அட்லாண்டாவில் கேட்டவை
நமது எக்ஸ் ஆர்மி ஆபிஸரின் தந்தை மிகவும் கண்டிப்பானவராம். சிறு வயதில் இவர் பள்ளியில் படிக்கும்போது அடிக்கடி அவர் தந்தை இவரிடம் "இருப்பதை வைத்து திருப்தியாக இருக்கவேண்டும், அதிக ஆசைப் படக்கூடாது" என்று சொல்லுவாராம். ஆர்மி ஆபிஸரும் "தந்தை சொல் மிக்க மந்திர மில்லை" என அவர் கூறியதைப் பின்பற்றுவாராம். அவர் அப்பாவுக்குக் கொள்ளை சந்தோஷம், தன் மகன் தான் சொல்வதை மதிக்கிறான் என்று.

ஒரு முறை நமது எக்ஸ் ஆர்மி ஆபிஸர் ஸ்கூல் பரிட்சையில் கணக்கில் 100க்கு 27 மார்க் வாங்கி யுள்ளார். உடனே மனதைத் தேற்றிக்கொண்டு தந்தை சொன்ன மாதிரி "இருப்பதை வைத்து திருப்தி அடையவேண்டும்" என எண்ணி அந்த மார்க்கைப் பற்றி கவலை படாமல் வீட்டிற்கு வந்ததும் டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியே விளையாடப் போய் விட்டாராம். விளையாடி முடித்து வீட்டிற்கு வந்ததும் அவர் தந்தை ஸ்கூல் பரிட்சை மார்க்குகளைக் கேட்க பதட்டமே இல்லாமல் மற்ற மார்க்குகளைக் கூறி கணக்கில் 100க்கு 27 எனக் கூற அவர் தந்தை கோபமடைந்து "பளார்" என கன்னத்தில் அடித்து "ஏன் சரியாகப் படிக்கவில்லை?" எனக் கேட்க இவர் கூலாக "அப்பா நீங்கள் தானே இருப்பதை வைத்து திருப்தியாக இருக்கவேண்டும் எனக் கூறினீர்கள்" எனக் கேட்க "பளார்" மறுபடியும் விழுந்தது.

பெரியவர்கள் சொல்லிக்கொடுத்ததை பின்பற்றி னாலும் அடி விழுகிறதே என்று கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போய் ஆர்மியில் சேர்ந்தாராம் நமது எக்ஸ் ஆபிஸர். இது எப்படி இருக்கு?

******


ஒரு நாணயமான ஏழை விறகு வெட்டி பிழைப்புக் காக ஆற்றுப்படுகையில் உள்ள ஒரு மரத்தில் உள்ள பெரிய கிளையை வெட்டிக் கொண்டு இருந்தபோது கை தவறி அவனது இரும்பு கோடாலி ஆற்றில் விழுந்துவிட்டதாம். அவனுக்கு நீச்சல் தெரியாததால் அதை எடுக்க முடியாமல் தவித்து வேறு வழி இல்லாமல் ஆண்டவனிடம் முறையிட கருணையே உருவான ஆண்டவன் உடன் வந்து "என்ன பிரச்சனை" எனக் கேட்க இவன் கோடாலி ஆற்றில் விழுந்ததைக் கூற அவர் இவனிடம் சிறிது விளையாட எண்ணி நீருள் போய் ஒரு தங்கக் கோடாலியைக் கொண்டுவந்து "இந்தா உனது கோடாலி" எனக்க் கூற நாணயமான இவன் "ஐயா, இது எனது கோடாலி இல்லை" என்று சொல்ல இவன் உண்மை பேசுவதை மெச்சிக் கடவுள் மறுபடியும் தண்ணீருள் போய் ஒரு வைர வைடூர்யத்தில் செய்த கோடாலியை எடுத்து வந்து "இதுதானே உனது கோடாலி" எனக் கேட்க மறுபடியும் இவன் "இல்லை ஐயா, எனது கோடாலி இரும்பினால் ஆன சாதாரண கோடாலி" எனக் கூற, இவனது நேர்மையைக் கண்டு வியந்த கடவுள் மூன்றாவது முறையாக தண்ணீரில் மூழ்கி அவனது இரும்புக் கோடாலியை எடுத்துக் கொடுத்து விட்டு "பக்தா உன் நேர்மைக்குப் பரிசாக மற்ற இரண்டு விலை உயர்ந்த கோடாலிகளையும் நீயே வைத்துக்கொண்டு அதை விற்று வரும் பணத்தில் நேர்மையாக வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்" என்றுக் கூறி மறைந்துவிட்டார். நாணயத்திற்குக் கிடைத்த பரிசை வைத்து நமது ஏழை விறகுவெட்டி ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிட்டான்.

