முன் கதை:
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர்.
கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.
தான் வேலை புரியும் ஸைபோஜென் என்னும் பயோ-டெக் நிறுவனத்தில், ஒரு சக விஞ்ஞானியான ஷின் செங் என்பவர் தலை மறைவாகி விட்ட விஷயத்தை விசாரிக்க ஷாலினி சூர்யாவின் உதவியை நாடினாள். இந்த விஷயத்தை விசாரிக்க வந்த போலீஸ் டிடெக்டிவ் மார்க் ஹாமில்டன் சூர்யா சேர்ந்து கொள்வதை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானியின் கம்ப்யூட்டர் திரையில் இருந்த பாதியில் நிறுத்தப் பட்ட ஒரு மெமோவில் இருந்து ஷின் தானாக மறையவில்லை, கடத்தப் பட்டிருக் கிறார் என்று சூர்யா நிரூபித்தார். அதன் பிறகு அங்கு வந்த ஷின்னின் ஸெக்ரட்டரி மேரி ஷின் கடத்தப் பட்டார் என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள். அவள் உணர்ச்சிகள் உண்மையாகத் தோன்றினாலும் அவள் கூறியதில் எதோ சூர்யாவை நெருடவே அவர் மார்க்கிடம் கூறி எதோ காரியத்தை ரகசியமாக ஆரம்பித்து வைத்தார். அதன் பின் தலைமை விஞ்ஞானி ஜான் கென்ட்ரிக்ஸ¤டன் பேசுகையில் அவருக்கு ஷின் மீதிருந்த அபரிமிதமான வெறுப்பும் பொறாமையும் வெளிப்பட்டன. அவர் ஜென்·பார்மா என்னும் நிறுவனத்தின் பங்கு விலை சரிவால் மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதையும் சூர்யா வெளிப் படுத்தினார். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி வந்து ஷின் இருக்கும் இடம் பற்றியத் துப்பு கிடைத்து விட்டதாகக் கூறவே அனைவரும் பரபரப்புடன் அங்கு விரைந்தனர்...
******
மேரியை லேப் அலுவலகத்திலேயே இருந்து எதாவது வேறு தகவல் கிடைத்தால் அறிவிக்கும் படி கூறி விட்டு ஜானும் மற்றவர்களோடு கிளம்பினார்.
மார்க்கின் வேக நடைக்குச் சமமாக அவனுடன் செல்ல மீதி அனைவரும் ஓடவே வேண்டியிருந்தது! மூச்சு வாங்க அவனுடைய போலீஸ் கார் அருகில் வந்து சேர்ந்தவுடன் யார் யார் எந்தக் காரில் போவது என்ற சர்ச்சை பிறந்தது!
முதலில் மார்க் சூர்யா தன்னுடன் வரட்டும், மீதிப் பேர் இன்னொரு காரில் பின் தொடரலாம் என்றான். ஆனால் கிரண், "மார்க், நீங்க என்ன சைரன் போட்டுகிட்டு பிச்சு கிட்டு போயிடுவீங்க. உங்க பின்னால நான் வந்தா புடிச்சு டிக்கட்டுதான் கிடைக்கும். அந்தக் கதை எனக்கு வேணாம்பா, நானும் உங்களோடயே தொத்திக்கரேன்!" என்றான்.
ஜானும் ஆட்சேபித்தார். "மார்க் நீங்க இன்னும் ஒரு விவரமும் சொல்லலை. எனக்கு அது பத்தி கேட்காம தலையே வெடிச்சுடும் போலிருக்கு! நானும் உங்க கார்லயே வரேன்" என்றார்.
ஷாலினியும், "ஷின் பத்தி என்ன துப்பு கிடைச்சதுன்னு நானும் கேட்கணும். நானும் உங்க கார்லயே வரேன். அதான் கார் பிரம்மாண்டமா இருக்கே!" என்றாள்.
மார்க் வேறு வழியில்லாமல், "ம்... சீக்கிரமா ஏறிக்குங்க, உடனே போகணும்!" என்று அவசரப் படுத்தினான். சூர்யா முன் சீட்டில் உட்கார, மீதி மூவரும் பின் சீட்டில் அடைந்து கொண்டு ஆவலாக முன்னால் சாய்ந்து மார்க் சொல்வதைக் கேட்க ஆயத்தமானார்கள்!
