நான் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, 1967 என்று நினைக்கிறேன், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு சமஸ்கிருத பட்டப்படிப்பு மாணவரிடம் "இந்தியாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச்சிறந்த பண்டிதர் (greatest living scholar) யார்?" என்று கேட்டது நினைவி லிருக்கிறது.
ஒரு நொடி கூட தாமதிக்காமல் "ஏமெநியோ" என்று பதில் கிடைத்தது. இது 35 வருடங்களுக்கும் முன்பு நடந்து. இன்றும், 96 வயதில் பேராசிரியர் ஏமென்யோ ஒரு productive scholar ஆக விளங்குகிறார். சமஸ்கிருத மொழியைக் கற்றிருந் தாலும், ஏமென்யோவின் முதன்மை துறை மொழியியல் தான். அவர் தனது major field workஐ நீலகிரியில் தோடா மொழியைப் பயின்றது நம் அனைவரின் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இதுவே திராவிட மொழிகளைப் படிப்பதிலும் ஆராய்வதிலும் அவர் பெரும்பான்மை யான நேரத்தைப் போக்கியதின் தொடக்கமாக விளங்கியது. திராவிட மொழிகளின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வார்த்தைகளின் தொகுப்பான Dravidan Etymological Dictionary என்ற நூலின் இரண்டு ஆசிரியர்களுள் இவரும் ஒருவர் என்பதை பெரும்பான்மையானவர்கள் அறிவர். ஆனால் திராவிட மற்றும் இந்தோ-ஆர்யன் தலைப்புகளில் அவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டி ருப்பது பெரும்பாலானோருக்குத் தெரிய வாய்ப் பில்லை.
மொழியில் இருந்த அவரது புலமை, மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதில் அவருக்கு இருந்த உள்ளறிவு, மற்றும் திராவிட, இந்தோ-ஆர்யன் மொழி பற்றி அவரது ஆழ்ந்த படிப்பு தொடர்ந்து என்றென்றும் என்னை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 90 வயதிற்கு மேல் ஆன போதிலும் அவர் கெளசல்யா ஹார்ட் என்பவரோடு சேர்ந்து அனைத்து திராவிட மொழிகளின் பிறப்பு மொழியான proto dravidian மொழியில் onomatopoeic (எழுப்பும் குரல் காரணமாக வழங்கப்பட்ட பெயர்) வார்த்தைகள் வழக்கத்தில் இருந்தன என்பதை தெரிவிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். இது யாருமே எதிர்பாராத ஒன்று. 96 வயதிலும் ஓடியாடிக் கொண்டும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டும் உற்சாகமாக இருக்கிறார்.
கடந்த மாதம் அவரோடு ஒரு நாள் பகல் உணவு உட்கொள்ள நேர்ந்தது. அவரது மனம் தெளிவாகவும், கற்பனா சக்தி குன்றாமலும், அறிவுக்கூர்மையுடனும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்பு முதன் முறையாகச் சந்தித்த போது இருந்ததுபோலவே இருப்பதைக் கண்டேன். இன்றளவும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட மொழிப் பண்டிதர் மட்டுமல்ல, தெற்காசிய பண்டிதராக விளங்குகிறார் அவர் என்பது எனது கருத்து. அவரது படைப்புகளும் அவர் ஆற்றிய தொண்டுகளும் மிகவும் பிரமாண்ட மானவை.
1965ல், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் நான் மூன்று வருடங்களாக சமஸ்கிருதம் பயின்று வந்தேன். மற்றொரு தொன்மையான இந்திய மொழியான தமிழைப் பற்றி படித்திருக்கிறேன். விஸ்கான்சினில் உள்ள மேடிசனின் ஒரு துவக்க தமிழ்ப் பாடம் கற்றுக் கொடுப்பதால் நான், கோடை காலத்தை அங்கே கழிக்க முடிவு செய்தேன். நான் சந்தித்த அருமை யான மனிதர்களுள் ஒருவர் 6 மாணவர்கள் கொண்ட வகுப்பினை நடத்துவதைக் கண்டேன்.
