அக்டோபர் 2002 : வாசகர் கடிதம்
நான் இங்கு விசிட் விசாவில் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன். அமெரிக்காவிற்கு வந்தால் எங்கும் வேறு மொழி பேசுபவர்கள்தான் காணப்படுவார் களோ என்ற அச்சம் தென்றல் என்ற தமிழ் பத்திரிக்கையை பார்த்தவுடன் இங்கு வந்தும் நமது தாய்மொழிக்கு மதிப்பு இருப்பது மிகவும் பெருமையை அடையும்படி உள்ளது.

ஆனால் செப்டம்பர் மாத தென்றல் படித்தவுடன் உஷ்ணக் காற்று அடிப்பது போல் ஓர் உணர்வு பெற்றேன். அதில் முக்கியமாக சில கருத்துகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி கீழே சில விவரங்களை அளித்துள்ளேன்.

அட்லாண்டா கணேஷ் எழுதிய அட்லாண்டா தமிழர்களை அலறவைக்கும் குடும்பம் என்ற பகுதியில் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோர் எனக் கேட்ட தாய் என்ற திருக்குறள் போல அந்தப் பெருமை மகனுக்கு இல்லாவிட்டாலும் தாயாரால் அம்மகனுக்கு கிடைத்த என்று தாயாரைப் பற்றி எழுதியது பெருமையாய் இருந்தது. ஆனால் தாயாரின் இறுதிச் சடங்கில் வந்திருந்த போது தனது நண்பரின் குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தினை அச்சூழ்நிலையில் பொருட்படுத்தாமல் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்றயம் செய்துவிடல் என்ற தனது தாயாரின் வழியினைப் பின்பற்றாமல் தனது நண்பரின் குடும்பத்தினரை விமரிசித்திருப்பது மிகவும் வருந்துவதற்குரிய விஷயமே.

தானம் - அம்புஜவல்லி தேசிகாச்சாரி அவர்கள் கதையினைப் படித்தேன். ஸ்வாமிகள் புதிய செருப் பினை விற்பதினை விமர்சித்திருக்க வேண்டாம். அவர் அவ்வாறு செருப்பினை விற்கிறார் என்றால் அவர் சூழ்நிலை எப்படி என்று அவருக்குத் தெரியும். இவ்வாறு எழுதியிருப்பத சாஸ்திரிகள் வேதவித்து படித்து வந்தவர்களை ஏளனம் செய்வது போல் உள்ளது.

Dear AnnLander இப்பகுதியைப் படித்தேன். நெஞ்சு கொதிக்கிறது. இந்திய அமெரிக்கரின் புத்தி எவ்வளவு கீழ்தரமாக உள்ளது. இதையும் ஒருகதை என்று தென்றலில் போட்டு இந்திய கலாசாரத்தை கொச்சை ப்டுத்துயுள்ளீர்.

கெளசல்யா ஸ்வாமிநாதன்

******


செப்டம்பர் மாத தென்றல் இதழில் வெளியான ''கொஞ்சிராம்'' கட்டுரை அருமை. சர்நேம் பற்றி பல புதிய விஷயங்களை நகைச்சுவையுடன் தெரிந்து கொள்ள முடிந்தது. ''முன்னோடிகள்'' வரலாற்றில் பம்மல் சம்பந்தனார் பற்றி புதிதாய் எதுவும் கற்றுக்கொள்ள முடியவில்லையே! அவர் எழுதிய நாடகங்களின் பெயர்களோ, சுதந்திர போராட்ட காலத்தில் அவர் பங்கோ எதுவுமே இல்லாததது ஏமாற்றமாய் இருந்தது.

அசோக்குமாரின் ஆங்கில சிறுகதை அருமை. அதில் ஆங்காங்கு தமிழ் சேர்க்கப்பட்டிருந்தது புதுமையாக இருந்தது. திரு கோபாலகிருஷ்ணனின் கட்டுரை ஒரு திசையில் செல்லாமல் புயலில் சிக்கிய சிறுபடகைப் போல் இடமும், வலமும், முன்னும் பின்னும் செல்வது போல் இருந்தது. கீதா பென்னட் பக்கம் வழக்கம் போல் அருமை.

மீரா காசிநாதன்

******


''மாயா பஜார் சமையல் பகுதி அற்புதம். ப்ரசவத்திற்கு குழந்தைகளை பார்த்து கொள்வதற்கு மற்றும் பல காரணங்களுக்கு வரும் நம்மூர் மாமா மாமிக்கு அமெரிக்கா கண்டமா காண்டமா என அலசியிருக்கும் மீராசிவகுமாருக்கு பாராட்டுக்கள். ''ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்' மிகவும் பலனுள்ள கட்டுரை. பலருக்கு 'பாகவதம்' பற்றி தெரியாது. இவ்வளவு தெளிவாக ஸ்ரீக்ருஷ்ணனின் பெருமைகளையும் தத்துவத்தையும் விளக்கியிருக்கும் பிஸ்ரீ அவர்களுக்கு மிக்க நன்றி.

அலமேலு,
Detroit, MI

******


நானும் எனது கணவரும் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவில் பணிபுரியும் எனது பெரிய மகனுடன் தங்கிச் செல்ல 6 மாத விசாவில் வந்தவர்கள். இங்கு வந்த நாட்களிலிருந்தே தவறாமல் தென்றல் பத்திரிக்கையை படித்து வருபவர்கள். (ஏன் மாதம் ஒருமுறை மட்டும் வருகிறது என்ற ஏக்கத்துடன்..)

வசுந்தரா சுந்தரராஜன்

******


நான் சென்ற 4, 5 மாதங்களாக தங்கள் பத்திரிகையை தொடர்ந்து படித்து அவைகளில் உள்ள எல்லா தலைப்புகளும் சாதாரண மக்களுக்கு ஒரு உற்சாகத்தையும் ஊக்கத்தையம், அறிவையும் கொடுப்பதை பார்த்து ஒரு சந்தாதாரராக ஆனேன்.

மொத்தத்தில் getup, presentation, execution பலே ஜோர். வாசகர்கள் ஒத்துழைப்பினால் வருகிற மூன்று ஆண்டுகளில் தென்றல் குறைந்தது ஆறு லட்சம் காப்பியாக வெளிவர வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

அட்லாண்டா ராஜன்

© TamilOnline.com