மார்க் காரை விர்ரென்று பின்னால் செலுத்தி, ஒரு கண நேரம் கூட நிற்காமல் படு வேகமாக முன்னால் ஓட்டவே காரிலிருந்தவர்கள் கிலிகிலுப்பை மணிகள் போல் குலுக்கப் பட்டனர்! சூர்யாவுக்கும் ஷாலினிக்கும், கிரணுடன் காரில் போய் போய் அது கொஞ்சம் பழக்கமாகி விடவே சமாளித்துக் கொண்டனர். கிரணுக்கு, வேறு யாரோ அந்த மாதிரி ஓட்டி, அவன் உட்காருவது புது பழக்கம் ஆதலால் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டான். ஆனால் ஜானின் முகம் போன போக்கு அவனுக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது! அவர் இம்மாதிரி வேகமும் குலுக்கலும் வாழ்க்கையிலேயே எப்போதும் அனுபவித்ததில்லை பாவம்! குடல் குலுங்கி வாய்க்கு வந்தது போல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தார்!
மார்க் சைரனையும், பளிச் பளிச்சென்னும் போலீஸ் வாகன விளக்குகளையும் போட்டுக் கொண்டு வெகு வேகமாக ஒட்டிக் கொண்டு கிடைத்த செய்தியை விவரித்தான்.
ஷின் மவுன்டன் வ்யூவில் ஒரு மோட்டலில் ஒரு அறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்ததாகவும் அங்கிருந்து ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டிருப்பதாகவும், போலீஸ் வந்தவுடன் கடத்தியவர்கள் ஓடி விட்டதாகவும், மார்க் தெரிவித்தான். ஷாலினியின் மனத்தில் ஷின் உயிரோடிருக்கிறார் என்பதில் நிம்மதியும் ஆனால் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலையும் கலந்து கரை மேல் மோதும் அலைகள் போல் மாற்றி மாற்றி மோதின.
ஜான், "மார்க், எப்படி ஷின் அங்க இருக்கார்னு கண்டு பிடிக்க முடிஞ்சது? ரிமார்க்கபிள்!" என்று வியந்தார்.
மார்க், "சூர்யாவுக்குத் தான் நன்றி சொல்லணும். அவர் மேரி கிட்ட பேசினப்புறம் கொடுத்த ஐடியாவினால ஒரு ·போன் நம்பர் கிடைச்சதா சொன்னேன் இல்லையா, அதை வச்சுத்தான் கண்டு புடிச்சோம். அத வச்சு முதல்ல ஒரு செல் ·போன் நம்பர் கிடைச்சுது. அது உங்களுக்கு தெரியும். அப்புறம் அதை லொகேஷன் ட்ரேஸ் பண்ணி எங்கே இருக்காங்கன்னு கண்டு புடிச்சுட்டோம்!" என்றான்.
ஜான், "சூர்யா அப்படி என்னதான் ஐடியா குடுத்தார்? சொல்லாம ஏன் சுத்தி வளைக்கிறீங்க?" என்று ஆத்திரப் பட்டார்.
மார்க் கறாராக, "சாரி, அதை இப்ப சொல்லக் கூடாது, ஜான்" என்று வெட்டி விட்டான். ஜான் தன் மனத் தாங்கலை விழுங்கிக் கொண்டு மெளனமானார்.
வேறு பேச்சு எழுவதற்குள், இன்னும் சில நொடிகளிலேயே மார்க் சரக்கென்று மருத்துவமனை முன் காரை நிறுத்தினான். அங்கு இன்னும் இரண்டு போலீஸ் வண்டிகளும் ஒரு ஆம்புலன்ஸ¤ம் மின்னும் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தன.
ஷின்னை ஒரு ஸ்ட்ரெட்சரில் படுக்கப் போட்டு உள்ளே எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
மேரியும் தகவல் கிடைத்து அங்கு வந்து விட்டாள். அங்கு ஷின்னை உடனே இன்டென்ஸிவ் கேர் வார்டுக்கு எடுத்துச் சென்று விட்டதால் காத்திருக்கும் அறையில் அனைவரும் அமர்ந்தனர். அங்கு அதற்குள் ஓடி வந்த ஷின்னின் மனைவி மட்டும் வார்டிலேயே பிடிவாதமாக அமர்ந்து விட்டாள். மற்றவர்களுக்குள், ஷின்னை யார் கடத்தியிருக்க முடியும் என்ற பேச்சு உடனே எழுந்தது.
"எனக்குத் தெரிஞ்சுடுச்சு!" என்று சூர்யா ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்! அனைவரும் கோரஸாக "என்ன? எப்படி?" என்று வாய் பிளந்தனர்!
