கவிஞர் மீரா
மீ.ராஜேந்திரன் என்ற கவிஞர் மீரா மறைவு அளித்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடிய வில்லை.

தமிழகத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒரு வராக, நல்ல தமிழ் நூல்களின் பதிப்பாளராக, இலக்கியப் பத்திரிகையாளராக மீரா பரவலாகச் சிறப்புப் பெற்றதைத் தொடர்ந்து அவரைப் பற்றி என் மனதில் உருவாகி இருக்கும் பிம்பம் என் தலைமுறை (எழுபதுகளின் இறுதியில் எழுதவந்த) படைப்பாளிகள் பலருக்கும் தென்படுவது தான். ஆனால், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் என் ஆசிரிய பிரான் என்று தான் எப்போதும் முதலில் நினைவு வருவார் அவர்.

கறுத்து மெலிந்து உயர்ந்த உருவம். முகத்தில் மாறாத புன்னகை. பளபள என்று துடைத்து வைத்த சைக்கிளில் புகுமுக வகுப்பு மாணவர்களாகிய எங்களுடைய சைக்கிள்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ்ப் பேராசிரியர் மீரா கடந்து போவார். கூடவே இன்னும் சில சைக்கிள்கள். ஆங்கிலப் பேராசிரியர் நா.தர்மராஜன், வேதியல் பேராசிரியர் ருத்ர துளசிதாஸ், கணிதவியல் பேராசிரியர் பாஸ்கரன், அறிவியல் பேராசிரியர் ஆர்.துரைசாமி... அது ஒரு நட்சத்திரக் கூட்டம். நா.தர்மராஜன் என்ற என்.டி, கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த முக்கியப் படைப்பாளி. ருஷ்ய மொழி இலக்கியங்களை மொழி பெயர்த்தவர். மாஸ்கோவிலும் பெர்லினிலும் வசித்து தமிழ்ப் புத்திலக்கியத்தை அங்கே யெல்லாம் பரிச்சயம் செய்து, அங்கேயிருந்து நல்ல இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வந்தவர். துளசிதாஸ் என்ற ஆர்.டி, தமிழில் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். தெலுங்கிலி ருந்தும் மலையாளத்திலிருந்தும் முக்கியமான தற்கால இலக்கியப் படைப்புக்களை மொழி பெயர்த்தவர். சி.நாராயணரெட்டியின் தெலுங்குக் கவிதைகளை 'அனல் காற்று' என்ற தொகுதி யாகவும், தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதை களை 'மரக்குதிரை' என்ற தொகுதியாகவும் அற்புதமாக மொழிபெயர்த்து வெளியிட்ட இந்த வேதியல் பேராசிரியர், மலையாளத்திலிருந்து முகுந்தனின் 'மய்யழிப்புழயுடெ தீரங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்ததற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். நாவலை மலையாளத்தில் வாசித்துவிட்டுப் பின் மொழிபெயர்ப்பையும் படிக்க வாய்ப்புக் கிடைத்த எனக்கு ஒரு இடத்திலும் நெருடாத மொழியாக்கம் துளசிதாஸ் என்ற ஆர்.டி என்ற 'இளம்பாரதி' யுடையது. பாஸ்கரனும், துரைசாமியும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள். நல்ல இலக்கியத்தைத் தேடித்தேடிப் படித்து, மற்றவர் களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடை கிறவர்கள். (இங்கே ராயர் காப்பி கிளப்பில் செய்வதற்கு எனக்கு வழிகாட்டி என் ஆசிரியப் பெருமக்கள் தாம்). இப்படி பல துறை சார்ந்த ஒரு பேராசிரியர் குழு தமிழ்ப் புத்திலக்கியத்தில் ஆர்வத்துடன் இயங்கிய கல்லூரி தமிழகத்திலேயே சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியாகத் தான் இருக்க முடியும். அங்கே படிக்க, இவர்க ளுடன் பரிச்சயப்பட வாய்ப்புக் கிடைத்திருக்கா விட்டால் நான் எழுத வந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

