முழுமுதல் தமிழ்க் கணினி
உலகெங்கிலும் உள்ள மக்கள் எல்லோரும் அவர்களுடைய மொழியிலேயே கணினியைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்தியர்களுக்கு மாத்திரம் கணினியை இயக்க ஆங்கிலம் தெரிந் திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த விசித்திரமான நிலை பிறநாட்டவர்களுக்கு விளங்கிக் கொள்ளமுடியாததாக இருக்கிறது. 70 சதவீதத் திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் அவர்கள் நம்முடைய கணினிகள் ஏன் ஆங்கிலத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன என வியப்படைகிறார்கள். உலகில் உள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியர் கள் ஒரு மாபெரும் சக்தி என்பதை மறுக்கமுடியாத அதே நேரத்தில் அவர்கள் தமது மக்களின் தேவை களை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் என்பதும் வேதனையான உண்மை. இந்நிலையில் மின்பிளவி னால் (மின் தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள்) பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது. ஒருபுறம கணினித் தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பெருக அதனால் பலனடைவோர்களின் எண்ணிக் கையும் அவர்கள் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து வருகின்றது. மறுபுறம் இவற்றைப்பற்றிக் கேள்விப் படாதவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. இது ஒட்டுமொத்த சமுக வளர்ச்சிக்கு உகந்தது இல்லை.

இந்நிலைக்கு மாற்றம் கிடையாதா எனப் பலரும் கைவிரித்துவரும் நிலையில் முதன் முறையாக இந்திய மொழிகளிலேயே தமிழில் ஒரு மாற்று உருவாகி யிருக்கிறது. விரைவில் வெளிவர இருக்கின்ற மாண்ட்ரேக் லினக்ஸ் 9.0 மூலம் கணினியைப் பற்றிய அதிக அடிப்படை அறிவு இல்லாதவர்களாலும் கூட தமிழிலேயே தங்கள் கணினியை வடிவமைத்துக் கொண்டு இயக்கவும் இணையத்தைப் பயன்படுத்தவும் முடியும். முதன்முறையாக, கணியை இயக்க ஆங்கிலம் தெரியவேண்டும் எனும் விசித்திரமான முன்கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மாத்திரமே தெரிந்தவர் களாலும் இனி கணினியை இயக்க முடியும்.

என்னவெல்லாம் சாத்தியம்?

மாண்ட்ரேக் என்பது பொதியாகக் கிடைக்கும் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணைமுலச் செயலிகளின் தொகுப்பு. இதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது பலமொழிகளில் பயணர்களுக்கான இடைமுகத்தைத் தெரிவு செய்ய முடியும். நீங்கள் செய்ய வேண்டியது கணினியில் தமிழ் உங்களுக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது மாத்திரமே. இதைக் கணினியில் நிறுவுதல் மிகவும் எளிது. உங்கள் வன்கலன் (hardware) மற்றும் வலையமைப்பு களை(network) அதுவே அடையாளம் கண்டு வடிவமைத்துத் தரும். முடிவில் உங்கள் கணினியை அடுத்த முறை துவக்கும் பொழுது எல்லா செயலி களும் (இன்னும் தமிழில் மாற்றியமைக்கப் படாத ஒருசிலவற்றைத் தவிர) உங்களுக்குத் தமிழிலேயே கிடைக்கும். அழகிய தமிழில் எளிதாக உங்களால் கணினியை இயக்கமுடியும்.

ஒரு சராசரி பயணரின் இல்லத் தேவைகள் மற்றும் ஒரு சிறுஅலுவலின் அன்றாடத் தேவைகளை முற்றிலும் தமிழ் இடைமுகத்தின் மூலம் நிறைவேற்றமுடியும். உதாரணமாக:

