் கூறுகிறார், பி.சுசீலாவை வரவேற்று விருந்தளித்த ஆண்டாள் பாலு.
"பி.சுசீலாவை அட்லாண்டாவிற்கு அழைத்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். இது போல் சிறப்பான நிகழ்ச்சிகள் மேலும் மேலும் பல அட்லாண்டா வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு அளித்திட விரும்புகிறேன்" என்று ஊக்கத்துடன் கூறுகிறார் அட்லாண்டா தமிழ்ச்சங்கத் தலைவர் நாகி நடராஜன்.
"இளைஞர்களை ஊக்குவித்து பாட வைத்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன், அது சிறப்பாக முடிந்தது. இனி வரும் நாட்களில் இதை நான் தொடர்ந்து செய்வேன்" என்று கூறி விடை பெற்றார் முடிசூடா மெல்லிசை ராணி, பி.சுசீலா.
'நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்' என்றான் கவிஞன். 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' என்ற அந்தக் கவிஞன் குடியிருந்தது கோப்பையிலாயினும், கூறிய தத்துவம் - சத்தியமே.
'அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து' என்று பாடிய, பி.சுசீலாவின் விருந்து தேனினும் இனியது. |