மீரா அந்தக் காலத்திலேயே புரட்சியாளர். பழந்தமிழ் இலக்கியங்களில் அவருக்கு இருந்த ரசனையும், புலமையும், புது இலக்கியத்தை ரசிக்க, அனுபவிக்க, அதை விட முக்கியமாகப் படைக்க அவருக்குத் தடையாக இருக்காமல் அனுசரணை யாகவே இருந்தது. மரபு தெரிந்து எழுதுவது எழுத்துக்கு வலிமை என்பதற்கு மீரா நல்ல எடுத்துக்காட்டு. திராவிடப் பாரம்பரியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மீரா, அவருடைய நண்பர்கள் குழுவின் உந்துதலாலும் உற்சாகத்தாலும் பொது வுடமை இயக்க ஈடுபாடு கொள்ளத் தொடங் கியதும், நா.தர்மராஜன் போன்ற பொதுவுடமை யாளர்கள் முன் நின்று நடாத்திய மதுரைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் துவங்கப் பட்டதும், மீராவின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பான 'கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்' வெளியானதும் அடுத்தடுத்து அல்லது ஒன்றோடு ஒன்று இசைந்து நிகழ்ந்தவை - தற்செயலானதல்ல. பிறகு இந்தக் குழுவின் உற்சாகத்தில் மீரா பதிப்பாளர் ஆனார். நண்பர் நா.கண்ணன் குறிப்பிட்டபடி, தெற்குத் தமிழ் நாட்டில் இருக்கும் சிவகங்கையிலிருந்து, தர மான, அழகுற அச்சும் அமைப்பும் கொண்ட நல்ல படைப்புகள் நூல்களாக வெளியிடப்படும் என்று நிரூபித்த 'அன்னம் பதிப்பகம்' அவரால் எழுபது களின் இறுதியில் தொடங்கப்பட்ட போதுதான் நான் எழுத வந்தேன். மீரா வெளியிட்ட முதல் படைப்பு, கவிஞர் அபியின் 'மௌனத்தின் நாவுகள்'. அப்துல் ரகுமானுக்கு ஈடான அகவயமான படைப்பு நோக்குக் கொண்ட உருவகக் கவிஞரான அபி இன்னும் சரியாக அறிமுகமாகாமல் இருப்பது தமிழின் துரதிர்ஷ்டம். துளசிதாசின் மரக்குதிரை யை மீரா தான் வெளியிட்டார். கி.ராஜ நாராயணனின் 'பிஞ்சுகள்' என்ற சிறுவர் நாவலையும் அவர்தான் வெளியிட்டார். (கண்ணன் எழுதியதில் ஒரு சிறு தவறு - கி.ராவை அறிமுகம் செய்தது மீரா இல்லை. அவர் வெகுமுன்னாலேயே வாசகர் வட்டம் வெளியிட்ட 'கோபல்ல கிராமம்' மூலமும், 'கிடை' மூலமும் தமிழகத்தில் பரவலாக அறிமுகமானவர்). 'பிஞ்சுகள்' நாவலுக்கு ஒரு மதிப்புரை (அறிமுக உரை) எழுதும்படி என் ஆசிரிய பிரான் மீரா என்னைப் பணித்தார். 'தாமரை'யில் வெளியான அந்தக் கட்டுரை தான் நான் எழுதிய முதல் இலக்கியப் படைப்பு. 'அன்னம் விடுதூது' என்ற பெயரில் அவர் பிறகு தொடங்கிய இலக்கியப் பத்திரிகையில் நான் எழுதிய சிறுகதை தான் சம்பிரதாயமான கதையாடலை விடுத்துச் சோதனை முயற்சியில் நான் இறங்கிய முதல் படைப்பு. என் ஆசிரிய பிரான் எனக்குக் கொடுத்த ஊக்கமும் தூண்டுதலும் தான் இதற்கெல்லாம் காரணம். நான் பிஞ்சுகளைக் கடந்து, கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்களைக் கடந்து நெடுந் தூரம் இலக்கியப் பயணத்தை ஒரு எழுத்தாளனா கவும் வாசகனாகவும் மேற்கொண்டு விட்டேன். என்றாலும் திரும்பிப் பார்க்கும்போது எனக்கு என் சிவகங்கை இலக்கியத்திற்கான முதல் புண்ணியத் தலமாக என் மனதில் நிறைகிறது. அங்கே மீரா இல்லை இப்போது. ஒரு நாள் போவேன். அவர் நினைவுகளை என் மற்ற ஆசிரியப் பெரு மக்களோடு அசைபோடுவேன்.

அன்புடன்,
மத்தளராயன் என்ற
இரா.முருகன்

© TamilOnline.com