மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
அன்பான வாசகர்களே,

வணக்கம். இந்த வருட பண்டிகை சீசன் ஆடிப் பெருக்கோடு ஆரம்பித்து, கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, தொடர்ந்து நவராத்திரி என உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்துக்கள் அனை வராலும் கொண்டாடப்படும் பண்டிகைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நவராத்திரியை பல்வேறு வகைகளில் கொண்டாடினாலும் அதன் சாரம் ஒன்று தான் - அன்னைக்கு நன்றி செலுத்துதல் - எல்லாம் வல்ல சக்தி - ஸ்ரீவித்யா - பால திரிபுரசுந்தரி - சாரதா - எந்த வடிவானாலும் எங்கும் நீக்கமற விளங்கும் அன்னையின் கருணையை நம்மால் கற்பனை செய்துபார்க்கமுடிகிறது.

கடந்த சில வருடங்களாக திருவனந்தபுரம் அரண்மனை நவராத்திரி மண்டபம் கச்சேரிக்கு அழைப்பு கிடைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய பாட்டினைப் பாட வேண்டும் - ஒன்பது நாட்களும் ஒன்பது வெவ்வேறு பாடல்கள் என்ற இந்த பாரம்பரியம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வருடம் சாவேரி ராகம் ஆதி தாளத்தில் அமைந்துள்ள "தேவி பாவனே" என்ற பாடலைப் பாடப் போகிறேன். மற்ற பாடல்களைப் போலவே இந்தப் பாடலும், அன்னையின் மேன்மை யை, அழகை, தாய்மையின் அடிப்படையை, உலகம் அனைத்துக்கும் அவள் பொதுவானவள் என்பதை, அன்னையின் தோற்றத்திற்கான காரணத்தை, அவரது தீரத்தை இந்தப் பாடல்கள் வெளிக் கொண்டு வருகின்றன.

"அன்னை"யை கடவுளாக அன்னையின் பல வடிவங்கள் மற்றும் ஆற்றல்கள் மூலம் பல பாடலாசிரியர்கள் விவரித்துள்ளனர். தீட்சிதர் - ஷ்யாமா சாஸ்திரி - மகா வைத்யநாத சிவன் - இன்னும் சொல்லப் போனால் அபிராமி பட்டரி லிருந்து துவங்கியது எனக் கூறலாம். நான் ஏன் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்? நாம் கடவுள்களின் பெருமைகளைப் பற்றி பாரம்பரியமாகப் புகழ்ந்து பாடி வருவது நமக்கெல்லாம் சிறந்த வழிகாட்டியாகவும், பெண்மையை நாம் போற்ற வேண்டும், மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தத் தான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நாம் இதனை அடைய இன்னமும் பயணம் செய்தாக வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. தாய்மையைப் போற்றி நாம் பல்வேறு பண்டிகைகளின் மூலம் நன்றி செலுத்தும் ஒரு ஒப்பற்ற தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமை உடையவர்களாக இருக்கிறோம்.

மீண்டும் சென்ற மாதம் விட்ட இடத்திற்குச் செல்கிறேன் - சென்னைக்குச் சென்று கொண்டிருக் கிறேன் - ஓ நல்ல மெட்ராஸ் - 1951ம் வருடம் நவம்பர் மாதம் அதிகாலை சென்னையில் காலடி எடுத்து வைத்தேன் - காலில் செருப்பு இல்லாமல் தான் ஏனெனில் படபடப்போடு கேரளாவில் ஏறும் போது ரெயிலிலிருந்து கீழே விழுந்துவிட்டது. என்னிடம் ஒரே ஒரு ஜோடி செருப்பு தான் இருந்தது. சுருதிப் பெட்டி, ஒரு மிருதங்கம், ஒரு ஜோடி ஆடைகள், இவற்றோடு பத்து 10 ரூபாய் நோட்டுகள். எனது தந்தையின் மூத்த சகோதரி புரசைவாக்கத்தில் வசித்து வந்தார். அவருக்கு எனது தந்தை மிகவும் பெருமையோடு நான் வருவது பற்றி எழுதியிருந்தார். ஆனால் அவரோ என்னை அவரது இல்லத்தில் தங்க அனுமதிக்க முடியாது என்று எனது தந்தைக்கு எழுதிய கடிதம் நான் சென்னைக்குச் சென்று சில நாட்கள் கழித்து தான் அவருக்குக் கிடைத்தது. நான் எழுதிய கடிதம் கிடைக்கவில்லையா என்ற கேள்வியோடு ஒருவரை வரவேற்றால் அவரது நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!

அந்த நாள் முதல் நான் நகர்புற மனநிலையை அறிந்து கொள்ள பாடுபட்டுவருகிறேன். உண்மை யைச் சொல்லவேண்டுமானால் இன்று வரை இந்தக் கல்வி எனக்குப் புரிபடவில்லை. ஒரு மாதம் தங்கி வேலை தேடிக்கொள்வதற்கு (நான் B.Com பட்டதாரி என்பதை நினைவு கூறவும்) ரூபாய் 75 தருகிறேன் என்று கூறியவுடன் முகமெல்லாம் மலர்ந்து என்னைக் கூட்டிச் சென்று வெண் பொங்கல், காபி கொடுத்து உபசரித்தனர். (கேரளாவிலிருந்து வந்த எனக்கு பொங்கல் ஒரு புதிரான உணவாக இருந்தது, இருப்பினும் நன்றாக இருந்தது - குறிப்பாக கெட்டிச் சட்னியோடு).

