வைஷ்ணவி ராம்மோகன் நாட்டியம் - பாராட்டத்தக்க அரங்கேற்றம்
ஒரு சில கலைஞர்களைத் தவிர ஏனய நாட்டியக் கலைஞர்கள் நம் மனதில் பதிவதில்லை. நமது நாட்டின் பாரம்பரிய நடனக் கலாச்சாரத்தில், கலை நுணுக்கத்திற்கும் நளினமான அசைவுகளுக்கும் என்றுமே வரவேற்பு குறைந்ததில்லை. இவற்றிக்கு மேலாக நாட்டியக் கலைஞரின் உணர்ச்சிபூர்வ பாவங்களை வெளியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. Louis B. Mayer அரங்கில் செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்ற வைஷ்ணவி ராம்மோகனின் பரத நாட்டிய அரங்கேற்றத்தில், இந்த இளம் கலைஞர் தனது நளினமான நடனத்தின் மூலம் நம்முள் ஒரு முத்திரையைப் பதித்தார் என்றால் அது மிகையாகாது. ஸ்ரீ க்ருபா டான்ஸ் கம்பெனியில் குரு விஷால் ரமணியிடம் கடந்த ஆறு வருடங்களாகப் பயின்று வருகிறார் வைஷ்ணவி. அவரது நிகழ்ச்சியில் இடம் பெற்றவை மிக சாதாரண நடையில் அமையப்பெற்ற பாடல்கள் அல்ல. சவாலானவை தான். தாளங்கள் ஆதி தாளம், மிஸ்ர சாபு தாளம், அட தாள வர்ணம் என்று பலவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

ஹம்ஸானந்தி ராகம் ஆதி தாளத்தில் அமைந்திருந்த புஷ்பாஞ்சலியில், நடைகள் சதுஸ்ர, திஸ்ர, கண்டம் என்று பலதரப்பட்டு இருந்தன. அவரது சிற்பம் போன்ற வெளிப்பாடுகள் பிரமாதம். இதற்கான பாடலை இயற்றியவர் மதுரை R. முரளீதரன். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யரின் "ஆனந்த நர்த்தன கணபதி" என்ற பாடல் இடம் பெற்றது. கணேசரின் ஆனந்த நடன அசைவுகளை புதிய உத்வேகத்தோடு நடனக்கலைஞரின் உற்சாகமும் சேர்ந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அடுத்து அமைந்த, ராகம் தாள மாலிகையில் இடம்பெற்ற ஜதீஸ்வரம், இதில் வைஷ்ணவி பவித்ரமான அங்க சுத்தி, அருமையான உடல் வளைவுகள், தோற்றங்கள் மற்றும் வேகம் ஆகியவற்றை பிரதிபலித்தார். நடனம் இந்தக் கலைஞருக்கு இயல்பாகவே இருப்பதுபோலத் தோன்றுகிறது. பரத நாட்டியத்தில் இவருக்கு நிச்சயம் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

அடா தாளத்தில் அமைந்த 45-50 பாத வர்ணம் எந்த ஒரு கலைஞருக்கும் சவாலாக அமைந்த ஒன்று. தீர்மானங்கள் மீது மிகவும் நுணுக்கமான கவனம் செலுத்தியதும், சட்டென்று மாறும் பலதரப்பட்ட உணர்ச்சிகளும் பார்வையாளர்களைப் பரவசப் படுத்தியது என்றால் அது மிகையாகாது. முரளீதரனின் ஒப்பற்ற பாடல்களுள் "சாம கானப்பிரியனே" பாடலும் ஒன்று. இந்தப் பாடலுக்கு விஷால் அமைந்திருந்த நடனம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தனஞ்ஜெயனின் துல்லியமான மிருந்தங்க இசையும், முரளீதரனின் உச்சரிப்புகளும் சேர்ந்து ஒவ்வொரு ஜதியையும் ரசிகர்கள் கை தட்டி வரவேற்கச் செய்தது.

இதனைத் தொடர்ந்து சிவ பெருமான் மீது ஒன்றும் கிருஷ்ணர் மீது இரண்டும், பாடல்கள் அமைந்தன. அம்புஜம் கிருஷ்ணாவின் தமிழ்ப் பாடல் ஒன்றும் இந்திப் பாடல் ஒன்றும் கிருஷ்ணர் மீது அமைந்திருந்தன. "கண்ணா வா மணி வண்ணா வா" என்ற பாடலுக்கு வைஷ்ணவி ஒரு சுட்டிக் குழந்தையாக மாறி அனைவரின் உள்ளங்களில் குடிகொண்டார். ஷியாம் கல்யாண் ராகத்தில் அமைந்த "ஹாத் கீ முரளி" என்ற இந்திப் பாடல், ஒரு அபூர்வ ராகத்தில் அமைந்திருந்தது. கிருஷ்ணரின் கையிலிருந்து புல்லாங்குழலைத் திருடி அதன் மீது மலர்களைச் சுற்றினார் வைஷ்ணவி. இந்த உயிரற்ற பொருள் இறைவனோடு இவ்வளவு நெருக்கமாக இருக்கிறதே என்று பொறாமையைத் திறம்பட வெளிப்படுத்தினார். வைஷ்ணவி இதனை அத்தனை தத்ரூபமாகச் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தூய்மையான நாட்டியமான தில்லானா, மீண்டும் ஒரு அபூர்வ ராகமான தில்லங் ராகம் கண்ட திருபுத தாளத்தில் அமைந்திருந்தது. வைஷ்ணவியின் பலதரப்பட்ட கால் அசைவுகள் மற்றும் சவாலான அம்சங்களை லாவகாமகச் செய்யும் திறன், பார்வைக்கு விருந்தாக அமைந்தது. "வைஷ்ணவி பல நிகழ்ச்சிகள் வழங்கிய பண்பட்ட நாட்டியக் கலைஞரைப் போல பலதரப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் தாளத்திற்கேற்ப அருமையான காலசைவுகள் கொண்ட அருமையான நிகழ்ச்சியை வழங்கினார். மேலும் அவர் ஒரு பிறவிக் கலைஞர்" என்று கோவையைச் சேர்ந்த ஒரு ரசிகர் கூறியது போல அவரது நிகழ்ச்சி அமைந்திருந்து.

அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி அவரை வாழ்த்தியது, அவரது திறமைக்கும், இக் கலை மீது அவர் கொண்டுள்ள காதலுக்கும் சான்றாக அமைந்தது. திருமதி விஷால் பரத நாட்டியத்திற்கு தனது முழு அர்ப்பணிப்பை வைஷ்ணவி மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். மதுரை R. முரளீதரனின் நட்டு வாங்கம் தான் இத்துறையில் சிறந்த கலைஞர்களுள் ஒருவர் என்பதைக் காட்டியது. R. தனஞ்ஜெயனின் மிருதங்கம் ரசிகர்களில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது, குறிப்பாக சிவ பெருமானின் உடுக்கை ஒசை. தனது வாசிப்பின் மூலம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வயலின் கலைஞர் G. சீதாராம சர்மா. பத்மா சேஷாத்ரி சகோதரிகள் ரோஷினி, ரந்தினியின் வாய்ப்பாட்டு, நிகழ்ச்சிக்கு பக்கபலமாக அமைந்தது.

© TamilOnline.com