சூர்யா விவரித்தார். "இந்த கேஸ்ல முதலிலிருந்தே எனக்கு ஷின் தானா மறையலை, கடத்தப் பட்டிருக் கார்னு சந்தேகம். கம்ப்யூட்டர் திரையிலிருந்து அது நிரூபணம் ஆச்சு. இந்த மாதிரி பல கேஸ்களில நடந்த படி, இங்கயும் லேபுக்குள்ள இருந்து யாரோ கடத்தினவங்களுக்கு உதவியிருக்கணும்னு நினைச்சேன்."
ஜான் கொந்தளித்து எழுந்தார். "லேபுக்குள்ளி ருந்தா? இருக்கவே முடியாது! என் லேப்ல அந்த மாதிரி நடக்காது! எதை வச்சு அப்படி சொல்றீங்க?"
சூர்யா அசராமல், "லேப் கதவுகள் எல்லாம் எலக்ட்ரானிக் பூட்டு. பாட்ஜ் இல்லாமத் திறக்க முடியாது. கடத்தல்காரங்களை யாரோ உள்ள விட்டிருக்கணும், இல்லன்னா போலி பாட்ஜ் குடுத்திருக்கணும்! மேலும், அவங்களுக்கு ஷின் செஞ்சுகிட்டிருந்த பாலிகீடைட்ஸ் ஆராய்ச்சி பத்திய எல்லா விவரங்களும், அவர் கடைசியா சாதிச்ச முன்னேற்றம் உட்படத் தெரிஞ்சிருந்தது." என்றார்.
ஜான் பரபரப்புடன் குதித்து, "பாத்தீங்களா, நான் சொன்னேன் இல்லையா, ஷின் கான்·பரன்ஸ்கள்ல தன் வேலையைப் பத்தி உளறிக் கொட்டினதுனால இது நடந்திருக்கணும்னு?! இப்ப நீங்களே சொல்றீங்க!" என்றார்.
சூர்யா அவரை எரித்து விடும்படி ஒரு முறைப்பு விட்டார். "டாக்டர் கென்ட்ரிக்ஸ், நான் அப்படி சொல்லலை. என் வாய்ல உங்க வார்த்தையைப் புகுத்தாதீங்க! ஷின் தன்னுடைய மகத்தான வெற்றி யைப் பத்தி வெள்ளிக் கிழமை சாயங்காலம்தான் லேப்ல சொன்னார். சனிக்கிழமை அவர் கடத்தப் பட்டுவிட்டார்! அதுனால, நிச்சயமா லேப்ல வேலை செய்யற யாரோதான் அந்த செய்தியை வெளியில அனுப்பிச்சிருக்கணும்!" என்றார்.
ஜான் மீண்டும் புகுந்து, "ஏன் அது ஷின்னாகவே இருக்கக் கூடாது?! அவரே கடத்தினவங்களோட சம்பந்தப் பட்டு அது எசகு பிசகா மாறி கடத்தல்ல போய் முடிஞ்சிருக்கலாமே?" என்றார்.
அது வரை பொறுமையாக இருந்த ஷாலினிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. "ஜான், நானும் முதல்லேந்தே பாத்துக்கிட்டிருக்கேன். நீங்க ஷின்னை மாட்டி விடறதுலேயே குறியா இருக்கீங்க. உங்களூக்கு ஷின்னை பிடிக்காம இருக்கலாம், அதுக்காக இப்படியா? அநியாயமா இருக்கே?!" என்றாள்.
சூர்யா புன்னகையுடன் அவளை சாந்தப் படுத்தினார். "கவலைப் படாதே ஷாலினி. ஜான் சொல்ற படி இருக்க முடியாதுன்னு சுலபமாவே காட்டிடலாம். ஷின்னே அவங்களை உள்ள விட்டிருந்தா அவங்க பேசிக் கிட்டிருக்கும் போது இழுத்துட்டுப் போயிருப் பாங்களே ஒழிய, அவர் பாதி வாக்கியம் டைப் செஞ்சி கிட்டிருக்கச்சே நடந்திருக்காது. யாரோ திடீர்னு வரதைப் பாத்துட்டு, வலுக்கட்டா யமாப் போகறத் துக்கு முன்னால ஒரு ஜாடை காட்ட சில வார்த்தை கள் டைப் அடிக்கத்தான் நேரம் இருந்திருக்கு."
மார்க் ஆமோதித்தான். "நீங்க சொல்றது எனக்கு சரியாத்தான் படுது. இது உள்வேலைனா யாரா இருக்க முடியும்? லேப்ல நூறு பேருக்கு மேல இருக்காங்களே?!" என்றான்.