  • உங்கள் கணினியை வடிவமைத்தல் மற்றும் இணையத்துடன் இணைத்தல்
  • கோப்புகளைத் (files) தமிழிலும் ஆங்கிலத்திலும் (பிறமொழிகளிலும்கூட) உருவாக்கல், திருத்தல்
  • கோப்புகள், அடைவுகள்(Directories) மற்றும் வட்டுகளை (disks) நிர்வகித்தல்
  • மின்னஞ்சல் அனுப்பல், இணையத்தை உலாவல் மற்றும் அரட்டையடித்தல்
  • பாடல்களைக் கேட்பது, படங்களைப் பார்ப்பது
  • சிறு அலுவலின் தேவைகளைச் செய்தல் (ஆவணங் களை வடிவமைத்தல் (Word Processing), விரிதாள் கணக்குகள் (Spreadsheets), ...)
  • உங்கள் வங்கிக் கணக்குகள், அலுவலின் கணக்கு களை நிர்வகித்தல்
  • பனிகளைக் கால வரையறைப்படுத்தல் (Task Scheduling), கணினியின் பயனர்களை நிர்வ கித்தல் (User Management)
  • மேசைத்தளத்தின் (Desktop) அமைப்பை மாற்றி யமைத்தல், நிர்வகித்தல்


இன்னும் சக்திவாய்ந்த பிற செயல்களையும் செய்ய முடியும். உதாரணமாக, தமிழ் இடைமுகத்துடன் ஒரு கோப்புக்கட்டத்தல் தளத்தை (FTP site) வடிவமைத்து நிர்வகிக்க முடியும். இன்னும் பல பயனாக்கங்கள் தமிழில் தற்பொழுது தயாராகி வருகின்றன; உதாரண மாக புகைப்படத் திருத்தம் (Photo Editor) மற்றும் பொறியியல் வரைபடங்கள்(CAD) போன்றவற்றுக் கான செயலிகள் தயாராகி வருகின்றன.

கணினி ஏன் தமிழில் இருக்கவேண்டும்?

ஏன் இருக்கக்கூடாது? தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் கணினி யும் இணையமும் முற்றிலும் அவரவர்கள் மொழியி லேயே பயன்படுத்தப்படுகின்றன (உதாரணமாக, ஜப்பானியர்களும் ஜெர்மானியர்களும்). இந்தியாவில் துரதிருஷ்டவசமாக, (ஆங்கில)மொழிப் புலமையை தொழில்நுட்பச் சாதனைகளுடனும், சான்றான்மை யுடனும் இணைத்துப்பார்க்கும் நிலைதான் இருக் கிறது. மற்றெல்லாவற்றையும் போலவும் கணினியும் மனிதன் அவனுடையப் பிரயோகத்திற்காகக் கண்டுபிடித்த ஒருகருவிதான். கருவிகள் எல்லாம் அவனுக்கு ஏற்றவாறு இருக்க அவற்றைக் கூர்மைப் படுத்துவது மனிதனின் இயல்பு. கருவி மனிதனுக்குப் பயன்பட்டாக வேண்டும்; அதில்லாமல் கருவியின் குறைபாடுகளுக்கு ஏற்றவகையில் மனிதன் அவனை மாற்றியமைத்துக் கொள்வது அவனது தோல்வியைக் குறிக்கும். அந்தவகையில் நம்முடைய மொழிகளில் கணினிகளும் பிற கருவிகளும் இல்லாதது பிற நாட்டவர்கள் நம்திறனைக் குறைத்து மதிப்பிடவே உதவும். நமக்கு ஏற்றவகையில் கருவிகளை மாற்றியமைக்கத் தெரியாதவர்களாக நாம் இருப்பது காலத்திற்கும் பிறரது உதவியை எதிர்பார்த்து, அடிமைப்பட்டுக் கிடக்கச் செய்யும். தொழில் நுட்பத்தின் பலன்கள் கடைசி மனிதனைச் சென்ற டைய அவனுக்கு ஏற்றவகையில்
அது எளிதானதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். பெரும்பாலான இந்தியர்கள் ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியாத நிலையில் கணினியை இயக்க ஆங்கிலம் தெரிந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பது கேலிக்கிட மானது.

