அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை. பகல் உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் போல் இருந்தது. ஒரு வாரமாகவே ஆபீஸில் வேலை அதிகம். வருடாந்திர கணக்கு முடிவு. கம்ப்யூட்டரின் முன்னே மணிக்கணக்காக உட் கார்ந்து இருந்தது கண்ணில் எப்போதும் பூச்சி பறக்கின்ற உணர்வு. கூடவே முதுகு வலியும். மனைவி வேறு பிறந்த வீடு போயிருந்தாள்.
இவ்வளவு வேலைகளுக்கு இடையே ஆஸ்பித்திரி போகவேண்டியது ஆயிற்று. என்னுடைய நெருங்கிய நண்பன் மூர்த்தியின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. தலைவலி என்று ஆரம்பித்து கடைசியில் கேன்சர் என்று சொல்லிவிட்டார்கள். மூர்த்தி அம்மாவை அடையாறு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். திருமணமாகாத அவனுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக நெருங்கிய உறவினர் யாரும் இல்லை. நான் ஒருவாரமாக மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பி இரவு 10 மணிவரை ஆஸ்பத்திரியில் அவனுடன் இருந்து வந்தேன். இன்று ''நான் பார்த்துக் கொள்கிறேன். நீ ஓய்வு எடுத்துக்கொள்'' என்று சொல்லி விட்டான் மூர்த்தி.
தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம் ஓடிக்கொண்டிருந்தது. கைதத் தட்டலையும் மீறி உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார் விசு. வாசலில் டொக் என்று கதவு தட்டும் ஓசை. பால்கார ஆயா, வீடு சுத்தம் செய்யும் பத்மா எல்லோரும் வந்து போயாகிவிட்டது. யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு இருக்கும்போது மறுபடியும் மெல்லியதாக ஒரு 'டொக்' . எனக்கு எப்போதும் சேல்ஸ்மேன்களை கண்டால் பிடிக்காது. ஞாயிற்றுக்கிழமைகளில் எனது தூக்கத்தை கெடுக்கும் முதல் சத்துரு இந்த சோப் விற்கும் சேல்ஸ்மேனும், சேல்ஸ்வுமனும்தான். ஒரு சோப் வாங்கினால் ஷாம்பூ இலவசம் என்று எதையாவது நமது தலையில் கட்டிவிடுவார்கள். சோப்பிற்கு ஷாம்பூ தருவதற்கு பதிலாக, ஷாம்பூ விற்கு wig இலவசம் என்று ஏதாவது புது யுக்தியை கையாளலாம் என்று நான் நினைப்பதுண்டு.
சேல்ஸ்மென் இல்லாவிட்டால் கோயிலுக்காக வசூல் செய்யும் நபர்கள் ஏதாவது கோயில். அதுவும் ஆடி மாதம் வந்துவிட்டால் கூழ் ஊத்துவது அன்னதானம், இத்தியாதி, இத்தியாதி. கையில் ஒரு ரசீது புத்தகம்., மஞ்சள் தாளில் அச்சிடப்பட்டிருக்கும். கருத்த உருவம், முறுக்கு மீசை, நெற்றி புருவங்களுக்கு இடையே ஒரு இன்ச் நீள குங்குமப் பொட்டு. முதலில் கையில் நம்மிடம் ரசீது புத்தகத்தை கொடுத்துவிடுவார்கள். புரட்டிப் பார்த்தால் நூறு ரூபாய்க்கு குறைந்து யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் எல்லோரும் எப்போது இவ்வளவு தருமவானாக ஆனார்கள் என்று எனக்கு சந்தேகம். போனால் போகிறது என்று பத்து ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களை அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
கதவை திறக்கலாம் என்று யோசிப்பதற்கும் மறுபடியும் ஒரு டொக். மெதுவாக எழுந்திருந்து, வந்திருக்கும் விருந்தினர் யார் என்று பார்த்தேன். கதவின் அருகில் நின்று மறுபடியும் தட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஒரு வாலிபர். வயது 25 இருக்கும். வேட்டியும் ஒரு மக்கிப்போன ஸ்லாக் சட்டையும் அணிந்திருந்தார். காலில் செருப்பு கூட இல்லை. என்னை பார்த்ததும் கை கூப்பி நின்றார். ''யாரப்பா நீ, என்ன வேண்டும்'' என்றேன். ''மன்னிக்க வேண்டும் சார். கடவுள் எங்களை ரொம்பவும் சோதனை செய்கிறார். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. எல்லா டாக்டரிடம் காண்பித்தாகி விட்டது. கடைசியாக கேன்ஸர் ஆக இருக்குமோ என்று சந்தேகம். நிறைய டெஸ்ட் பண்ண வேண்டும் என்கிறார் டாக்டர். எனக்கு அப்பா கிடையாது. இங்கு ரங்கநாதன் தெருவில் ஒரு கடையில் எடுபிடியாக இருந்தேன். அம்மாவுக்கு அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி இருந்ததால் கடைக்கு லீவு போட வேண்டிய நிர்பந்தம். அதன் பலன் அந்த வேலையும் போய்விட்டது. அதனால் பரவாயில்லை. மூட்டை தூக்கியாவது பிழைத்துக் கொள்ளுவேன். இப்போதைக்கு என்னுடைய கவலையெல்லாம் அம்மாவின் உடம்புதான்'' என்றான். அதை சொல்லும் போது அவன் கண்களில் நீர் பனித்தது.