சூர்யா "நான் அந்த விஷயத்துக்குத் தான் வந்து கிட்டிருந்தேன். லேப்ல நூறு பேர் இருந்தாலும், ஷின் கடத்தலை நடத்த, அல்லது குறைஞ்ச பட்சம், உட்பட யாருக்கு காரணமும் சந்தர்ப்பமும் சேர்ந்திருக்குன்னு பார்க்கணும். ஷின் ஒரு தனியாள். லேப்ல ரொம்ப பேர் கூட பழகறது கிடையாது. கடத்தினவங்களுக்கு அவரைப் பத்தி ரொம்ப விவரமாத் தெரிஞ்சிருந்தது. அவர் வெள்ளிக்கிழமை அடைஞ்ச முன்னேற்றம் அவங்களை உடனே காரியம் நடத்த தூண்டியது. அவர் அந்த சனிக்கிழமை லேப்ல இருக்கப் போறதும் தெரிஞ்சிருந்தது. கடத்தலுக்கு உதவி செஞ்சவங்க ஷின்னோட ரொம்ப நெருங்கி வேலை செஞ்சவங் களாத்தான் இருக்க முடியும் ..."
சூர்யா சில நொடிகள் பேசுவதை நிறுத்தி விட்டு சுற்றியிருந்தவர்களைக் கூர்ந்து பார்த்தார்.
"...அதுனால, அது மேரி, ஜான் அல்லது ஷாலினி யாத்தான் இருக்கணுங்கற முடிவுக்கு வந்தேன்!"
மெளனமாக இருந்த அறையில் சூர்யாவின் அறிவிப்பு ஒரு குண்டு போல் வெடித்தது! அவர் சுட்டிய மூன்று பேரும் காட்டிய உணர்ச்சிகள் மிகத் தீவிர மாக வும், ஆனால் மிகவும் வித்தியாசமாகவும் இருந்தன!
ஷாலினிக்கு சூர்யா தன்னையும் காட்டி விட்டாரே என்ற அளவு கடந்த திகைப்பும் வருத்தமும் ஏற்பட்டு அவள் முகத்தில் மாறி மாறி விளையாடின. வாய் திறந்தாலும் வார்த்தைகள் வர முடியாமல் தத்தளித் தாள். மேரி திடுக்கிட்டு, பயத்துடன் மூச்சைத் திடீ ரென்று ஒரு கணம் இழுத்துக் கொண்டு விட்டு, அதே போல் திடீரெனெ மேஜை மேல் முகத்தை கவிழ்த்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள். ஜானோ துண்டு துண்டாக வெடிக்காத குறையாக கோபத்துடன் குமுறி எழுந்து "வெளியே போ, என்ன திமிர், யாருன்னு நினைச்சே?!" என்றெல்லாம் பிதற்றினார்.
கிரணுக்கும் சூர்யா ஷாலினியை சேர்த்துக் காட்டி யது நெற்றிப் பொட்டில் அடித்தது போன்ற அதிர்ச்சி அளித்தது!
மார்க் சூர்யாவின் தீர்ப்பைத் தெரிந்து கொள்வதில் இருந்த மித மிஞ்சிய ஆவலால், ஜானை கடுமையாக அடக்கி உட்கார வைத்து விட்டு, "சூர்யா, மேல சொல்லுங்க சீக்கிரம்" என்றான்.
சூர்யா துரிதமாகத் தொடர்ந்தார். "ஷின் வேலை யைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்கறதுனால ஷாலினி யை அந்தப் பட்டியல்ல சேர்க்க வேண்டியதாப் போச்சே ஒழிய, முதலிலேயே ஷாலினி கடத்தல் விவகாரத்துல துளி கூட சம்பந்தப் படலைங்கறது எனக்கு வெளிப்படையாயிடுச்சு. ஏன்னா, ஷாலினிக்கு ஷின் மேல ரொம்ப மதிப்பும் நட்பும் இருக்கறது நல்லாத் தெரிஞ்சுது. மேலும், ஷாலினிதான் என்னை இந்த விசாரிப்புக்கே கூப்பிட்டது. அவ சம்பந்தப் பட்டிருந்தா, ஷின் தானா தலைமறைவாயிட்டதா லேப் நிர்வாகமும், போலீஸ¥ம் சந்தேகிக்கும் போது அப்படியே விட்டிருக்கணுமே ஒழிய அதை அவ்வளவுக் கஷ்டப்பட்டு மாற்ற முயற்சி செஞ்சிருக்க வேண்டி யதே இல்லை."