தமிழில் கணினி கிடைப்பது நமக்கேயான பல மென்கலன்களை(Software) நாம் எளிதாக வடிவமைத்துக்கொள்ள உதவும். உதாரணமாக, தமிழ்நாடு விற்பனை வரிக்கானப் பத்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் அமைத்தல். இது நம் வணிகர்களுக்குப் கணினி மற்றும் இணையம் மூலமான பிற வணிகச் சாத்தியக்கூறுகளை அளிக்கும். தமிழ் மொழிவழி கணினி பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய சாதாரணத் தேவை களைப் பூர்த்தி செய்யும் கருவிகளை வடிக்கும் ஆர்வத்தை அது வளர்க்கும். செல்பேசி, தொலை காட்சி போன்ற தற்கால மின்கருவிகள் சிறுகணினி களைப் பொதித்துச் சக்திவாய்ந்தவைகளாக உருவாக்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றையும் நாம் நமக் கேற்றபடி வடிவமைத்துக்கொள்ள தமிழ் கணினிகள் களம் அமைத்துக் கொடுக்கும். நாம் இப்பொழு தாவது இதைச் செய்யாவிட்டால் வருங்காலத்தின் சக்திவாய்ந்த கண்டுபிடிப்புகளை எல்லாம் தவற விடுவோம்.

லினக்ஸ் என்பது என்ன?

சுருக்கமாகச் சொல்லப்போனால் லினக்ஸ் ஒரு இயக்குதளம் (Operating System) (நீங்கள் அறிந்திருக்கக்கூடிய மைக்ரோஸாப்ட் விண்டோஸ் 98, 2000, XP போலத்தான்). இயக்குதளம் என்பது நாம் அளிக்கும் கட்டளைகளை கணினியின் இதயமான நுண்செயலி (Microprocessor) புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்த்துத் தரும் ஒரு அமைப்பு. லினக்ஸ் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள் ஒன்றுசேர்த்து வடித்த ஒரு இயக்குதளம். தற்சமயம் பிரபலமாக இருக்கும் மைக்ரோஸாப்ட் போன்ற இயக்குதளங்கள் தங்கள் ஆணைமூலங்களைப் (Source Code) பிறருக்குத் தெரியப்படுத்துவதில்லை. இது புத்திசாலிகள்கூடத் தங்களுக்கு ஏற்றவகையில் கணினியை மாற்றியமைத் துக்கொள்ள முடியாமல் செய்கிறது. நாம் வாங்கும் ஒவ்வொரு சாதனத்தையும் நமக்கு ஏற்ற வகையில் நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, உங்கள் வீட்டுச் சுவருக்குச் சுண்ணாம்பு அடிக்க வீட்டை விற்ற நிறுவனத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. உங்கள் மிக்ஸியில் சட்னி அரைக்கத் தேவைப்படும் பொழுது வேறு இணைப்பு வாங்கிப் பொறுத்திக் கொள்ள முடியும். ஆனால் பன்னாட்டு கணினி நிறுவனங்கள் காப்புரிமை (Copyright) மற்றும் கண்டுபிடிப்பு உரிமைகளைச் (Patents) சூழ்ச்சியான முறையில் கையாண்டு கணினிச் செயலிகளை மாற்றமுடியாமல் செய்து வருகின்றன. இதைச் சமூக விரோதச் செயல் எனக் கண்டுகொண்ட சில புத்திசாலியான பொறுப்புள்ள கணிப் பொறியாளர்கள் தளையறு மென்கலன் நிறுவனம் (Free Software Foundation) எனும் ஒரு அமைப்பைத் துவங்கினார்கள். பின்னர் இதில் உலகெங்கிலும் இருந்து இணைந்த ஆயிரக்காணக் கானவர்களால் உருவாக்கப்பட்டது தான் லினக்ஸ் இயக்குதளம் மற்றும் தொடர்பான திறந்த ஆணை முலச் செயலிகள் (Open Source Software). இத்தகையச் செயலிகள் 'அளிப்புரிமை' (Copyleft) அனுமதியுடன் (வணிக நிறுவனங்கள் காப்புரிமைக் (Copyright) கட்டுப்பாடுகளுடன் செயலிகளை விற்கின்றன) வெளியிடும் நிரல்களின் ஆணை மூலங்களை எல்லோராலும் பார்க்கமுடியும், மாற்றிய மைத்து மறுவிநியோகம் செய்யமுடியும். இதில் இருக்கும் ஒரே கட்டுப்பாடு மாற்றியமைக்கப்படும் ஆணைகளும் திறந்த வடிவிலேயே வெளியிடப்பட வேண்டும் என்பதுதான்.

