நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
போதேந்திர ஸ்வாமிகளின் நாம சங்கீர்த்தன மகிமை அகில உலகமும் பரவிற்று. சேது யாத்திரை முடிந்து திருவிடைமருதூர் வந்தவர் அங்கே ஸ்ரீ£தர ஐயாவாளைச் சந்தித்தார். "என்னுடைய தீர்த்த யாத்திரையின் பலனை இன்றுதான் பெற்றேன்" என்று கூறிய ஸ்வாமிகளைப் பார்த்து, ஐயாவாள் அவர்கள் "என்னுடைய திருவடியில் நான் வணங்கும். ஸ்ரீபரமேச்வரனாகவே உங்களைக் காண்கின்றேன்" என்றார். இருவரும் அன்பில் இணைந்தனர்.

பாத யாத்திரை: ஸ்வாமிகளும் ஐயாவாளும் பாத யாத்திரை மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்று பொதுவான மடத்திலோ கோயிலிலோ பக்தர்கள் இல்லங்களிலோ தங்குவர். காலையில் நாம கீர்த்தன மகிமையை உபதேசிப்பது; மாலையில் ஆலய தரிசனம் செய்வது இரவில் பாகவத உபன்யாசம் செய்வது என்று வழக்கமாய்க் கொண்டனர்.

ஊமை பேசிய அதிசயம்: இருவரும் யாத்திரை செல்லும் வழியில் பெரம்பூர் என்றொரு கிராமத்தை அடைந்தனர். அந்த ஊர் அந்தணர் ஒருவர் அவர்களைத்தன் இல்லத்தில் தங்குமாறு வேண்டிக் கொண்டார். ஸ்வாமிகள் அதற்கிசைந்து அவருக்கு நாம சங்கீர்த்தன மகிமையை எடுத்துக் கூறி அங்கேயே உணவருந்த இசைந்தார். அந்த அந்தணருக்கு ஒரே மகன் பிறவி ஊமை. இந்த உலகில் சித்தாந்த கூற்றுப்படி கரையேற இயலாத சீவன் ஒன்று உண்டென்றால் அது ஊமைதான்; இப்படிப் பட்ட சீவனைக் கரையேற்றுவதற்கு உபாயந் தெரிய வில்லையே என்று வருந்தியவராய் நொந்த உள்ளத்தோடு உணவருந்திவிட்டு வெளியே வந்தார். எல்லோரும் அவரை வணங்குவதற்கு அவரைப் பின் தொடர்ந்து வெளியே வந்தனர். பொதுவாக விருந்தாளி சாப்பிட்ட பிறகே வீட்டிலுள்ளவர்கள் சாப்பிடுவது வழக்கம். அந்த ஊமைச் சிறுவன் பசி தாங்காமல் அவசரமாக உள்ளே ஓடிச் சென்று ஸ்வாமிகள் இலையில் பாதிக்குமேல் உண்ணாமல் விட்டு வைத்திருந்ததை எடுத்து உண்டு விட்டான்.

சதாசர்வகாலமும் பகவன் நாமாவை உச்சரிக்கும் ஸ்வாமிகளின் உ?டத்தை உண்ட மகிமையால் சிறுவன் ராம ராம என்று வாய் திறந்து ஓலமிட்டான். சுற்றியிருந்தவர்களெல்லாரும் ஊமை பேசுவது கேட்டு மெய்சிலிர்த்துப் போனார்கள். உடனே அவ்வூரில் ஒரு பஜனை மடம் கட்டி நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார்கள். ஸ்வாமிகள் தம்முடைய பாதுகைகளை அங்கே இருத்தி அந்த சிறுவனையே அதற்கு அர்ச்சகனாக்கினார். இன்றும் அந்த கிராமத்தில் பஜனை மடம், பாதுகை, நாம சங்கீர்த்தன ஒலி எல்லாம் இருந்துகொண்டிருக்கின்றன.

பூவனூர் பிரமராஷஸ்: பூவனூர் என்னும் ஊரின் மத்தியில் ஒரு தடாகத்தின் ஓரத்தில் அரசமரம் ஒன்றிருக்கிறது. அதனடியில் ஒரு பிரமராக்ஷஸ் தங்கியிருந்து கொண்டு ஊர் மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. இதைக் கேள்வியுற்ற ஸ்வாமிகள் ஊர் மக்களை அழைத்து அரச மரத்தின்கீழ் உட்கார்த்தி 10 நாட்கள் தொடர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்வித்தார். இதைக் கேட்டு பிரமராக்ஷஸ் பைசாச சாபம் நீங்கி அவ்விடத்தை விட்டே போய்விட்டது. அதே இடத்தில் இராமருக்கு ஒரு கோயிலை அமைத்து சீதா சமேத ஸ்ரீராம இலஷ்மண ஆஞ்சனேயரைப் பிரதிஸ்டை செய்து ஆராதனையும் நாம சங்கீர்த்தனமும் நடைபெறச் செய்தார். பூவனூர் அரசமரத்தடி இராமர் கோயில் இன்று இதற்கு சாட்சி.