கிட்டத்தட்ட ஒரு வருடம் நான் மைலாப்பூர், திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன் தெருக்களில் சுற்றித் திரிந்து எனது தந்தைக்கு தெரிந்தவர்களைச் சந்தித்து அவர் கொடுத்த அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தேன். ஒன்றும் எடுபடவில்லை. இவ்வாறு திரிந்துகொண்டிருக்கையில் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் காலை 6.30க்கு 2 இட்லி, ஒரு வடை மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் உட்கொண்டு பின்னர் இரவு லாலா கடையில் ஒரு சப்பாத்தி, பம்பாய் சட்னி மற்றும் ஒரு டம்ளர் பால் அருந்தி உயிர் வாழ முடியும் என்பது தான். மெரினா கடற்கரை, வேப்பேரி பூங்கா அல்லது நேரு பூங்காவில் சாதகம் செய்வேன். சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கார்போரேஷன் பேண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்வேன். எந்துகோ / சார சார சமரே டோர் ஆலுன, ஸ்ரீ ராம பதமா - மாணிக்கமுதலியார் உரையிலிருந்து - இவரைப் பற்றி பின்னர் எழுதுகிறேன். மாலை 7 மணி வரை இந்தப் பூங்காக்களில் தினமும் தவறாமல் ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பேன். என்னைப் பொருத்தவரை இவை அனைத்தும் சந்தோஷ மானவை தான். அதே சமயம் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று கொஞ்சம் ஆதங்க மாகவும் இருக்கும். அதனால் எனக்குத் தெரிந்த இசைக் கலைஞர்களை சபாக்களில் சந்தித்து நானும் இசையில் நாட்டம் உள்ளவன் என்றும் ஒரு வளரத் துடிக்கும் கலைஞன் என்றும் கூறத் தொடங்கினேன். மூன்று மாதங்களுக்குள் ஜூபிடர் பிக்சர்ஸின் துணை கணக்காளனாக வேலை கிடைத்தது. இதன் மூலம் ஒப்பற்ற சிவாஜி, பாடும் கலைஞர்கள் பானுமதி, PA பெரியநாயகி, T.R. ராஜகுமாரி போன்றவர்களையும் இவற்றிற்கெல்லாம் மேலாக கலைஞர், C.R. சுப்பராமன், G. ராமநாதன் ஆகியோரைச் சந்திக்கும் பெரும் பேறு கிடைத்தது. லஸ் நாகேஸ்வரா ராவ் பூங்காவிற்கு பின்னால் அமைந்த மங்கள விலாஸ் அலுவலகங்களுக்கு இவர்கள் தினமும் வந்தாக வேண்டும்.

இந்த இரு இசை அமைப்பாளர்களும் என்னை அவர்களின் உதவியாளராகச் சேருமாறு கூறினார் கள். நான் எனது தந்தைக்கு மகிழ்ச்சியோடு கடிதம் எழுதினேன். அதற்குப் பதிலாக "அம்மா சீரியஸ். உடனடியாக வீட்டுக்கு வா" என்ற தந்தி கிடைத்தது. சினிமாவில் சேர்ந்தால் எனது நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் பங்கம் வந்துவிடும் என்ற அச்சம் மற்றும் அக்கரை தான் காரணம்.

AIR மெட்ராஸில் எனக்குத் தெரிந்தவர்களோடு தொடர்புகொண்டு வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்கம் நிகழ்ச்சிகளில் மீண்டும் பங்கு பெறத் தொடங் கினேன். கேரளா மற்றும் பெங்களூருக்கு குழுவின ரோடு சென்று கச்சேரிகளில் பங்கு பெற்றேன் - GNB, மணக்கால் ரங்கராஜன், T.K. ரங்காச்சார், M.A. கல்யாணராம் பாகவதர் மற்றும் எனது தந்தைக்குத் தெரிந்த ஒரு சில பிரபலங்களோடும். 1952ல் இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு எனது அத்தையின் வீட்டிலிருந்து வெளியேறி திருவல்லிக்கேணி 41, சிங்கராச்சாரி தெருவில் அமைந்த ஒரு லாட்ஜில் அடைக்கலம் புகுந்தேன்.

இந்த ஒரு சில மாதங்கள் (கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக) தான் எனது இசைப் பயணத்தின் மகிழ்ச்சியான காலகட்டம் என்று சொன்னால் ஆச்சரியப்பட்டுவிடுவீர்கள். கர்நாடக இசைக் கச்சேரியில் பங்கு பெறுவதற்கு நான் ஏற்கனவே அறிந்தவற்றோடு, பல நிகழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை அலசி ஆராய்ந்து கிரகித்துக் கொண்டு எனது ஆற்றலை செம்மை படுத்திக் கொண்டேன். நூற்றுக்கணக்கான கச்சேரிகள், தினமும் 2 அல்லது மூன்று, நூற்றுக்கணக்கான மணிநேர சாதகம் -றொரு சங்கீத ரசிக சாதகராக நான் இதுவரை அடைந்துள்ள அனைத்திற்கும் காரணம் 1951-60ம் ஆண்டுகளில் விளங்கிய இசையின் பொற்காலம் தான். நவராத்திரிக்கு எனது வாழ்த்துக்கள். தீபாவளியையும் ஆவலோடு எதிர் நோக்குவோமாக. ஆண் மற்றும் பெண் தெய்வங் களின் ஆசியோடு இந்த இரு விழாக்களின் போது ஏதேனும் ஆச்சரியங்களை வழங்குவோம் என்று நம்புவோமாக.

நன்றி

TVG

© TamilOnline.com