இதைக் கேட்ட ஷாலினிக்கும், கிரணுக்கும் பெருத்த நிம்மதியாயிற்று. சூர்யா தன்னைத் துளி சந்தேகிப்பதையும் தாங்கிக் கொள்ளாத ஷாலினிக்கு அவருடைய விளக்கம் திருப்தியைத் தந்தது. மிகவும் நெருங்கியவர்களையும் ஒரே தராசில் நிறுத்தி ஆராயும் அவருடைய பண்பு அவளுக்கு அவர் மேல் இருந்த மதிப்பையும், நேசத்தையும் கூட இன்னும் பெருக்கியது!
சூர்யாவின் பார்வை மேரியின் பக்கம் திரும்பியது. அவருடைய பாவம் மேரியின் மேல் கரிசனத்தைக் காட்டியது. சூர்யா, "மேரிக்கு ஷின் கடத்தப்பட்டது உண்மையிலேயே பெருத்த அதிர்ச்சியையும் கவலை யையும் கொடுத்திருப்பது மிகவும் வெளிப் படையாக உள்ளது. அவள் சம்பந்தப்பட்டிருந்தால் ஏன் இவ்வளவு பாதிக்கப்பட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை."
மேரி சூர்யா தன் மேல் இருந்த சந்தேகத்தை விலக்குகிறார் என்று தன் அழுகையை சற்று அடக்கிக் கொண்டு நிமிர்ந்தாள். ஒரு மெலிதான புன்னகையும் ஆச்சர்யத்துடன் கலந்து தவழ்ந்தது!
ஜான் வெடித்தே விட்டார்! "அப்படின்னா?! மூணு பேர்ல நான் தான் செஞ்சிருக்கணும்னு சொல் றீங்களா? என்ன அவ்வளவு சுலபமா மாட்டி விட முடியாது. நான் சும்மா விடமாட்டேன்!"
கிரண் ஷாலினியிடம், "இவருக்கு 'ஜான்' சரியான பேர் இல்லை! அப்பப்ப வெடிக்கறதுனால, ஏழு மலைன்னு பேர் வக்கறா மாதிரி, எரிமலைன்னே பேரை மாத்தி வச்சுடலாம்!" என்றான். ஷாலினி சிரித்தே விட்டாள்!
மார்க் எல்லோரையும் பேசாமல் இருக்கும் படி அடக்கி விட்டு சூர்யாவைத் தொடரச் சொன்னான்.
சூர்யா விவரித்தார். "ஜானுக்கு ஷின்னைக் கண் டால் சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவர் தன்னை அலட்சியம் செய்கிறார் என்பதால் விளைந்த கோபமும் பொறாமையும் அவரைப் பிடித்தாட்டுவது இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சது தான். ஜானுக்கு ஷின் செய்யும் ஆராய்ச்சியும் அதன் தற்போதைய முன்னேற்றத்தையும் பத்தி நல்லாத் தெரியும். அவர் ஷின் காணாமப் போன அன்னிக்கு லேப்ல இருந்திருக் கார். எல்லாத்தையும் விட, ஜென் ·பார்மா ஸ்டாக் கவிழ்ந்த்ததுனால, அவருக்கு பணக் கஷ்டமும் இருந்திருக்கு. இந்த விஷயத்தால அவருக்கு பணம் கிடைக்கும் நோக்கமும் இருக் கலாம். எல்லா விஷயங்களும் பொருந்தி ஜானைச் சுட்டிக் காட்டுது."
மார்க் அடக்கி வைத்திருந்ததால் சற்று பொறுத்துக் கொண்டிருந்த ஜான் இனிமேலும் அடக்க முடியாமல், மீண்டும் குமுறி எழுந்தார்.
"இதெல்லாம் சுத்த அபத்தம்! எதை எதையோ கதை கட்டி என் தலைல கட்டப் பாக்கறீங்க! ஷின் ஆராய்ச்சியைப் பத்தி இந்த லேப்ல நிறையப் பேருக்குத் தெரியும். ஷின் காணாமப் போன அன்னிக் கும் இன்னும் நிறையப் பேர் லேப்ல இருந்தாங்க. என் பணக் கஷ்டத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எங்கேந்தும் ஒரு சென்ட் கூட கிடைச்சதா நீங்கக் காட்ட முடியாது. நீங்க எப்படி எப்படியோ திரிக்கலாமே ஒழிய நிச்சயமாக் காட்ட உங்க கிட்ட ஒண்ணுமே இல்லை!" என்றார்.
சூர்யா, "ஒத்துக்கிறேன் ஜான். உங்களைச் சுட்டிக் காட்ட நிறைய விஷயங்கள் இருக்குன்னு சொன் னேனே ஒழிய, நீங்க தான் செஞ்சீங்கன்னு உறுதியா நான் சொல்லலை! நீங்க உட்படவில்லைன்னு இன்னும் உறுதியா சொல்லவும் முடியலை. ஆனா கடத்தல்ல நிச்சயமா உட்பட்டிருக்காங்கன்னு ஒருத்தரைச் சொல்ல முடியும்..." என்று நிறுத்தினார்.