இத்தகைய மென்கலன்கள் வளரவளர அவற்றில் சொத்தையானவை விடுபட்டு, தேர்ச்சியானவை முன்னுக்கு வந்தன. தற்சமயம் இது வணிகரீதியான மென்கலன்களுக்கு ஒரு மாற்றாக உருவாகியுள்ளது. ஆணைகள் திறந்தவடிவில் கிடைப்பதால் அவற்றின் குறைகள் முற்றிலும் நீக்கப்பட்டு அவை பாதுகாப் பானவைகளாக மாறியுள்ளன. தற்சமயம் வணிகப் பங்கில் (Market Share) வளர்ச்சியடைந்துவரும் ஒரே இயக்குதளம் லினக்ஸ்தான் என ஆய்வுகள் காட்டு கின்றன.

மாண்ட்ரேக் லினக்ஸ் என்பது என்ன?

பலநிறுவனங்கள் தளையறு மென்கலன்களைத் தொகுத்து, சரிபார்த்து பொதியாக்கி குறைந்த விலையில் விநியோகிக்கின்றன. இலவசமாகக் கிடைப்பதை விலைவைத்து விற்பது என்பது விசித்திர மாகத் தோன்றினாலும், பொதியாக்கி வசதியான முறையில் தருவதாலும் அவற்றின் தரத்திற்கு உத்தரவாதம் அளித்துத் தேவையான சேவைகளை வழங்குவதாலும் பல நிறுவனங்கள் சிறந்த முறையில் வளர்ந்து வருகின்றன. இவற்றுள் மாண்ட்ரேக்கும் ஒன்று. இவர்கள் இதுநாள் வரை தொழில்நுட்பம் தெரிந்தவர்களிடம் மாத்திரமே பிரபலமாக இருந்து வந்த லினக்ஸை சராசரி மக்களுக்கான வகையில் மாற்றிவருகிறார்கள். அதற்காக எளிதில் நிறுவுவதற் கும், நிர்வகிப்பதற்கும் சக்திவாய்ந்த கருவிகளை அவர்கள் உருவாக்கிவருகிறார்கள். எல்லாவிதமான சோதனைகளையும் செய்துபார்க்க ஆர்வமாக இருக்கும் மாண்ட்ரேக் கணிப்பொறியாளர்கள், தமிழ் லினக்ஸ் ஆர்வலர்களின் நெருக்கமான ஒத்துழைப் புடன் வரவிருக்கும் மாண்ட்ரேக் லினக்ஸ் 9.0 வெளியீட்டில் தமிழைச் சாத்தியப்படுத்தியிருக் கிறார்கள். மாண்ட்ரேக் லினக்ஸ் பல புத்தகக் கடைகளிலும் மின்சாதனங்கள் கடைகளிலும் விற்கப் படுகிறது. இணையத்தில் அவர்களது மின்வணிகத் தளத்தின் மூலமாகவும் கிடைக்கிறது. மற்ற எல்லா லினக்ஸ் வெளியீடுகளைப் போலவும், மாண்ட்ரேக்கும் அவர்களது இணையதளத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக இறக்கிக்கொள்ளக் கிடைக்கிறது. (அதன் அளவு 3 குறுந்தகடுகள் - இறக்கிக்கொள்ள அதிக நேரமாகலாம்). ஆனால் கட்டுப்படியான, குறைந்த விலையில் இதை வாங்குவதன் மூலம் தளையறு மென்கலன்களை எழுதும் நிரலர்களுக்கு நீங்கள் உங்கள் பங்கை அளிக்கிறீர்கள். வணிக ரீதியிலான இயக்குதளங்களை வாங்கினால் அதன் பின்னர் ஒவ்வொரு செயலிக்கும் நீங்கள் பணத்தைச் செலவிடவேண்டியிருக்கும்; ஆனால் பொதுவில் லினக்ஸ் வெளியீடுகள் எல்லாம் சராசரி இல்லத் தேவைகளுக்கும், சிறிய அலுவல் தேவைகளுக்குமான அனைத்துச் செயலிகளையும் ஒருசேர உங்களுக்கு அளிக்கின்றன.