உயரம் கம்மியானவர் அவர். கை கால்களை அசைத்துக் கொண்டு பல உணர்ச்சிகளைப் பிரதிபலித்து, எதிர்பாராத கருத்துக்களை எதிர்பாராத நேரங்களில் உரைத்து, அமெரிக்க மற்றும் ஆங்கில இலக்கியத்திலிருந்து (Shakespeare புலவர் அவர்) தமிழ் மற்றும் கன்னட இலக்கியம் வரை, இந்திய மொழியியல் முதல் பரம்பரைக் கதைகள் வரை எதுவாக இருந்தாலும் சளைக்காமல் விவாதத்தில் ஈடுபடும் ஆற்றல் கொண்டவர். இத்தகைய வெவ்வேறு துறைகளில் புலமை பெற்று விளங்கியவரை நான் அது வரை சந்தித்ததில்லை.
அவரது பெயர் A.K. ராமானுஜன். காலப்போக்கில் நானும் ஒரு பண்டிதன் ஆனேன். அதன் பின் அவரை பற்றி நன்கு அறிந்துகொண்டேன். தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்று வேறு யாரைக்காட்டிலும் உண்மையானது என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் அமெரிக்க மாணவர்களிடையே தமிழ் இலக்கியம் பற்றிப் பேசுவதைப் பல முறைக் கண்டேன். அந்த மாணவர்களும் இந்த மொழியைக் கற்க ஆர்வம் காட்டியதையும் கண்டிருக்கிறேன். தமிழிலிருந்து அவர் மொழி பெயர்த்த முதல் புத்தகமான "The Interior Landscape" என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு அப்படியே உரைந்து போய்விட்டேன். நவீன ஆங்கிலத்தில் இந்திய இலக்கியத்தைப் படிக்க மேற்கொள்ளப்பட்ட உருப்படியான முதல் முயற்சி இது. மேற்கத்திய நாடுகளில் நவீன தெற்காசிய இலக்கியங்கள் புத்தகமாக வெளியிடுவதின் துவக்கமாக இது அமைந்தது என்றால் அது மிகையாகாது.
எட்டு வருடங்களுக்கு முன்பு அவர் இறக்கும் வரை, ராமானுஜன் புதுப்புது ஆராய்ச்சிகளை மேற் கொண்டும், கட்டுரைகளை இயற்றிய (இக் கட்டுரைகள் தற்போது இந்தத் துறையில் classics ஆக மாறிவிட்டன) வண்ணம் இருந்தார். ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் கவிதைகளும் இயற்றியுள்ளார். தனது சுயசரிதையைக் கன்னடத்தில் இயற்றி யுள்ளார். தனது இறுதி நாட்களில் தனது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மீது அதீத பற்றுக் கொண்டு திருவாய்மொழியை அழகுற மொழி பெயர்த்து "Hymns from the drowning" என்ற தலைப்பில் ஆழ்வார் என்ற வார்தையின் அர்த்ததோடு விளையாடியுள்ளார். சமஸ்கிருதம் தனது தந்தையின் மொழி, தமிழ் தனது தாயின் மொழி, கன்னடம் தான் வளர்ந்த மைசூர் தெருக்களின் மொழி என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். தென் ஆசியாவிற்கு வெளியே வசிக்கும் பண்டிதர்களுள் இவர் ஒருவர் தான் சங்க இலக்கியம் என்ற ஒப்பற்ற புதையலின் அருமையை அறிந்திருந்தார். மொழியியல், நாடோடிக் கதைகள், கவிதை ஆகியவற்றில் இவருக்கிருந்த் பாண்டித்யமும் புலமையும், இவரது சாதனைகளும் நம் அனைவரையும் இவருக்கு என்றென்றும் கடன்பட்டவர்களாக மாற்றிவிட்டன. சங்க இலக்கியத்தையும் அதனை அனைவரும் அறியவேண்டும் என்று இவர் மேற்கொண்ட முயற்சிகளும் கூட.
ஜார்ஜ் ஹார்ட் |