ஜான் தன்னைச் சுற்றி நெருக்கிய சுருக்குத் தளரவே, நிம்மதியுடன் கலந்த வியப்புடன் பார்த்தார். "இன்னொருத்தரா?! அது யாரு?!"
மார்க்கும் குழம்பினான். "விளையாடாதீங்க சூர்யா. இப்பத்தானே ஷின் செஞ்ச ஆராய்ச்சி முன்னேற் றத்தைப் பத்தி அவ்வளவு நல்லாத் தெரிஞ்சவங்க ஷாலினி, மேரி, ஜான் மூணு பேர்தான்னு சொன் னீங்க? மூணு பேரையும் இப்ப அவுத்து விட்டுட்டு இன்னொருத்தர்னா? அது எப்படி?!" என்றான்.
சூர்யா விளக்கினார். "இன்னொருத்தர்னு சொல்ல லையே! ஒருத்தர்னு தான் சொன்னேன். அதுதான்... மேரி!"
மேரி திடுக்கிட்டாள். மற்ற அனைவருக்கும் திகைப்பு, வியப்பு!
சூர்யா இடைவெளி கொடுக்காமல் விரைந்தார். "...ஆமாம், மேரிதான். கொஞ்சம் முன்னால அவள பத்தி சொல்லச்சே அவளுடைய துக்கம் உண்மையாத் தோணிச்சுன்னு சொன்னேன், ஆனா அவ நிர பராதின்னு சொல்லலை.
"எனக்கு மேரி முதல்ல லேபுக்கு வந்து ஷின்னை சனிக்கிழமை காலைல பார்த்ததைப் பத்தி பேசின போதே எனக்கு சந்தேகம் வந்தது. அப்போ அவ தனக்கே தெரியாம ஒரு முக்கியமான விஷயத்தை நழுவ விட்டுட்டா. ஷின்னோட கம்ப்யூட்டர்ல அவர் எழுதின பேப்பர் பாதி வாக்கியத்தில இருந்ததைப் பத்தி அவளும் பார்க்காம, நாம யாரும் அவகிட்ட சொல்லாத போது, அவளே 'பாதி வாக்கியத்தில் நிறுத்திட்டார் பாவம்' அப்படின்னு சொன்னா. அவளுக்கு அது எப்படித் தெரிஞ்சுது?
"நான் அதுக்கு முன்னால, ஷின் 'i Mary be Forced ' அப்படின்னு எழுதினது, 'I may be forced' அப்படிங்கறதைத் தப்பா எழுதியிருக்கார்னு நினைச் சேன். ஆனா, மேரியோட பேர் தெரிஞ்சு, அப்புறம் அவ அந்த பாதி வாக்கியத்தைப் பத்தி சொன்ன வுடனே, அவர் மேரியைப் பத்தியே எழுதியிருக்கலா மோன்னு சந்தேகம் வந்தது. அப்படி மேரி உட்பட்டி ருந்தா, விசாரணை எப்படிப் போகுதுன்னு தெரிஞ் சுக்க கடத்தினவங்க அவளை திரும்பிப் ·போன்ல கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன். அதுனாலதான் மார்க்கை நான் இந்த கம்பனிக்கு வர, போற ·போன் கால் எல்லாம் நம்பர் ட்ரேஸ் பண்ணச் சொன்னேன். கம்பனிக்கு PABX இருக்கறதுனால, அது ரொம்ப சுலபம்னு எனக்குத் தெரியும்.
"மார்க் எடுத்த ட்ரேஸ்ல கிடைச்ச நம்பர்களில இருந்து ஒரு செல் ·போன் நம்பர் கிடைச்சது. மார்க், அதை பத்தி நீங்களே சொல்லலாமே?"
