சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில் துர்க்கை வீரத்தை அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி கல்விக் கடவுளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.
பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை 'தேவி பாகவதம்' விரிவாகப் பேசுகிறது.
புராணங்களிலேயே 'தேவி பாகவதம்' ஈடு இணை யற்ற ஒன்றாகப் போற்றப்படுகிறது. விரதங்கள், அனுஷ்டானங்கள் ஆகியவற்றால் கூட பெற முடியாத உன்னத பலன்களைத் தேவி பாகவதத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் பெற முடியும் என்கின்றனர் முக்காலம் உணர்ந்த முனிவர்கள்.
தீர்த்த யாத்திரை, ஸ்தல யாத்திரைகளால் அடையும் அரும் பயனையும், தானம், தவம் மூலம் பெறும் அரிய பலன்களையும் கூட தேவி பாகவதத்தைக் கேட்பதன் மூலம் பெற முடியும் என்பது வேத வியாசரின் கருத்து.
பரீஷித் மகராசனின் மகன் ஜனமேஜயன ராஜனின் கலக்கத்தைப் போக்க ஸ்ரீவேத வியாசர் 'தேவி பாகவதத்தை' போதித்ததாகப் புராணங்கள் பேசுகின்றன.
அத்தனை தெய்வங்களுமே, அந்தத் தேவியின் ஒப்பற்ற மாயையினால்தான் திகழ்கிறார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள் அவளே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே.
பிரபஞ்சத்தில் பிறவி எடுத்த நாம் அனைவருமே அநித்யம். ஆனால் ஜெகதாம்பிகை ஒருவளே நித்திய யுவதி. அவளைத் தூய்மையான உள்ளத்தோடு தியானித்து, துதி செய்தால் அருட் கடாட்சத்தை அள்ளி வழங்குவாள்.
நாளெல்லாம் அம்பிகையை வணங்கினாலும் ராசிகள் 12-ல் மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும் அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும்.
புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியையும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியையும் வணங்க வேண்டும்.
முதல் மூன்று நாள்கள் துர்க்கா சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் முதலான வகைகளாலும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமி அஷ்டோத்ரம், லட்சுமி சகஸ்ரநாமம் முதலான வகைகளாலும், கடைசி மூன்று நாள்களில் சரஸ்வதி அஷ்டோத்ரம், சரஸ்வதி சகஸ்ரநாமம் ஆகியவையினாலும் அம்பாளை வழி படலாம்.
புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே சிற்றின்ப விஷயங்களைத் தவிர்த்து, உணவை அளவோடு நிறுத்தி, விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டைத் துவங்க வேண்டும்.
ஆண்டில் சித்திரை மாதத்தில் வசந்த ராத்திரி என்றும், ஆடியில் ஆஷாட நவராத்திரி என்றும், ஐப்பசியில் சாரத நவராத்திரி என்றும் சில கொண்டாட்டங்கள் உண்டு என்றாலும், புரட்டாசி யில் வரும் சுக்லபட்சப் பிரதமையில் தொடங்கும் நவராத்திரியே அம்பாளைத் துதித்துப் போற்ற ஏற்ற காலமாகும்.
புரட்டாசி மாதத்தில்தான் நவக்கிரகங்களில் ஒரு நாயகமாக உள்ள சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறான். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். இவனே வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத் திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
நவராத்திரியில் கொலு வைப்பது வழக்கம். அமாவாசை அன்றே படிக்கட்டுகள் வைத்து பொம்மை களை வைக்க வேண்டும் என்பதும், விஜய தசமியன்று ஒன்றிரண்டு பொம்மைகளைப் படுக்க வைத்துவிட்டுப் பின்னர் கலைக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம். தேவியரை வணங்குவதால் எதையும் பெறலாம். ராமர் கூட ராவணன் மீது போர் தொடுக்கும் முன் நவராத் திரி விரதமிருந்து சக்தியிடம் ஆசி பெற்றதாகக் கூறுவதுண்டு. அவதார புருஷர்களே அன்னையை வணங்கினார்கள் என்றால் நாமும் வணங்கி நலம் பெறுவோமே.
ரா.சுந்தரமூர்த்தி |