பல பில்லியன் கணக்கான மிருகங்கள் இன்று மனிதனின் உணவுத் தேவைக்காகப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. சுதந்திரமாய் வளர வேண்டிய மிருகங்கள், தங்கள் சுதந்திரத்தை இழந்து பண்ணைகளில் படும் சித்திரவதைகள் அளவிடற் கரியன. இதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உண்டாக்குவதற்காகவே அக்டோபர் இரண்டாம் தேதி 'பண்ணை விலங்குகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது.
ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவைகளே பெரும்பாலும் பண்ணைகளில் சிறை வைக்கப் படுகின்றன. விலங்குகள் பிறந்ததிலிருந்து அதன் தாயிடமிருந்து பிரித்து வைக்கப்படுவதனாலும், சுத்தமான காற்று மற்றும் சுகாதார வசதிகள் அவற்றுக்கு மறுக்கப்படுவதனாலும் அவை விரைவில் நோய்வாய்ப்படுகின்றன. இந் நோய்கள் பண்ணையில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் விரைவில் தொற்றிக் கொள்ளும். அதோடு அம் மிருங்களின் இறைச்சியை உண்பவர்களுக்கும் இந் நோய் பரவும் சாத்தியப் பாடுகள் ஏராளம்.
இது தவிர பண்ணை விலங்குகளுக்கு மன அழுத்தமும் அதிகம். பண்ணைகளில் ஒரு சில விலங்குகள் தனிமையில் விடப்படுகின்றன. பல விலங்குகளோ மிகக் குறைந்த இடத்தில் கும்பலாய் அடைக்கப்படுகின்றன. இவ்வாறு பண்ணைகளில் அடைக்கப்படும் கோழிகளிடத்தே தனது இன விலங்கையே சாப்பிடும் பழக்கம் வந்து விட்டதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கோழிப் பண்ணைகளில் ஆன்டிபாக்டீரியாக்கள் உபயோகப்படுத்தபடுவது, இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டு வருவதாயும் அமையும்.
அடிமைகளாக மாறிய கோழிகள்
முட்டைகள் இப்பொழுது பெரும்பாலும் நிறுவனங் களாலே தயாரிக்கப் படுகின்றன. இவ்விதமாய் முட்டைகளை உருவாக்குவதற்கு பெரும் பண்ணை களில் பல்லாயிரக்கணக்கான கோழிகள் சுகாதரமற்ற கூண்டுகளில் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப் படுகின்றன. பூச்சிக் கொல்லிகள் கூண்டுகளின் அருகே தூவப் படுவதோடு, கோழிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளிலும் கலந்து தரப் படுகின்றன. உலகின் எந்த நாட்டு சட்டமும் இதனை குற்றம் என்றே சொல்லும்.
நிறுவனங்களின் ஆட்சி கோழிப் பண்ணைகளில் தொடங்குவதற்கு முன், கோழிகள் விவசாயிகளிடம் வளர்ந்தன. அன்றைக்கு திறந்த வெளிகளில் திரிந்துக் கொண்டிருந்த கோழிகள் இன்று தனது சிறகுகளை விரிக்க கூட இடமில்லாது அடைந்து கிடக்கின்றன. அதனுடைய வாழ்க்கை முறையையும், அடுத்தடுதது வரும் அதன் தலைமுறைகள் காணப் போகும் வாழ்க்கையையும் நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.
யாரும் அறியாத பசுவதை
பொவின் சொமடொபின் என்றழைக்கப்படும் Bovine Growth Hormone (BGH) பசுக்களில் அதிகப் பாலைக் கறப்பதற்காக உபயோகப்படுத்தப் படுகின்றன. இந்த ஹார்மோன் ஊசிகள் 20 சதவீதம் வரை பாலை அதிகம் சுரக்க வைக்கின்றன. இப் பாலை அருந்துவதனால் மனிதர்களுக்குப் புற்று நோய் ஏற்படலாம்.
இந்த ஊசிகளினால் பசுக்கள் அதிக உணவுகளை உட்கொள்வதோடு, உணவு செரிமானப் பிரச்சனை களைச் சந்திக்கின்றன. அதோடு, இந்த ஹார்மோன் ஊசிகள் பசுக்களின் உள்ளுறுப்புகளைக் கடுமையாகப் பாதிப்பதோடு, இருதயத்திற்கு இரத்த வரவையும் அதிகரிக்கச் செய்கின்றன. பசுவதைகளைப் பற்றி இந்து மதத்தினர் எத்தனையோ குரல்களை எழுப்புகிறார்கள். ஆனால் தினந்தினம் நாம் குடிக்கும் பாலுக்காகப் பசுக்களின் உடலினுள் செலுத்தப்படும் விஷத்தைப் பற்றி யாரும் பேசுவதாய்க் காணோம்.
பன்றிகள் அறிவுள்ளவை
பண்ணைகளில் உள்ள பன்றிகள் பெரும்பாலும் ஜன்னலில்லாத இரும்புக் கட்டடங்களிலிலும் கூண்டுகளிலும் அடைக்கப்படுகின்றன. பலரும் பன்றியைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் கருத்துகளுக்கு மாறாக, பன்றிகள் அறிவுள்ளவை யாகவும், அதிக உணர்வுகளை உடையவையாகவும், சுத்தத்தை விரும்பக் கூடியவையாகவும் உள்ளன. பன்றிகள் கூட்டமாய் வாழும் இயல்பைக் கொண்டவை. புல்வெளிகளில் மேய்வதிலும் சுற்றுப்புறத்தோடு உறவு கொள்வதிலும் ஆர்வமுடைய பன்றிகளைச் சிறைகளில் அடைத்து வைப்பது அந்த இனத்திற்குச் செய்யப்படும் துரோகமே எனலாம். துரோகம், அநியாயம், அநீதி என்று எந்த வார்த்தை யைப் பயன்படுத்தி எழுதினாலும் பண்ணைகளில் மிருங்களுக்குச் செய்யப்படும் கொடூரங்களுக்கு விடிவு வருமென்று தோன்றவில்லை. சமூகத்தில் விலங்குப் பண்ணைகளின் பங்கு இன்று மிகவும் அவசியமானதாக மாறிவிட்ட சூழ்நிலையில், அரசாங் கங்கள் அவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. விலங்குப் பண்ணைகளோ லாபத் தையே முதற் குறிக்கோளாய் வைத்து இயங்குகின்றன. விலங்குகளின் நலனுக்காகப் போராடப் பலரும், பல அமைப்புகளும் இருந்தாலும், பண்ணை விலங்குகளைப் பற்றிய அக்கறை கொண்டவர்கள் வெகு சிலரே. அழிந்து போகும் உயிரினங்களுக்கும், காட ்டு விலங்குகளுக்கும் குரல் கொடுப்பதைக் காட்டிலும் மனிதனின் உணவுத் தேவைக்காகச் சித்திரவதைகளை அனுபவிக்கும் பண்ணை விலங்குகளுக்காகக் குரல் கொடுப்பது மிகவும் முக்கியமானது.
இல்லாவிட்டால் ஜார்ஜ் ஒர்வெலின் 'பண்ணை விலங்குகள்' நாவலில் வரும் பண்ணை விலங்குகளைப் போல அவை மனிதனுக்கு எதிராய்ப் புரட்சி செய்யக் கிளம்பி விடலாம்.
பண்ணை விலங்குகள் குறித்த இணையத்தளம் http://www.farmusa.org
சாய்ராம் |