''இதப் பாருப்பா உன்னை எனக்கு முன்பின் தெரியாது. நான் உனக்கு எப்படி உதவ முடியும்'' என்றேன். ''நீங்கள் யோசிப்பதைப் பார்த்தால், நீங்கள் என்னை சந்தேகிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னை நம்பாவிட்டால், கேன்ஸர் ஆஸ்பத்திரியில் நுழைந்த உடன் இடது பக்கம் உள்ள அறையில் இருக்கும் டாக்டர் நடசேனிடம் தொலைபேசியில் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம்'' என்றான். நான் டாக்டர் நடேசனின் போர்டு பார்த்திருக்கிறேன். ''சரி சரி அதெல்லாம் வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் சொல்'' என்றேன்.
''ஒன்றுமில்லை சார் பெரியமனசு பண்ணி ஆஸ்பத்திரி செலவுக்கு ஏதாவது கொடுத்தீங்கன்னா உங்களுக்க புண்ணியம் உண்டு" என்றான்.
எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவனுடைய பணிவு, பேச்சு எல்லாம் என்னை என்னவோ செய்தன.
''ஆண்டவன் ஏழைகளைத்தான் ரொம்பவும் சோதனை செய்கிறான். நீ எதற்கும் கவலைப் படாதே, என்னால் முடிந்தது 100 ரூபாய் வைத்துக் கொள்'' என்றேன்.
அவன் பணிவாக பையிலிருந்து ஒரு லிஸ்டை எடுத்து "உங்கள் பெயர் என்ன சார்" என்றான்.
''பரவாயில்லை அப்பா காப்பி ஏதாவது சாப்பிடு கிறாயா? மிகவும் களைப்பாக இருக்கிறாயே" என்றேன்.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார்" என்று கண்களில் நீருடன் குனிந்து என் கால்களை தொட வந்தான். மெதுவாக அவனை தடுத்து ஒரு வழியாக அவனை அனுப்பி வைத்தேன். கதவை தாளிட்டு உள்ளே வந்தேன்.
தொலைகாட்சியில் அரட்டை அரங்கம் முடிந்து ஏதோ தொடர் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நான் அந்த பையனுக்கு இன்னும் கொஞ்சம் அதிக பணம் கொடுத்து இருக்க வேண்டுமோ என்று தோன்றியது. மூர்த்திக்கு உறவுகள் அதிகம் இல்லாவிட்டாலும் பண பலம் அதிகம். அப்படி இருந்தும் அவன் அம்மாவின் வைத்தியத்துக்கு திணறுகிறான். 100ம், 200ம் தருமம் வாங்கி என்ன வைத்தியம் செய்துவிட முடியும்? சிந்தனையில் மூழ்கி தூங்கிவிட்டேன். அரைத்தூக்கம் , குறைத்தூக்கம் எழுந்தால் மணி 4 ஆகி இருந்தது.
சோர்வும், அசதியும் என்னை இன்னும் விட்ட பாடில்லை. மாறுதலுக்கு வெளியில் செல்ல நினைத்தேன். ஒரு ஆட்டோ பிடித்து சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அன்று ஆங்கிலப்படம் ஸ்பெஷல் ஷோ போட்டு இருந்தார்கள். நல்ல கூட்டம். மூன்று பேர் சேர்ந்து ஒரு பாங்கை கொள்ளை அடிக்க திட்டம் போடுவதாக கதை அமைந்திருந்தது. அதற்கான வழிகளைப் பற்றி நமக்கு விரிவாக சொல்லுகிறது கதை. அரைத் தூக்த்தில் இருந்த என்னை இடைவேளை மணி எழுப்பியது.