ஐயாவாள் மறைவு: தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு இருவரும் திருவிடைமருதூர் திரும்பினர். ஐயாவாள் திருவிசலூருக்கும் ஸ்வாமிகள் முன்னரே தம்முடைய இருப்பிடமாகத் தேர்ந்தெடுத் திருந்த கோவிந்தபுரத்திற்கும் வந்து சேர்ந்தனர். வழக்கம் போல் ஒரு பிரதோஷ நாளில் ஐயாவாள் மஹாலிங்கப் பெருமானை நோக்கி கர்ப்பகிரகத்திற் குள் விரைந்தார். அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்துவதற்குள் அவர் பெருமானுக்குள் ஐக்கிய மாகிவிட்டார். ஒரு ஜோதி அன்பர்கள் கண்களுக்குத் தெரிந்தது. இவ்வாறு ஐயாவாள் பூதவுடல் நீத்தார்.

ஸ்வாமிகள் சமாதி: ஐயாவாள் மறைவு குறித்துக் கேள்வியுற்ற ஸ்வாமிகள் அன்றுமுதல் பிஷை ஏந்து வதற்குத்தவிர வெளியே வருவதில்லை; யாருடனும் பேசுவதுமில்லை; நாம உபதேசமும் நின்றது. தனிமையிலேயே இருந்து வந்தார். மிகவும் அரிதாக காவேரிக் கரைக்கு வருவார்.

ஒரு நாள் அவ்வாறு வந்தார். கோடை காலமென்பதால் ஜலம் வற்றிய காவிரியில் வண்டியில் மணலேற்றிச் செல்பவர்கள் வெட்டியிருந்த குழிகளில் ஒன்றில் ஸ்வாமிகள் குதித்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து குழியை மூடிவிடுமாறும் மறு நாள் வந்து பார்க்கும்படியும் அதுவரை இது பற்றி யாரிடமும் கூறவேண்டா மென்றும் சொன்னார். இவ்வாறு

குழந்தைகளோடு இவர் விளையாடுவதுண்டு என்பதால் அவர்களும் குழியை மூடிவிட்டுச் சென்று விட்டனர். மறுநாள் மடத்தைச் சேர்ந்தவர்களும் ஊர்மக்களும் ஸ்வாமிகளைக் காணாமல் தவித்தபோது சிறுவர்கள் மூலமாக விஷயம் அறிந்து மணலைத் தோண்ட ஆரம்பித்தனர். உடனே ஓர் அசரீரி வாக்கு ஒலித்தது." யாம் இங்கேயே சித்த சரீரத்துடன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருப்போம். யாரும் இந்த இடத்தை சேதப்படுத்தாமல் இங்கு பிருந்தா வனம் அமைத்து ஆராதிக்கவும்" என்று ஒலித்தது. அதேபோல் துளசி மாடம் அமைத்து மஹாபிஷேகம் செய்து நாம சங்கீர்த்தனமும் செய்து வருகிறார்கள். கி.பி.1692ல் புரட்டாசி மாத பவுர்ணமி அன்று இந்த அதிசயம் நிகழ்ந்தது.

தெய்வங்களுக்கு பிறந்தநாளைத்தான் கொண்டா டுவது வழக்கம். அது ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படும். ஆதி சங்கரர் சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படுவதால் அவருக்கும் சங்கர ஜெயந்திதான் கொண்டாடப் படுகிறது. ஆனால் மற்ற மடாதிபதிகளுக்கு காஞ்சியில் ஸ்ரீமடத்திலேயே ஆராதனை என்றுதான் கொண்டாடப்படும். போதேந்திர ஸ்வாமிகளுக்கு மட்டும் கோவிந் தபுரத்திலே ஆராதனை புரட்டாசி பவுர்ணமி தொடங்கி மஹாளய அமாவாசை வரை 15 நாட்கள் விமரிசையாக பாகவதோத்தமர்களால் நாம சங்கீர்த்தனத்துடன் கொண்டாடப்படுகிறது.

மிக மிகச் சிறப்பான செய்தி ஒன்று; கோவிந்த புரத்திற்கு வரும் அன்பர்கள் அனைவருக்கும் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி ஜாதி மத வேறுபாடின்றி பாயசத்தோடு வாழையிலையில் வஞ்சனையின்றி வயிறார பிற்பகல் உணவு ஆண்டு முழுவதும் அளித்துவருகின்றார்கள் இந்த மடத்தைச் சேர்ந்தவர்கள். காவிரிக்கரை செய்திருக்கும் புண்ணியமிது!

பின் குறிப்பு: நாம சங்கீர்த்தன மகிமை உலகமெல்லாம் பரவியிருக்கும் உண்மைக்குச் சான்றாக தென்றல் பத்திரிகையின் ஜூலை மாத இதழில் பாகீரதி சேஷப்பன் எழுதியுள்ள "வழி" என்ற சிறுகதை அமெரிக்காவில் நடந்த பஜனைப் பாடல் ஒலி பற்றிக் குறிப்பிட்டிருந்ததைக் குறிப்பிடலாம். அருமையான சிறுகதை.

டாக்டர். அலர்மேலு ரிஷி

© TamilOnline.com