கீதாபென்னெட் பக்கம்
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் மறுபடி சென்னை வந்திருக்கும் எனக்கு சட்டென்று கண்ணில் பட்டு மனதில் படிந்த விஷயம் - ஒளிப் பெட்டியில் எந்த சேனலைத் திருப்பினாலும் மெகா தொடர்களின் ஆக்கிரமிப்புதான். பெண்களுக்கென்றே தயாரிக்கப் படும் இத்தொடர்கள் பகலில் மதியத்திலிருந்து இரவு வரை தொடர்கின்றன. சில சமயத்தில் ஒரே நடிகரோ நடிகையோ வெவ்வேறு பாத்திரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடரில் நடிக்கும்போது யார், எவர், யாருக்கு உறவு என்று எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

தொடர் இல்லாத சமயங்களில் சேனல்கள் மாற்றி மாற்றி சினிமாக்களையோ, சினிமாபாட்டுக்களையோ போடுகின்றன. தொலைபேசியில் பெப்சி உமா, மயில்சாமி போன்றவர்களை கூப்பிட்டு "என்ன சாப்டீங்க?, லை·ப் எப்படி இருக்கு?" - போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு 'எனக்குப் பிடித்தப் பாட்டு' என்று நேயர் விருப்பம் நிறைவேறுகிறது. இந்த தொலைபேசி பேச்சு பிராமண மொழி பேசும் உமாவால் பிரபலமாக இந்த விஷயத்தில் மட்டும் 'ஜாதி' பேதம் அறவே போய் விட்டது என்பது புரிகிறது.

லாஸ் ஏஞ்ஜலஸிலிருந்து கிளம்புவதற்கு முதல் நாள் தான் நம்மாள் நைட்சியாமளனின் 'சைன்ஸ்' திரைப்படம் பார்த்தேன். நான் சென்னை வருவதற்குள் அதுவும் இங்கே திரையரங்குகளுக்கு வந்துவிட்டது. தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் இனி திருட்டு விசிடியில் அமெரிக்கப் படங்களை பார்த்து காப்பி அடிக்க வேண்டியதில்லை. நேரே தியேட்டருக்கே போய் பார்க்கலாம்.

ஏ.ஆர். ரஹ்மான் 'ஏர்டெல்' விளம்பரத்தில் நடித்திருப்பதும், தமிழில் பூசை செய்ய தேவை யில்லை என்று சொல்லும் சங்கராச்சாரியாரைத் தமிழ்நாட்டை விட்டு வெளியே போகச் சொல்லும் திரு. கருணாநிதியின் பேச்சும், 'பாபா' படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக்க வேண்டும் என்று மிகவும் மெனக்கெடும் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர்களின் முயற்சியும் பல மெகாத் தொடர்களை விட சுவாரசியமாக இருக்கிறது என்பதுதான் உண்மை!!

© TamilOnline.com