காப்பி சாப்பிட வெளியே வந்தேன். ஸ்டாலின் அருகில் இரண்டு பேர் ஏதோ உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். அருகில் சென்ற போது ஒரு குரல் கேட்ட குரலாக இருந்தது. இருவரில் ஒருவன் இன்று மதியம் என் வீட்டிற்கு வந்தவன்.
பளிச்சென்று உடை அணிந்து கல்லூரி மாணவன் போல் இருந்தான். மற்றவன் அவனை ''என்னடா தியாகு, நேற்று ரொம்புவம் நொந்து போய் இருந்தே இன்று படா ஸ்டைலாக படத்துக்கு வந்திருக்கியே, என்ன ஏதாவது பிபியா" என்றான். பிபி என்பது பிக் பாக்கெட்டுக்கு சென்னை போலீஸ் வைத்துள்ள செல்லப் பெயர். IPS, IAS மாதிரி. ஏனென்றால் இவர்கள் IPS, IAS ஐவிட அதிகம் சம்பாதிக் கிறார்களாம். சிலருக்கு டாக்சிகூட ஓடுவதாக பத்திரிகையில் பார்த்தேன். எங்கள் வீட்டிற்கு வந்த தியாகு அட்டகாசமாக சிரித்தான்.
''பிபி எல்லாம் உன் மாதிரி பசங்க பண்றது. அப்புறம் மாட்டிக்கிட்டு தர்மஅடி வாங்கறது. நானெல்லாம் தொழில் மாறிவிட்டேன், பணம் காய்க்கும் தொழில்" என்றான். "அதென்னப்பா புதுத் தொழில், எனக்கும் கொஞ்சம் சொல்லு" என்றான் மற்றவன்.
அதற்கு தியாகு, ''அதற்கெல்லாம் திறமை வேண் டும், இப்போதெல்லாம் நான் பல ஆஸ்பத்திரிகளை ரவுண்டு அடிக்கிறேன். யார், யாரைப் பார்க்க வருகிறார்கள், எந்த வார்டு, என்ன உடம்பு, எந்த டாக்டர் எல்லாம் குறிச்சிக்கிறேன். மெதுவாக போய் அவர்கள் அட்ரஸ் தெரிஞ்சுக்கிறேன். அதற்கு அடுத்த நாள் அவர்களைப் பார்த்து, எங்க அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியா இல்லை, ரொம்ப சீரியஸ்னு நடிக்கிறேன். ஆஸ்பத்திரிக்கு வந்து போவதால் ஏற்கனவே அவங்க மனசு இளகி போயிருக்கு இல்லையா அதுஎன் நடிப்பை பார்த்து ரொம்பவும் உருகிவிடும்.
இப்ப பாரு, போன வாரம் முழுக்க ஐயா, அடையாறு கேன்சர் ஆஸ்பத்திரி ரவுண்டு. வழக்கமாக வரும் ஒருவரது விலாசத்தை பிடித்தேன். இன்னிக்கு அவங்க வீட்டுல ஆஜர். என் கதையை கேட்டு அந்த ஆள் ஒரேயாக ஆடிப் போயிட்டாரு. எனக்கு 100 ரூபாய் கொடுத்து காபி சாப்டுட்டு போறியா என்றுகூட கேட்டார்'' என்றான். கேட்டுக்கொண்டு இருந்த எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நல்ல வேளை அவர்கள் என்னை பார்க்கவில்லை. மறுபடியும் அவர்கள் பேச்சு தொடர்ந்தது.
''நீ எப்படியாடா இதெல்லாம் கத்துக்கிட்ட. அது சரி அது யாருடா அந்த ஏமாளி என்றான் முதலில் பேசியவன். எனக்கு உடனே "நான்தான்" என்று உரக்க சொல்ல வேண்டும் போல் இருந்தது. காபி சாப்பிடக்கூட பிடிக்கவில்லை. அதற்குள் இடைவேளை முடிந்து மணி அடிக்கவும். அவர்கள் தொடர்ந்து படம் பார்க்க உள்ளே சென்றார்கள். படம் பார்க்க மனம் இல்லாமல் வெளியே வந்து பஸ் ஸ்டாப்பில் இருந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன்.
டி.எம். ராஜகோபாலன் |