"ஆமாம், சூர்யா சொன்ன படி ட்ரேஸ் எடுத்து, பழைய PABX லாக் ·பைல் சோதனை பண்ணிப் பார்த்தோம். ரொம்ப வழக்கமா வாரம் ரெண்டு முறை ஒரே நம்பர்ல இருந்து ஷின் எக்ஸ்டென்ஷனுக்கு ·போன் வரது தெரிஞ்சது. அது ஒரு செல் ·போன் நம்பர்னும் தெரிஞ்சது. இன்னிக்கும் காலைல கால் வந்தது, ஆனா யாரும் எடுக்கலை. ·போன் கம்பனிக் குச் சொல்லி லோகேஷன் கண்டு பிடிக்கச் சொன்னோம். அவங்க குடுத்த விவரத்தை வச்சுத் தான் ஷின் இருக்கற மோடெல்லைக் கண்டு பிடிச்சோம். ஆனா, சூர்யா அது எப்படி மேரியோட சம்பந்தப் பட்டிருக்குங்கறீங்க"
"அது ரொம்ப சுலபம்! முதல்ல முடிவா சொல்ல முடியலை. ஆனா இப்ப அந்த நம்பர் கடத்தினவங் களுடையதுன்னு தெரிஞ்சதுனால தெளிவாயிடுச்சு. கடத்தினவங்களுக்கு ஷின் இங்க இப்ப இல்லைன்னு தெரியும்! அப்புறம் இங்க கூப்பிடக் காரணம்? மேரி கிட்டயிருந்து விசாரணையைப் பத்தித் தெரிஞ்சுக் கலாம்னு தானே இருக்கணும்?! மேரியோட செல் ·போன், வீட்டு ·போன் எல்லா ரெகார்டுகளையும் ·போன் கம்பனியிலிருந்து வாங்கிப் பாத்தா மேட்ச் எடுத்து, அந்த வெள்ளிக்கிழமை அல்லது சனி காலைல பேசினதா, இன்னும் நிச்சயமா நிரூபிச்சு டலாம்!"
மார்க், "ஷின்னைக் கேட்டாக் கூட சனிக் கிழமை நடந்த விஷயத்துல மேரியை உட்பட்டிருக்கறதைப் பத்தி சொல்வாரே?" என்றான்.
சூர்யா மறுத்தார். "இல்லை மார்க், நான் என்ன நினைக்கிறேன்னா, அந்தக் கடத்தல் விவகாரம் மேரிக்கும் அது ஒரு சர்ப்ரைஸா நடந்திருக்கு. அவளையும் பிடிச்சு கட்டிப் போட்டிருப்பாங்கன்னு. அதுனாலதான் ஷின் 'i Mary be forced' அப்படின்னு எழுதியிருக்கார். அப்புறம் மிரட்டி அவுத்துட்டுப் போயிருக்கணும்." என்றார்.
மேரியின் முகத்தில் அழுகையின் நடுவில் விளைந்த ஆச்சரியம் சூர்யா யூகித்த படியே நடந்தது என்று காட்டியது!
மார்க், "கடத்த வேண்டிய காரணம்?" என்றான்.
சூர்யா விளக்கினார். "பேராசைதான்! ஷின்னோட முன்னேற்றத்தை வச்சு, பேடன்ட் போடறத்துக்கு முன்னாலயே அவர் கிட்டேந்து வலுக்கட்டாயமா நுட்பத்தைத் தெரிஞ்சுகிட்டு தாங்க மட்டும் மருந்து செஞ்சுடணும்னு கடத்தியிருக்கணும்"
ஷாலினியை நம்ப முடியாத திகைப்பும், அதற்கும் மேலான வருத்தமும் வாட்டின. "ஏன் மேரி, ஏன் இப்ப டிச்செஞ்சே? உன்னோட ·ப்ரென்டாவே இவ்வளவு நாள் பழகினேனே, எனக்கு நீ இப்படின்னு... சே!"
மேரி விசும்பலுடன், "நான் கண்டிப்பா சொல்றேன் ஷாலினி, இப்படி ஷின்னைக் கடத்தற அளவுக்கு வந்து முடியும்னு நான் கனவுல கூட நினைக்கலை. ஒரு வருஷத்துக்கு முன்னால எனக்கு எதோ பார்ட்டியில அறிமுகமான ஒருத்தர் என் வேலையைப் பத்தி தெரிஞ்சவுடன், சுலபமா இன்னும் பணம் சம்பாதிக் கலாம். அப்பப்போ ஷின் ஆராய்ச்சியைப் பத்தி தகவல் தெரிவிச்சா போதும்னு சொன்னார். எனக்கும் என்னோட அம்மாவுடைய நோயைக் குணப்படுத்த அப்ப இன்னும் பணம் வேண்டியிருந்தது...
"ஆனா, அந்த சனிக்கிழமை, பேப்பர் எதோ பாக்கணும்னு என்னை வர வச்சு உள்ளே நுழைஞ்சு என்னைக் கட்டிப் போட்டு ஷின்னை இழுத்துகிட்டுப் போயிட்டாங்க. நான் எதாவது வெளியில சொன்னா நானும் மாட்டிக்குவேன், மேலும் உயிருக்கே ஆபத்து வரலாம்னு மிரட்டினதுனால மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாமத் துடிச்சிகிட்டிருந்தேன்.