தமிழ் இடைமுகம் எப்படி உருவானது?

லினக்ஸை உருவாக்கும் தன்னார்வலர்கள் உல கெங்கிலும் பல நாடுகளில் இருக்கிறார்கள். அந்தவகையில் லினக்ஸை பல மொழிகளுக்கும் ஏற்றதாக வடிவமைப்பது அவர்களுக்கும் கட்டாய மானதாக இருக்கிறது. அவர்களது கூர்மையான வடிவமைப்பில் பயனர்களுக்கான இடைமுகத்தையும் (Graphic User Interface, GUI), அவர்களது கட்டளை வடிவங்களையும், இயக்குதளத்தின் மையத்திலிருந்து (கரு. Kernel) தனிப்படுத்துகிறார்கள். இது இயக்கு தளத்தின் அமைப்பைப் பற்றித் தெரியாதவர்கள்கூட அவர்களுக்கு ஏற்றவகையில் கட்டளைகளையும் குறும்படங்களையும் (icons) மொழிபெயர்க்க உதவு கின்றது. உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள் கட்டளைகளை அவர்களது மொழியில் மாற்றியமைக் கிறார்கள். பின்னர் ஒருசில தொகுப்புகளுடன் அது இயக்குதளத்துடன் முற்றாக ஒருங்கிணைக்கப் படுகின்றது. இதுதவிர ஒவ்வொரு மொழிக்கும் சிலத் தனிப்பயனாக்கங்கள் தேவை - உதாரணமாக, மொழிக்கான தொகுப்பி, விசைப்பலகை மேளாலர், தமிழில் உதவிக் கட்டுரைகள், போன்றவை. தமிழுக்கு அத்தகைய தேவைகளைப் பலர் பூர்த்தி செய்திருக் கிறார்கள். அப்பட்டியலில்; சிவராஜ், வசீகரன், தினேஷ் நடராஜா, சிவக்குமார், கோமதி, வெங்கட் ரமணன், நாகு சின்னச்சாமி, பிரபு ஆனந்த், சரவணன் போன்றோர் அடங்குவார்கள். இப்பட்டியலில் இன்னும் பலருக்கும் கட்டாயம் இடமுண்டு. லினக்ஸ் தன்னார்வலர்களைப் போலவே, தமிழ் லினக்ஸ்க்குத் தொண்டாற்றுபவர்களும் கனடா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, மலேஷியா, என உலகெங்கிலும் உள்ளார்கள். இவர்கள் தங்கள் நடவடிக்கைகளை இணையத்தின் மடலாடற்குழுக்கள் மூலமாக ஒழுங்கு படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்விடத்தில் கணினியில் தமிழ் பயன்பாடு களுக்குப் பலகாலமாகத் தொண்டாற்றிவரும் கல்யாணசுந்தரம், மணி மணிவண்ணன், முத்து நெடுமாறன், சுவடி இளங்கோ போன்றவர்களின் பங்களிப்பை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். இவர்களது ஆக்கங்கள் முழுத் தமிழ்க் கணினியை வடிக்கப் பேருதவியாக இருந்தன. உலகத் தமிழ்த் தகவல் தொடர்பு மையம் (உத்தமம்) தமிழ் லினக்ஸ் ஆக்கங்களுக்கு உதவியும் ஊக்கமும் அளித்து வருகின்றது. இதுதவிர சில வணிக நிறுவனங்களும் ஊக்கம் அளித்து வருகின்றன.

இதனால் என்ன நன்மை?