ஒரு பதினைந்து வருடம் பறந்துவிட்டது. இப்போது அவனுக்கு நல்ல பணம், மனைவி, குழந்தைகள் எனக் குடும்பமும் பெரிதாக இருந்த்தது. வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது, இருந்தபோதும் ஆண்டவன் தனக்குச் செய்த உதவியை மறக்காமல் அதை மனைவி, மக்களிடம் அடிக்கடிச் சொல்லிக் கொண்டே இருப்பான். அவனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஒரே ஆச்சரியம் அவர்கள் விறகுவெட்டிக்குப் பெரும் பணம் கிடைத்த அந்த ஆற்றுப் படுகையைப் பார்க்க விரும்பினர். இவனும் ஒரு நாள் அவர்கள் எல்லோரையும் அங்குக் கூட்டிச் செல்ல எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். மனைவி அதிக ஆவலில் அந்த பழைய கோடாலி விழுந்த இடத்தை எட்டிப் பார்க்கக் கால் தவறி தண்ணீரில் விழுந்துவிட இன்னமும் நீச்சல் தெரியாத விறகு வெட்டியும் சிறிய குழந்தைகளும் தவிக்க மனைவி தண்ணீரில் தவித்துக்கொண்டிருந்தாள். மறுபடியும் இவன் ஆண்டவனிடம் முறையிட, கடவுள் ஓடோடி வந்து என்ன என்று கேட்க இவன் பதற்றமாக மனைவி தண்ணீரில் மூழ்கிவிட்டதைச் சொல்லி எப்படியாவது அவளைக் காப்பாற்றச் சொல்ல இப்போதும் அவனிடம் விளையாட நினைத்த ஆண்டவன் தண் ணீரில் உள்ளே சென்று வெளியே வரும்போது சொர்கலோக அழகி ஊர்வசியைக் கொண்டுவந்து "இதோ உன் மனைவி" எனக் கூற விறகுவெட்டி ஒரு நிமிடம் ஊர்வசியைப் பார்த்து "ஆமாம் இதுதான் என் மனைவி, நன்றி" எனக் கூற கடவுளுக்கு ஷாக் அடித்தது.

பணம் வந்ததும் இவன் நாணயம், நேர்மை எல்லாம் போய்விட்டதே என வருத்தப்பட்ட ஆண்டவன் இவனைப் பார்த்து "ஏன் இப்படிப் பொய் சொல் கிறாயே?" எனக் கேட்க அதற்கு நமது விறகுவெட்டி "ஆண்டவனே மன்னித்துக்கொள்ளுங்கள். நான் இல்லை என்று சொன்னால் நீங்கள் உடனே மறு படியும் தண்ணீருள் சென்று ரம்பாவைக் கொண்டு வருவீர்கள் நான் இவளும் எல்லை என்று சொல்வேன் அப்புறம் தாங்கள் மூன்றாவது முறை தண்ணீருக்குள் சென்று என் உண்மையான மனைவியைக் கொண்டு வருவீர்கள். பிறகு எனது நேர்மையை மெச்சி இந்த மூவருமே உனக்குத்தான் எனப் பெருந்தன்மையாகச் சொல்வீர்கள். நீங்கள் சொன்னால் என்னால் மறுக்க முடியாது நானும் சரி என்று சொல்லிவிடுவேன். ஒரு மனைவியை வைத்துக்கொண்டே நான் படும் அவஸ்தையைச் சொல்லி மாளாது, மூன்று பேர்கள் இருந்தால் நான் என்ன ஆவேன்?" என்று கேட்க ஆண்டவன் வாயடைத்துப் போனாராம்.

******


"வாங்க பேசலாம் வாங்க" என்ற பிரபலமான விசுவின் நிகழ்ச்சியில் கேட்டு மிகவும் ரசித்தது.

அன்று பேசுபவர்களுக்குக் கொடுத்த தலைப்பு "ஒருவன் அல்லது ஒருத்தி மிக சந்தோஷமாக இருப்பது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா?" என்பது. அதில் பங்கு பெற்ற திரு P.C. கணேசன், சந்தோஷம் திருமணத்திற்கு முன்புதான் என்ற அணியின் தலைவர். அவரை ஆரம்பத்தில் அவரது முதல் சுற்றுக் கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று விசு கேட்டவுடன் அவர் கூறியது:

"ஐயா, ஒருவன் ஒரு நேரத்த்தில் ஏதோ சந்தர்ப்பம் காரணமாகக் காட்டு வழிப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அப்போது பின்னால் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க ஒரு மதம் பிடித்த யானை அவனைத் துரத்துவது புரிந்து உயிரைக் காப்பாற் றிக்கொள்ள தலை தெரிக்க ஓட ஆரம்பித்தான். அவனது போதாத காலம், கால் தவறி ஒரு பாழும் கிணற்றில் விழ, அதிர்ஷ்டவசமாக ஆலம் விழுது போல தொங்கிய ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான் உயிரைக் கையில் பிடித்தபடி. எதேச்சையாகக் கீழே பார்த்தால் ஒரு முதலை ஆ... என்று வாயைப் பிளந்துக் கொண்டு இவன் கீழே விழக் காத்துக்கொண்டிருந்தது. மேலே யானை கீழே முதலை இப்போது அடுத்த அதிர்ச்சி இவன் பிடித்துத் தொங்கியது ஆலம் விழுது அல்ல ஒரு மலைப் பாம்பு என்று தெரிய வர அவன் உடல் நடுங்க, கை உதற ஆரம்பித்தது. அந்த அதிர்ச்சியில் மலைப் பாம்பு ஆட, அருகே இருந்த தேன்கூடு கலைந்து அந்த தேனீக்கள் கோபமடைந்து இவனைக் கொட்ட ஆரம்பித்தன. அந்த நேரத்தில் இந்த சலசலப்பால் தேன் கூடு உடைந்து தேன் சொட்ட ஆரம்பித்து சொட்டு சொட்டாக இவன் மூக்கின் மேல் விழ இவன் நாக்கால் நக்க தேனின் அருமை புரிய அந்த இக்கட்டான நிலைமையிலும் ஒரு துளி சுகம் கிடைத்தது. அது போலத்
தான் திருமணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை. சந்தோஷமாகவே திருமணத்திற்கு முன் தான் வாழ்வில் சந்தோஷம்" என்று அவரது பேச்சை முடித்தார். அரங்கில் கைத்தட்டலும் விசிலும் பறந்து அமைதி அடைய இரண்டு நிமிடத்திற்கு மேல் ஆகியது.

© TamilOnline.com