ஆனா இங்க பாருங்க... ஷின்னைக் காப்பாத் தறத்துக்கு வேண்டிய விஷயத்தை கம்ப்யூட்டர்ல அடிச்சு நான் வச்சதாத் தெரியாம ஷாலினி கைப்பைல வச்சுடலாம்னு தயார் செஞ்சிருந்தேன். அதுக்குள்ள சூர்யா தந்த துப்பை வச்சு போலீஸே கண்டு பிடிச்சிட்டாங்க.
ரொம்ப ஸாரி ஷாலினி, நான் செஞ்சது தப்புத்தான். ஆனா கடத்தற அளவுக்கில்லை"
அதற்குள் ஷின் விழித்துக் கொண்டதாகத் தகவல் வரவே அனைவரும் வார்டுக்கு விரைந்தனர். மருத்துவர், சற்று பலகீனத்தைத் தவிர ஷின்னுக்கு வேறு ஒரு அபாயமும் இல்லை என்று கூறியதும்தான் மேரிக்கு நிம்மதி ஏற்பட்டது.
மார்க் மேரியை ஒரு காவலனுடன் கேஸ் பதிவு செய்ய அனுப்பி வைத்தான்.
ஷின் மலர்ந்த புன்னகையுடன் தனக்கு ஒன்றுமில்லை என்று மனைவியைத் தேற்றிக் கொண்டிருந்தார். ஷாலினியையும் பார்த்து முறுவலித்தார். ஷாலினி பதில் புன்னகையை வீசி விட்டு, அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சைகை செய்துவிட்டு, மீதி அனைவரையும் அங்கிருந்து வெளியே கிளப்பினாள்!
மார்க் மற்றவர்களை மீண்டும் லேபுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டு, சூர்யாவுக்கு மித மிஞ்சிய நன்றி கூறிவிட்டு, மேரியை விசாரிக்கத் தன் அலுவலகத் துக்கு விரைந்தான்.
ஜானை யாரும் கண்டு கொள்ளவில்லை! அவரும் எதோ பேச முயற்சித்து விட்டு யாரும் பதிலளிக் காததால் பிறகு பேசுவதாக முணுமுணுத்து விட்டு நகர்ந்து விட்டார்.
ஷாலினி "சூர்யா, இதைத் தீத்து வச்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! மேரிக்கு என்ன ஆகும்? பாவம் அவ ஒண்ணும் அவ்வளவு தப்பு செஞ்சிடலை. அப்பாவிடம் சொல்லி ஒரு நல்ல அட்டர்னி ஏற்பாடு பண்ணணும்..." என்றாள்
கிரண், "நீ இருக்கியே, சரியான ஆளு. யார் என்ன பண்ணாலும் உனக்கு ஐயோ பாவம் தான்! சரி அப்பா கிட்ட பேசிப் பார்க்கலாம். என்ன பாஸ், முடிஞ்சாச்சில்ல? கிளம்புவோமா?!" என்றான்.
ஷாலினி, "என்னடா அவசரம்?!" எனவே, கிரண், "நைனர் மன்டே நைட் ·புட்பால்! எங்க மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்தேன். நல்ல வேளை பாஸ் சீக்கிரமே முடிச்சிட்டார்!" என்றான்.
ஷாலினி தன் நன்றி கலந்த நேசப் புன்னகை யாலேயே சூர்யாவை மானசீகமாகத் தழுவி, கையாட்டி வழியனுப்பினாள். சூர்யா வழக்கம் போல் அவளது உணர்ச்சி வெள்ளத்தைக் கண்டு கொள் ளாமல், "பை ஷாலினி, அப்புறம் பார்க்கலாம்" என்று சாதாரணமாகக் கூறிவிட்டு நடையைக் கட்டினார். அதனால் ஷாலினிக்கு விளைந்த கணநேர முக வாட்டமும் பெருமூச்சும், கிரணையும் பாதித்தன! "ஷாலினி என்ன தடுத்தாலும் சரி, சீக்கிரமே என்னிக்காவது ஒரு நாள், இந்த சூர்யாவை மண்டைல தட்டி சொல்லத்தான் போறேன், இல்லன்னா இந்தக் கல்லு சாமி வழிக்கு வராது!" என்று கருவிக் கொண்டான்.
கிரண் தன் கடுப்பைக் காரின் மேல் காட்ட, அவனுடைய BMW Z8 வாயு வேகத்தில் பறந்தது!
(முற்றும்)
கதிரவன் எழில்மன்னன் |