தமிழில் கணினி தோன்றியிருப்பதன் மூலம் நம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை எளிதில் அளவிட முடியாது. சிறு மடிக்கணினிகளிலிருந்து (Laptops) மாபெரும் அதிகணினிகள்வரை (Super computers) லினக்ஸை நம்பகமாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தலாம். மின்பிளவினால் பாதிக்கப்படும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இன்னும் 30 சதவீதத்தினர்கூட கணினியைப் பயன்படுத்த வில்லை. இந்நிலையில் கணினியின் பயன்பாடுகள் எல்லோரையும் அடைவதற்கு அவர்கள் பழகும் மொழியிலேயே கணினி அமைவது வாய்ப்பளிக்கும். லினக்ஸ் போன்ற அதிக விலையற்ற, திறந்த ஆணைமூலங்கள் அதை நாமே உருவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கின்றன. நமக்குக் கணினிகளை வடி வமைத்துத் தருவதற்கும் அதில் தேவையான செயற்பாடுகளை உருவாக்கவும் நாம் பிறநாட்டு வணிக நிறுவனங்களைக் கையேந்தி நிற்கத் தேவையில்லை. தமிழ் இடைமுகம் கொண்ட கணினி களை வடிவமைத்து விற்றும் அவற்றிற்கான சேவை களை வழங்கியும் பல வணிக நிறுவனங்கள் வளர்ச்சி யடைய மாபெரும் சாத்தியம் உள்ளது. இது முன்னர் குறிப்பிட்டது போல் விற்பனை வரிப் பத்திரங்கள், வாக்காளர் பட்டியல் போன்ற நமக்கான கருவிகளை நாமே ஆக்கிக் கொள்ள உதவும். பிற இந்திய மொழிகள் தமிழின் முன்னுதாரணத்தைப் பயன்
படுத்தி எளிதில் அவர்கள் மொழியிலும் கணினிகளை ஆக்கவியலும். இவ்வாறு நம்மக்களுக்கு ஏற்றவகை யில் நாம் தொழில்நுட்பங்களை மாற்றியமைக்கும் திறனை வளர்த்துக்கொள்ள, வருங்காலத்தில் புதுத் தொழில்நுட்பங்களை நாம் எளிதில் கையாளவியலும்.

வினக்ஸ் சக்தி குறைந்த கணினிகளிலும் சிறப்பாகச் செயல்பட வல்லது. இதைப் பயன்படுத்தி குறைந்த செலவில் பள்ளிகளுக்கான கணினி ஆய்வங்களை உருவாக்க முடியும். அரசாங்கத்தின் பயன்களுக்கும் கணினிகளை அதிக அளவில் பயன்படுத்த முடியும். திறந்த ஆணைமூலச் செயலிகள் பாதுகாப்பனவை, நமது அரசின் இறையாண்மைக்குப் பாதகம் இல்லாத வகையில் இவற்றை சிறப்பாகக் கையாளமுடியும். பல முன்னேறிய நாடுகள் தங்கள் அரசு அமைப்புகளில் லினக்ஸைப் பயன்படுத்தி வருகின்றன.

செப்டம்பர் இறுதிவாரத்தில் அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உலகத் தமிழிணைய மாநாடு நடக்கவிருக்கிறது. இதுசமயம் இந்திய மொழிகளிலேயே தமிழில் முழுமுதல் கணினி சாத்தியமாகி இருப்பது ஒரு போற்றத்தக்க சாதனை. இம்மாநாட்டில் இதனால் விளையக்கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து சுவாரசியமான கலந்துரையாடல்கள் தோன்ற இது வாய்ப்பளித்துள்ளது.

பின்குறிப்பு: தமிழ் கணினித் திரையோவியங்களை tamillinux.org இணையதளத்தில் காணலாம்.

தொடர்புள்ள சில இணையதளங்கள்

தளையறு மென்கலன் நிறுவனம் http://www.gnu.org

லினக்ஸைப் பற்றி மேலும் அறிய http://www.linux.org

தமிழில் லினக்ஸ் வளர்ச்சி குறித்து அறிய http://www.tamillinux.org

தமிழ் லினக்ஸ் மடலாடற்குழு http://groups.yahoo.com/tamilinix

மாண்ட்ரேக்ஸாப்ட் நிறுவனம் http://www.mandrakelinux.com/en

உலகத் தமிழ் தகவல் தொடர்பு மையம்

கலிபோர்னியாவில் நடக்கவிருக்கும் ஐந்தாம் உலகத் தமிழிணைய மாநாடு http://www.infitt.org/ti2002

வெங்கட்ரமணன்
தமிழ்லினக்ஸ்.அமை

© TamilOnline.com